Tuesday, February 4, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?


திருமணம் செய்வது  என்னவோ உடல் இன்பத்துக்கும், சம்பாதிக்க ஒருவர், சமைக்க ஒருவர் என்று வைத்துக் கொண்டு நாட்களை ஓட்டவோ அல்ல.  திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பதினோரு கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால் திருமணம் செய்து கொள் என்கிறார் வள்ளுவர்.

அதில் முதல் மூன்று கடமை பற்றி முதல் குறளில் கூறுகிறார்.

பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் = இல்லத்தில் இருந்து வாழ்வான்

என்பான் = எனப்படுபவன்

இயல்பு உடைய = இயற்கையான

மூவர்க்கும் = மூன்று பேருக்கும்

நல்லாற்றின் = நல்ல வழியில்

நின்ற துணை. = துணை நிற்பான்

யார் அந்த மூன்று பேர்? அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? ஏன் உதவி செய்ய வேண்டும் ? நான் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு எதற்கு உதவி செய்டய வேண்டும்?

இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழும் அல்லவா? எப்படி விடை காண்பது?  குறளில் அவ்வளவுதான் இருக்கிறது.

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரை இருக்கிறதே, அற்புதம். அந்த உரை இல்லாமல், நம்மால் இந்த குறளை புரிந்து கொள்ளவே முடியாது.

அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

யார் அந்த மூன்று பேர்?

தமிழர்கள் வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள்.

பிரம்மச்சரியம்
இல்லறம்
வானப்ரஸ்தம்
துறவறம்

என்ற நாலு நிலைகள்.

இதில் இரண்டாவது நிலை இலவாழ்க்கை. இல்வாழ்வான் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

புரிகிறதா யார் அந்த மூவர் என்று?

பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவன், துறவறம் மேற்கொண்டவன். இந்த மூன்று பேருக்கும் இலவாழ்வான் உதவி செய்ய வேண்டும்.


பிரமச்சாரி என்பவன் திருமணம் முடிப்பதற்கு முந்தைய நிலையில் உள்ளவன். படித்துக் கொண்டு இருப்பவன்.

வானப்ரஸ்தம் என்பது, இல்லற வாழ்வில் இருந்து ஓய்வு பெரும் காலம். குடும்பப் பொறுப்பை மகன்/மகளிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு தேவைப் படும் போது உதவி செய்து கொண்டு, தினசரி வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பது. துறவறம் என்பது வீடு வாசலை துறந்து, கானகம் செல்வது.

மூணு பேர் தெரியுது...அது என்ன இயல்புடைய மூவர்?

அப்படினா, இயற்கையாக அந்த நிலைகளில் உள்ளவர்.

அதாவது, படிக்கும் வயதில் பிரம்மச்சாரியாக இருப்பவன். நான் 60 வயது வரையிலும்  கல்யாணம் பண்ணாமல் இருப்பேன் என்று ஒருவன் இருந்தால், அவன்  இயல்பான பிரமச்சாரி அல்ல. அவனுக்கு ஏதோ குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம்.  அதே போல், கல்யாணம் முடிந்த ஓரிரு வருடங்களில் ஒருவன்  துறவியாகப் போகிறேன் என்று கிளம்பினால் அவன் இயல்பான துறவி  அல்ல. அவர்களைப் போன்றவர்களை விட்டு விட்டு, இயற்கையாக  அந்தந்த  நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரி இயல்புடைய மூவர் யார் என்று தெரிகிறது.


இந்த "நல்லாற்றின்" நின்ற துணை என்று சொல்கிறாரே,  அதுக்கு என்ன அர்த்தம்?

ஆறு என்றால் வழி. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள்.

நல்லாற்றின் என்றால், நல்ல வழியில் நிற்க துணை புரிய வேண்டும் என்கிறார்.

அதாவது, ஒரு பிரமச்சாரி வந்து, எனக்கு பசிக்கிறது, கொஞ்சம் உணவு தாருங்கள்  என்று கேட்டால், இல்லறத்தில் இருப்பவன் தர வேண்டும். மாறாக,  எனக்கு தண்ணி அடிக்க வேண்டும் போல இருக்கு, கொஞ்சம் பணம் தந்தாள் தாருங்கள் என்று கேட்டால் தர வேண்டாம்.  அது நல்ல வழி அல்ல.

நல்ல வழி என்றால் அவர்கள் அற வழியில் செல்ல உதவ வேண்டும். தவறான வழியில் செல்ல அல்ல. அவரவர்களுக்கு உரிய அற வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள அப்பா/அம்மா/மாமனார்/மாமியார் - வனப்ரஸ்தம் அடைந்தவர்கள்  அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்து, உடை போன்றவை அளிக்க வேண்டும்.  எனக்கு 4 மணி நேரம் டிவி சீரியல் பார்க்க வேண்டும் என்று   கேட்டால், அதற்கு உதவி செய்ய வேண்டியது  இல்லை. அது நல்லாற்றில் வராது.

சரி, யாரோ ஒரு ஏழை மாணவன் வந்து உதவி  கேட்டான், கொஞ்சம் பணம் கொடுத்தோம்...அவ்வளவுதானே என்றால் இல்லை.

அவன் நல்ல வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும் என்றால், அவன் தவறான வழியில் போவதை கண்டித்து தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

வீட்டில் வயதில் மூத்தவர்கள் தவறான ஒன்றை செய்வார்கள் என்றால் அதை கண்டித்து நிறுத்தும் அதிகாரம் உதவி செய்யும் இல் வாழ்வானுக்கு உண்டு.

துறவி ஒருவன் பணம் மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு அவற்றை தவறான வழியில் செலவழிப்பான் என்றால், அதை தடுக்கும் கடமையும் இல் வாழ்வானுக்கு உண்டு.  ஏதோ பணம் கொடுத்தோம், அதற்கப்புறம் எக்கேடும் கெட்டு போகட்டும் என்று விடச்சொல்லவில்லை.

சரி, எவ்வளவு உதவி செய்ய வேண்டும் என்று ஏதாவது வரை முறை இருக்கிறதா?

இருக்கிறது. அவர்கள் நோக்கம் நிறைவேற உதவி செய்ய வேண்டும். படிக்க உதவி கேட்டால், படித்து முடிக்க உதவி செய்ய வேண்டும்.


இது முதல் மூன்று கடமை.

மீதியும் வருகிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_4.html

5 comments:

  1. நல்ல விளக்கம்.நன்றி

    ReplyDelete
  2. பரிமேலழகரர் எழுதிய உரை இருக்கட்டும், நீங்கள் எழுதிய விளக்கம் மிக மிக அருமை, நன்றி

    ReplyDelete
  3. இல்வாழ்க்கை வாழ்பவர் மற்ற மூவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்தாம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் என்று பொருள் ஆகிறதல்லவா? நல்ல கருத்துதான்.

    "இயல்பு உடைய" என்பதன் பொருள் கொஞ்சம் உதைக்கிறது. பலபேர் பால சந்நியாசம் மேற்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் இயல்பை மீறியவர்களா?

    இந்தக் குறளுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி என் மனதில் எழுந்ததது: இந்த நான்கு வாழ்க்கைப் பகுதிகள் பெண்களுக்கும் பொருந்துமா?

    நன்றி.

    ReplyDelete

  4. பிரம்மச்சரியம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம் என்ற மூன்று நிலைகளில் உள்ளவர்களை இல்லறத்தவர் மட்டுகே பேண முடியும்.

    அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete