Sunday, March 1, 2020

கம்ப இராமாயணம் - கூசிக் கூசி இவை இவை கூறினான்

கம்ப இராமாயணம் - கூசிக் கூசி இவை இவை கூறினான் 


தான் ஆசைப்படுவது சரி அல்ல என்று இராவணனுக்குத் தெரியும். என்ன செய்ய? ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. எப்படியாவது சீதையிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்து விடு என்று அவன் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.

தவறு என்று அறிவு சொல்கிறது.

அது கிடக்கட்டும், நீ போய் கேள் என்று மனம் சொல்கிறது.

இரண்டுக்கும் நடுவில் கிடந்து தள்ளாடுகிறான்.

ஆசை ஒரு பக்கம், இப்படி ஒரு தவறான செயலை செகிறோமே என்ற நாணம் ஒரு புறம்...மிகுந்த கூச்சத்துடன் சீதையை அணுகுகிறான்....

பாடல்

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான்.

பொருள்


ஈசற்கு ஆயினும் = சிவனே என்றாலும்

ஈடு அழிவுற்று = இணை இல்லாத

இறை = பெருமிதம், பெருமை

வாசிப்பாடு அழியாத  = கொஞ்சம் கூட குறையாத

மனத்தினான் = மனத்தை உடையவன்

ஆசைப்பாடும் = ஆசை ஒரு பக்கம்

அந்நாணும் = நாணம் ஒரு பக்கம்

அடர்த்திடக் = சேர்ந்து நெருக்கிட

கூசிக் கூசி  = கூச்சத்துடன்

இவை இவை கூறினான். = இவற்றை கூறினான்

இராவணன், சீதையிடம் பேசப் போகிறான்.

ஒரு தகாத வேண்டுகோளை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பேச்சு.

பேச்சு ஒரு கலை.  உணர்சிகளை வார்த்தையில் அழகாக வடிப்பது என்பது  கடினமான வேலை.

கம்பனின் தமிழ் எப்படி இருக்கிறது என்று பார்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post.html

2 comments:

  1. தகாத வழியில் உந்தப் படுகிற ராவணனின் மனம் படும் அவஸ்தையை அழகாக வர்ணித்து இருக்கிறார்.

    ReplyDelete
  2. முதல் இரண்டு வரிகளில், "சிவனுக்கே ஈடு கொடுக்க வேண்டி வந்தாலும் தனது பெருமிதம் அழியாதவன்" என்று சொல்லி, அப்படிப்பட்ட பெருமை உள்ளவனுக்கே ஆசையும் நாணமும் போராடுவதை மூன்றாவது வரியில் சொன்னார். அப்படிப்பட்டவனுக்கே அந்தக் கதியானால், நாமெல்லாம் எம்மாத்திரம்?!

    ReplyDelete