Sunday, February 2, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியேன் செய்யும் விண்ணப்பமே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியேன் செய்யும் விண்ணப்பமே 


ஞானம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையின் தரிசனமா? ஏதோ பள்ளி, கல்லூரியில் கொஞ்ச நாள் படித்தோம். அப்புறம் கொஞ்சம் புத்தகங்கள் வாசித்து இருப்போம். நம் மொத்த ஞானமும் அதில் இருந்து வந்ததுதான். அனுபவ ஞானம் என்பது மெல்லமாக வருவது. ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது. அதை பெரிதாக கொள்ள முடியாது. நாம் பெற்ற ஞானம் மிக மிக சிறியது. அதை வைத்துக் கொண்டு நாம் ஏதோ பெரிய ஞானி போல் நினைத்துக் கொள்கிறோம்.

அந்த சொற்ப ஞானத்தை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல் பேசுகிறோம், செய்கிறோம். நம்மை விட கொஞ்சம் குறைவாக தெரிந்தவர்களை ஏளனம் செய்கிறோம்.

சரி, நம் ஒழுக்க முறைகளாவது சரியாக இருக்கிறதா என்றால் அதுவும் சரி இல்லை. நம் தேவைக்கு ஏற்ப ஒழுக்க முறைகளை மாற்றிக் கொள்கிறோம். கேட்டால் "வாழ்க்கையோடு அனுசரித்துப் போக வேண்டும் " என்று எல்லாவற்றையும் நம் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்கிறோம்.

அகத் தூய்மைதான் இல்லை. புறத் தூய்மையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அழுக்கான உடம்பு. வியர்வை சுரந்து கொண்டே இருக்கும் உடல்.

இந்தப் பிறவி மேல் என்ன ஆசை? பொய்யான ஞானம், பொல்லாத ஒழுக்க முறை, அழுக்கான உடம்பு. மீண்டும் பிறந்தாலும் இது தான் கிடைக்கப் போகிறது. இதில் இருந்து விடு பெற முடியாதா?

நம்மாழ்வார் வருந்துகிறார். இந்தப் பிறவியால் என்ன பயன்? இனியும் இது தொடராமல் இருக்க அருள் செய்வாய் என்று பெருமாளை வேண்டுகிறார்.

பாடல்


பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே. (2478)

பொருள்

பொய்ண்ணின்ற = பொய் நின்ற. பொய் நிறைந்த

ஞானமும்  = ஞானமும்

பொல்லா வொழுக்கும் = பொல்லாத ஒழுக்கமும்

அழுக்குடம்பும், = அழுக்கு உடம்பும்

இந்நின்ற = இப்படி இருக்கும்

நீர்மை  = இயல்பு

இனியா முறாமை = இனி அமையாமை உறாமை, இனி அமையாமல்

உயிரளிப்பான் = உயிர்களை அளிப்பவன்

எந்நின்ற யோனியு மாய்ப் = பல பிறப்புகளை கொண்டு

பிறந் தா (ய்) = அவதாரம் செய்தாய்

யிமை யோர்தலைவா = இமையோர் தலைவா, தேவர்களின் தலைவனே

மெய்நின்று கேட்டரு ளாய் = என்னுடைய உண்மையான (விண்ணப்பத்தை) கேட்டு அருளாய்

அடியேன் = அடியேன்

செய்யும் = செய்யும்

விண்ணப்பமே. = விண்ணப்பமே


இது தான் உண்மையான விண்ணப்பம். எனக்கு பணம் கொடு, என் பிள்ளைக்கு நல்ல வேலை வாங்கி கொடு என்பதெல்லாம் எந்த விண்ணப்பத்தில் சேரும்   நாம் யோசித்துக் கொள்ளலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post.html

2 comments:

  1. முதற்கண் நம்மை சரியாக அறிந்துகொண்டால் தான் பகவானிடம் என்ன விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை ஆழ்வார் தெளிவுற கூறியுள்ளார்.
    பொய்யானதும் போதாத அறிவும்,கெட்ட நடத்தையும்,மாசு பட்டுள்ள உடம்பும் மனமும் கொண்டு மீளா பிறப்பு இறப்பு தளைகளில் உழலும் நம்மை சரியாக புரிந்து கொண்டு ,பகவானிடம் நம்மை உய்விக்க வேண்டுவதின் அவசியத்தை . அழகுற சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. இறைவனிடம் வேண்டுவது இருக்கட்டும். இந்தப் பாடலைப் படித்தபின் ஒரு மன அடக்கம் வந்ததாலே போதும்.

    ReplyDelete