Wednesday, February 12, 2020

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


"கொடுங் கூற்றுக்கு இரையாகி மாள்வேன் என்று நினைத்தாயோ" என்று இடுப்பில் கை வைத்து காளியிடம் பார்தி கேள்வி கேட்கிறான் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

காளி கேட்டிருப்பாள்..."உனக்கு எப்படித் தெரியும் நீயும் அப்படி ஒரு வேடிக்கை மனிதராய் மாறமாட்டாய் " என்று?

பாரதி: எனக்குத் தெரியும் ஏன் என்றால், நான் உன்னிடம் சில வரங்கள் கேட்பேன். அவற்றை நீ எனக்குத் தருவாய். அதன் மூலம் நான் மற்ற மனிதர்களை போல ஆக மாட்டேன்

காளி : அப்படி என்ன வரங்கள் கேட்கப் போகிறாய்?

பாடல்

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

எளிய பாடல். எனவே அருஞ்சொற் பொருள் எழுதவில்லை.

இந்து மதம் மூன்று விதமான கர்மங்களைப் பற்றி பேசுகிறது.


முன் பிறவியில் செய்து, அப்போது தீர்க்காமல் தொடர்ந்து வருவது.  இதை சஞ்சித கர்மம் என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிறவியில் செயல்படத் தொடங்கும் வினைகள். இதற்கு பிராரப்த கர்மம் என்று பெயர்.

இந்த இரண்டும் சேர்ந்து, இந்தப் பிறவியில் கழிக்காமல் அடுத்த பிறவிக்கு கொண்டு செல்வது. இதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர்.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான்" என்பார் மணிவாசகர்.


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி 

என்பது சிவபுராணம்.




இந்தப் பிறவியில் கர்மம் செய்யாமல் இருந்து விடலாம். முன்பு செய்த பழிக்கு என்ன செய்வது?

"முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோள்களும்" என்பார் அருணகிரி.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே



நமக்கு தெரியக் கூடத் தெரியாது.

எனவே பாரதி முதலில் அதை வேண்டுகிறான்


"என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -"

இனியும் அது தொடர கூடாது என்று.



"இனி என்னைப் புதிய உயிராக்கி "


எப்போதும் பழமையிலேயே கிடந்து உழல்கிறோம். பழைய பஞ்சாங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். வேதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது,  புராணத்தில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பாரதி சொல்கிறான்,  "என்னை உயிராக ஆக்கி" என்று.

அடுத்தது,

" எனக்கேதுங் கவலையறச் செய்து -"


கவலை அறவே இல்லாமல் செய்து விடு என்கிறான்.

கவலை இல்லாமல் எப்படி இருப்பது?


"மதிதன்னை மிகத் தெளிவு செய்து -"

அறிவு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் அனைத்து கவலைகளுக்கும் காரணம். குழப்பமே எல்லா கவலைகளுக்கும் காரணம். மதி தெளிவாகிவிட்டால்  கவலை தீர்ந்து விடும்.


என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

கவலை போனால் மட்டும் போதாது. அதோடு சேர்ந்து சந்தோஷமும் போய் விட்டால்  என்ன செய்வது? 

என்னவே, கவலை போகட்டும், சந்தோஷம் இருக்கட்டும் என்று வேண்டுகிறான். 

ஆண்டவனிடம் இப்படி அதிகாரமாக கேட்கலாமா?  ஒரு பணிவு வேண்டாம்? 
பக்தி வேண்டாம்?

பாரதியைப் போல ஆண்டவனிடம் அதட்டிக் கேட்டது யாராவது உண்டா ? 

நாளை சிந்திப்போம் அது பற்றி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_12.html

4 comments:

  1. அருமையான விளக்கம். காளியிடம் பாரதியாரின் தைரியமான கேள்விகள் ஒரு வித பக்தி கலந்த ஸ்வாதீனத்தில் என தோன்றுகிறது.

    ReplyDelete
  2. "மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்" என்று அருணகிரி சொல்கிறாரே....தமிழிலில் ஒருமையில் தொடங்கினால் ஒருமையில் தானே முடிக்க வேண்டும். முருகா என்று ஒருமையில் தொடங்கி நாமங்கள் என்று பன்மையில் முடிக்கிறாரே....அருணகிரி தவறு செய்ய மாட்டார். அவர் தமிழின் அதிபதியான முருகக் கடவுளின் அருள் பெற்றவர்......அதன் உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும் ..அது என்ன என்று தெரியப்படுத்துகள் ஐயா ........

    ReplyDelete
    Replies
    1. முருகா...முருகா ...முருகா ...எனும் நாமங்கள். ஒன்றல்ல பல முறை சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லி இருப்பாரோ என்னவோ. இல்லை என்றால், இலக்கண வழு அமைதி என்று கொள்ள வேண்டியதுதான். மெய்யா விமலா விடை "பாகா" என்று மணிவாசகர் கூறியது போல. பொன்னார் மேனியனே புலித் தோலை "அரைக்கசைத்து " என்று சுந்தரர் கூறியது போல.

      Delete
    2. இரகுராமன்December 11, 2023 at 11:48 AM

      அருள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இதற்கு அழகான விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
      சுருக்கமாக சொல்வதனால் முருகன் என்று அழைத்தாலே அது முருகன் குமரன் குகன் என்னும் மூன்று முக்கிய முருக நாமாக்களையும் குறித்து விடும். ஆகையினாலே முருகா என்னும் நாமங்கள்.

      Delete