திருக்குறள் - இல்வாழ்க்கை
மீண்டும் திருக்குறளுக்குப் போவோம்.
இல் வாழ்வான் கடமையாக பதினோரு கடமைகளை சொல்லிவிட்டார்.
இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதே நமக்கு வேலையா? இதுக்கு எதுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்? நமக்கென்று ஒரு இன்பம் கிடையாதா என்று கேள்வி எழலாம்.
வள்ளுவர் சொல்கிறார்.
பாடல்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
பொருள்
அன்பும் = அன்பும்
அறனும் = அறமும்
உடைத்தாயின் = இருந்தால்
இல்வாழ்க்கை = இல்லற வாழ்க்கை
பண்பும் பயனும் அது = பெற்ற பண்பும் பயனும் அது
இது என்ன ஒண்ணும் புரியலையே. அன்பு, அறன் , பண்பு, பயன் னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் போறார்.
சிந்திப்போம்.
பண்பு என்பது குணம். பண்புள்ள மனிதன் என்றால், நல்ல குணம், பழக்க வழக்கம் உள்ள மனிதன் என்று அர்த்தம்.
பண்பு என்பது இயற்கையாக இருக்க வேண்டும். எப்போதும் இருக்க வேண்டும்.
அவர் வெள்ளிக் கிழமை தோறும் உண்மை பேசுவார், செவ்வாய் கிழமை இலஞ்சம் வாங்க மாட்டார் என்று சொன்னால் அது அவர் பண்பைக் காட்டாது.
உயிரே போனாலும், ஒரு காசு ஒருத்தர் கிட்ட இருந்து இலஞ்சமா வாங்க மாட்டார் என்று சொன்னால், அது அவரின் நேர்மையான பண்பைக் காட்டும்.
அது போல,
இல்லறத்தின் பண்பு எதுவாக இருக்க வேண்டும் என்றால், அன்பு.
இல்லறத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்வதே அந்த இல்லறத்தின் பண்பாக இருக்க வேண்டும்.
கணவன், மனைவி மேல்.
மனைவி, கணவன் மேல்.
பெற்றோர் பிள்ளைகள் மேல், பிள்ளைகள் பெற்றோர் மேல், சகோதர சகோதரிகள், மாமா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா , பேரன், பேத்தி , மருமகன், மருமகள் என்று குடும்பத்தில் ஒருவர் மீது மற்றவர் அன்பு செலுத்துவதே வேலையாக இருக்க வேண்டும்.
அது ஒரு அன்பான குடும்பம் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். பார்த்தால் தெரிய வேண்டும்.
குடும்பத்தில் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.
அன்போடு இருங்கள். அதுதான் குடும்பப் பண்பாக இருக்க வேண்டும்.
அந்த குடும்பம் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை போட்டுத் தள்ளலாமா? ஊரை அடித்து உலையில் போடலாமா?
இல்லை, குடும்பத்துக்குள் அன்பு இருக்க வேண்டும்.
குடும்பம், வெளி உலகத்தோடு அற வழியில் நிற்க வேண்டும்.
அன்போடு இருப்பதின் பயன் என்ன என்றால், அற வழியில் செல்வது.
ஒரு காரியம் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் வேண்டாமா?
அன்பான இல்லறத்தின் பயன், அறம்.
அறம் என்றால் என்ன என்பதை முந்தைய மூன்று குறள்களில் சுட்டிக் காட்டினார்.
இயல்பான மூவர், தென் புலத்தார், தெய்வம், ஒக்கல், விருந்து, துறந்தார், தான் என்று இவர்களோடு அறவழியில் ஈட்டிய பொருளை பகுத்து உண்டு வாழ்வது இல் + அறம் = இல்லறம்.
அன்போடு இருப்பது , குடும்பத்தின் பண்பு.
அதன் பயன், அற வழியில் செல்வது.
வீட்டில் அன்பும் இருக்க வேண்டும், அறமும் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் அது பண்பாகவும், பயனாகவும் இருக்கும்.
இப்படி இல்லறம் நடத்தினால் போதுமா ? அப்புறம் இந்த துறவறம், வீடு பேறு , சொர்க்கம், இறைவன் திருவடி என்றெல்லாம் சொல்கிறார்களே அதை எல்லாம் எப்படி அடைவது?
இதையே செய்து கொண்டிருந்தால், அதை எப்போது அடைவது?
கேள்வி வருமா இல்லையா?
https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_26.html
நன்றாக விளக்கினீர்கள். நன்றி
ReplyDeleteஅருமை
ReplyDelete