Monday, March 9, 2020

திருக்குறள் - இயல்பான இல்வாழ்க்கை

திருக்குறள் - இயல்பான இல்வாழ்க்கை 


புலன்கள் எதற்கு இருக்கின்றன? இன்பங்களை அனுபவிக்கத்தானே? இயற்கை அதற்க்காகத்தானே புலன்களை தந்து இருக்கிறது.

சுவையான உணவை இரசித்து உண்பது, இனிய இசையை கேட்பது, நல்ல நறுமணத்தை நுகர்வது, இயற்கையை, அழகை பார்த்து இரசிப்பது என்று இதற்கெல்லாம் தானே புலன்கள் இருக்கிறது.

அதை விட்டு விட்டு, சாப்பிடாதே, தூங்காதே, இசை கேட்காதே, பாட்டு பாடாதே என்று எப்பப் பார்த்தாலும் புலன்களை கட்டுப் படுத்து என்று கட்டளை போட்டுக் கொண்டே இருந்தால் வெறுப்பு வருமா வராதா?

"என்னய்யா இது, மனுஷனை சந்தோஷமா இருக்கவே விட மாட்டேன் என்கிறார்களே..." என்று ஒரு சலிப்பு வரும்.

வள்ளுவர் சொல்கிறார், "இல்வாழ்க்கையை அனுபவி. அந்த இல் வாழ்க்கைக்கு ஒத்த இயல்போடு அதை அனுபவி" என்கிறார்.  அப்படி செய்பவன், மற்ற அனைத்து முயற்சி செய்பவர்களை விட உயர்ந்தவன் என்கிறார்.



பாடல்


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

பொருள்


இயல்பினான்  = இயல்பாக

இல்வாழ்க்கை = குடும்ப வாழ்க்கை

வாழ்பவன் என்பான் = வாழ்பவன் என்பவன்

முயல்வாருள் = துறவறம் , வீடு பேறு போன்றவற்றிற்கு முயல்வாருள்

எல்லாம் தலை = தலையானவன் , முதன்மையானவன்

இயல்பினான் ...இயல்பாக இருக்க வேண்டும். இயற்கைக்கு புறம்பாக செல்லக் கூடாது. எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் இருக்க வேண்டும்.அது தான்  இயல்பு. மூக்கு முட்ட உண்பது, அளவுக்கு அதிகமாக தூங்குவது..என்பதெல்லாம் இயல்பான செயல் அல்ல. அனைத்து  இன்பங்களையும்  அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள். அற வழியில் செல்வது இயல்பான வாழ்க்கை.  அறம் அல்லாத வழியில் செல்வது (திருட்டு, கொள்ளை முதலியன)  இயல்பு அல்லாத வாழ்க்கை.

இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு இன்பமயமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பவன்,  துறவி, சாது, சாமியார், போன்ற ஸ்வர்கம், வீடு பேறு போன்றவற்றை  அடைய "முயல்வாரை" விட உயர்ந்தவன்.

காரணம் என்ன?

புலன்களை அடக்குவது இயல்பான செயல் அல்ல.

மூக்கு எதற்கு இருக்கிறது? மூச்சு விட. நான் மூச்சு விட மாட்டேன், மூக்கை அடைத்துக் கொள்வேன் , மூச்சை அடக்கி, பிராணாயாமம் செய்து சுவர்க்கம் போகிறேன்  என்று முயல்பவரை விட, இல்லறத்தான் தலையானவன்.

அது மட்டும் அல்ல,

சுவர்க்கம் போகிறேன், வீடு பேறு அடையப் போகிறேன், இறைவனை அடையப் போகிறேன் என்று  எல்லோரும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பந்தயத்தில் முதலாவது  வருபவன் இல் வாழ்வான்.

"எல்லாம் தலை" என்றார். எல்லாரையும் விட அவனே முந்தி நிற்பான்.

அப்ப , எந்த வழி சிறந்த வழி? இல்லறமா? துறவறமா?

வள்ளுவர், போட்டு குழப்புறாரே...பற்றை விடு என்கிறார், பற்றுக பற்றற்றான் பற்றினை என்கிறார்....அப்புறம் அனுபவி இராஜா அனுபவி னு பாட்டு பாடுறார்...கொஞ்சம் குழப்பமாக இல்லை?

இல்லை. ஒரு குழப்பமும் இல்லை.

எப்படி என்று பார்க்க, நீங்கள் தயாரா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_9.html

1 comment: