Friday, March 6, 2020

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன்

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன் 


யாரைக் கேட்டாலும், "நேரமே இல்லை" என்பதே பதிலாக இருக்கிறது.

எதுக்குமே நேரம் இல்லை. ஆனால்,எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் அறிவியல் , நேரத்தை சேமிக்க புது புது சாதனங்களை தந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம், மனிதன் நேரம் இல்லை என்று தவித்துக் கொண்டு இருக்கிறான்.

இருக்கிற அதே நேரத்தில் பில் கேட்ஸ், இளைய இராஜா, என்று சிலர் மிகப் பெரிய பேரும் புகழும் படைக்கிறார்கள். நமக்கும் அதே அளவு நேரம் தான் இருக்கிறது. ஏன், நம்மால்  அந்த அளவு பெரிய சாதனைகள் செய்ய முடியவில்லை?

திருநாவுக்கரசர் சொல்கிறார்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை.  என்ன செய்யப் போகிறோம், என்ன சாதிக்கப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லாத வாழ்க்கை. இன்று இப்படி, நாளை எப்படியோ என்று வாழ்க்கையை  ஒவ்வொரு நாளாக கழிப்பது. எப்படி, எதையும் அடைய முடியும் ?


நமக்கு இருக்கும் சொற்ப வாழ்நாளில்,கொஞ்சம் சிறு பிள்ளை வயதில், ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. பின்னாளில் வயதாகி, கண் தெரியாமல், காது கேட்காமல் வயோதிகத்தில் கொஞ்சம் போய் விடுகிறது. நடுவில் நாட்களில் காதல், கல்யாணம், பிள்ளை வளர்ப்பு என்று பெரும் பகுதி போய் விடுகிறது.  இதையெல்லாம் விடுத்து, இருக்கிற நேரத்தில் நல்ல குறிக்கோள் இல்லாமல்  ஏனோ தானோ என்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போவது சரிதானா?

பாடல்

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.


பொருள்

பாலனாய்க் கழிந்த நாளும் = சிறு பிள்ளையாய் கழிந்த நாட்களும்


பனிமலர்க் கோதை மார்தம் = குளிர்ந்த மலர் போன்ற பெண்கள் தம்

மேலனாய்க் கழிந்த நாளும் = அவர்கள் பின் சென்றும், திருமணம் முடித்து அவர்களோடு செலவழித்த நாட்களும்

மெலிவொடு மூப்பு வந்து = மெலிந்து, மூப்பு வந்து வயதாகி

கோலனாய்க் கழிந்தநாளுங் = கோல் ஊன்றி கழித்த நாட்களும்

குறிக்கோளி லாதுகெட்டேன் = எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் கெட்டேன்

சேலுலாம் = மீன்கள் உலாவும்

பழனவேலித் = நீர் நிறைந்த நிலங்களை வேலியாகக் கொண்ட

திருக்கொண்டீச் சரத்துளானே. = திரு கொண்டீச்சரம் என்ற தலத்தில் உள்ளவனே

வாழ்வில் ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டும். அதை நோக்கி தினம் நகர வேண்டும்.

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் என்று வாழ்வது ஒரு வாழ்க்கையா?

திருமணம் முடிக்காமல், பிள்ளை குட்டிகள் இல்லாத, திருநாவுக்கரசர் சொல்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால், நாம் எல்லாம் .... என்ன சொல்ல?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_15.html

2 comments:

  1. மிக நல்ல பாடல். எப்படியோ குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை போகிறது. ஆனால், குறிக்கோள் என்பது எதுவாக இருக்கவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. பிறருக்கும் பயன்பட வாழவேண்டும்;இறைவன் திருவடிகளைச் சிக்கெனப் பற்றிக் கொள்ள வழி தேட வேண்டும்.

      Delete