Saturday, February 29, 2020

திருக்குறள் - வளையல்

திருக்குறள் - வளையல் 


பெண்கள் அணியும் ஆபரணங்களில் வளையலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த மெலிந்த, நீண்ட கைகளில் தவழும் வளையல்கள், அது தரும் மெல்லிய ஓசை...அதுவும் ஒரு சுகம் தான்.

ஆண்களைப் போல பெண்களுக்கு விரல் மட்டும் முன்கை சேரும் இடங்கள் ஆண்களை போல பருமனாக இருக்காது. எனவே, வளையல் எளிதாக கையில் போகும்.

இராமன் வந்து மணவறையில் வந்து அமர்ந்து இருக்கிறான். தோழிகள் சீதையை அழைத்து வருகிறார்கள். சீதைக்கு இராமனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். நேரில் எப்படி பார்க்க முடியும். வெட்கம் ஒரு புறம். எல்லோரும் இருக்கிறார்கள். தலை நிமிர்ந்து பார்த்தால் கேலி செய்வார்களோ என்ற அச்சம் மறு புறம்.

யாருக்கும் தெரியாமல், கையில் உள்ள வளையல்களை சரி செய்வது மாதிரி  கொண்டே இராமனை பார்த்து விடுகிறாள் (சைட் அடிப்பது என்று சொல்லலாமா?)

"கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."



எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.

கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்.


பழைய சினிமா பாடல் ஒன்று...இலக்கிய தரம் சற்றும் குறையாத ஒன்று...


சின்னவளை முகம் சிவந்தவளை

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு

என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு

பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்

பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ

இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்

நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்

மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ

அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ

இது கண்ணதாசன் காட்டும் வளையல்.

வள்ளுவர் காட்டும் வளையல் வேறு விதம்.

ஏதோ ஒரு காரணத்தால், தலைவன் தலைவியை விட்டு பிரிய வேண்டிய நிர்பந்தம். 

ஆனால், அவளோ அவன் நினைவாகவே இருக்கிறாள். அவன் பிரிந்த மாதிரியே இல்லை அவளுக்கு.  அவன் கூடவே இருப்பது போலவும், அவளை கொஞ்சுவதும் போலவும், கனவில் அவனுடன் வாழ்கிறாள்.

ஆனால், அவ்வப்போது நிஜமும் புரியாமல் இல்லை. அவனை காணாமல் தவிக்கிறாள். சாப்பிட பிடிக்கவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை.

எப்படா வருவான் என்று ஏங்குகிறாள்.

இப்படி அவனை நினைத்து ஏங்கி ஏங்கி அவள் மெலிந்து போகிறாள். அவள் அணிந்திருந்த  வளையல்கள் கையை விட்டு நழுவி கீழே விழுகின்றன.

"அவன் பிரிந்து போய் விட்டான் என்று அவன் சொல்லாவிட்டாலும், இந்த நெகிழ்ந்து விழும் வளையல்கள் சொல்லி விடுகின்றனவே " என்று அந்த வளையல் மேல் கோவிக்கிறாள்.


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்


துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு பிரிந்து போனதை

தூற்றா =  சொல்லாதா

கொல் = சந்தேகம்

முன்கை = முன்னங் கையில்

இறை = மணிக்கட்டு

இறவா நின்ற = கழல்கின்ற

வளை = வளையல்

ஒரு பக்கம் காதல், பிரிவு, ஏக்கம், தவிப்பு என்று எல்லாம் இருக்கிறது. இதன் அர்த்தம்  இன்னும் ஆழமாக புரிய வேண்டும் என்றால் கொஞ்சம் இலக்கணம்  படிக்க வேண்டும்.

இலக்கண அறிவு, இலக்கியத்தின் சுவையை மேலும் கூட்டும்.

தமிழில் உள்ள வினை சொற்களை மூன்றாக பிரிக்கலாம்.

பகுதி + இடை நிலை + விகுதி

அனைத்து வினை (செயல்) சொற்களுக்கும் இது பொருந்தும்.

இதில்

பகுதி என்பது , செயலை குறிக்கும்.

இடை நிலை என்பது காலத்தைக் காட்டும்

விகுதி என்பது பால், மற்றும் ஒருமை பன்மையை குறிக்கும்.

பகுதியையும், விகுதியையும் அப்படியே வைத்துக் கொண்டு, இடை நிலையை மட்டும் மாற்றினால் காலம் மாறிவிடும்.

உதாரணாமாக

வந்தான் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

வா = பகுதி (வ என குறுகியது விகாரம்).
த் = இறந்த கால இடை நிலை (ந் என மாறியது விகாரம்)
ஆன் = ஆண் பால், படர்க்கை, ஒருமை வினை முற்று


இதில் உள்ள த் என்ற இடை நிலையை மட்டும் தூக்கிவிட்டு 'வ்'  என்று போட்டால் அது  எதிர்காலமாக மாறி விடும்.

வருவான்

வா = பகுதி (வ என குறுகியது விகாரம்).
வ்  = எதிர் கால இடை நிலை
ஆன் = ஆண் பால், படர்க்கை, ஒருமை வினை முற்று


சரியை, சந்தம், விகாரம் என்று சில விஷயங்கள்  இருக்கிறது. ரொம்ப மண்டையை உடைக்க வேண்டாம்.

நிகழ் காலம் காட்டும் இடைநிலை கிறு , கின்று , ஆநின்று

என்ற மூன்று சொற்கள் உள்ளான்.

வருகின்றான் (கின்று)
சாப்பிடுகிறான் (கிறு)


இதில் ஆநின்று என்ற இடை நிலை தற்கால தமிழில் புழக்கத்தில் இல்லை.

அதை விட்டு விட்டோம். காலப் போக்கில் அதன் பயன்பாடு மறைந்து விட்டது.

இப்போது குறளுக்கு வருவோம்.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

இறவா நின்ற வளை

"ஆநின்று" என்ற இடை நிலை நிகழ் காலத்தை குறித்து நின்றது.

என்ன அர்த்தம்.

வளையல் நழுவி கீழே விழுந்து கொண்டே இருக்கிறது. அதை கீழே விழுந்து விடாமல் அவளும்  மேலே இழுத்து விட்டுக் கொண்டே இருக்கிறாள்.

கீழே விழுந்தால் என்னவாம்? எடுத்து அலமாரியில் வைத்து கொள்ளலாம் தானே.

அது அல்ல.

அவன் போட்ட வளையல். கையைப் பிடித்து, மென்மையாக, முகத்தைப் பார்த்துக் கொண்டே, கொஞ்சிக் கொண்டே போட்டு விட்ட வளையல்.  அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. எனவே, அது கையை விட்டு கழன்று கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள்.

இரண்டாவது, ஒரு வேளை வளையல் நெகிழ்ந்து கீழே விழுந்து விட்டால், ஊரார்  என்ன சொல்லுவார்கள் "பாவம் இந்த பிள்ளையை இப்படி தவிக்க விட்டு விட்டு  அவன் பாட்டுக்கு வேலை அது இது னு ஊர் சுத்தக் கிளம்பிட்டானே..." என்று அவனை குத்தம் சொல்லுவார்கள். மற்றவர்கள் அவனை  தூற்றுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே, தான் மெலிந்தாலும், வளையல் நெகிழ்ந்து கீழே விழாமல் பார்த்துக் கொள்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும் !

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_29.html

1 comment:

  1. என்ன ஒரு அற்புதமான blog கட்டுரை!

    முதலில் கம்ப ராமாயணத்தில் சைட் அடிப்பது அருமை.

    அதை ரசித்து முடிக்குமுன், கண்ணதாசனின் மயக்கவைக்கும் பாடல். இந்தப் பாடலில் இவ்வளவு இனிய சாறு இருக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன். அதை படித்தவுடன் Youtube-இல் MGR, JJ நடித்த அழகுடன், TMS சுசீலா அம்மா பாடிய இனிமையை ரசித்தேன்.

    அது முடித்தவுடன், திருக்குறளின் இனிமை. அதற்கு எழுதிய உரையில், "கீழே விழுந்தால் என்னவாம்? எடுத்து அலமாரியில் வைத்து கொள்ளலாம் தானே" என்பதைப் படித்தவுடன், வாய் விட்டுச் சிரித்து விட்டேன். அதிலும் கடைசி இரண்டு பத்திகள் அருமையிலும் அருமை, இனிமையிலும் இனிமை!

    நடுவிலே கொஞ்சம் இலக்கணப் பாடம் வேறே!

    நெஞ்சை நெகிழ வைத்த blog. நீண்ட காலத்துக்கு அப்புறம், கடவுள் கிடவுள் என்று இல்லாமல், வாழ்க்கையை ரசிக்க வைத்த கட்டுரை. எழுதியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete