Tuesday, September 1, 2020

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன்

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன் 


கடவுள் போல் ஆக வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?

மாட்டார்கள்.

ஏன் என்றால், கடவுள் போல் நம்மால் ஆக முடியாது. எதுக்கு வீணா நேரத்தை வீணாக்குவானானேன் என்று இருந்து விடுவார்கள்.

இராமன் கடவுள் என்று சொன்னால், "அப்படியா, அப்படி என்றால் இராமன் செய்தை எல்லாம் நம்மால் செய்ய முடியாது.  கடவுள் எல்லாம் செய்வார். நம்மால் ஆகாது. நம்ம வேலையை பார்ப்போம்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால், இராமனும் நம்மைப் போல ஒரு மானிடனாக இருக்க வேண்டும். அதற்காகவே இராமனில் பல மனித குணங்களை ஏற்றிக் காட்டுகிறார்கள். "பார்த்தாயா, அவனும் உன்னைப் போலத்தான்" என்று காட்டுவது, அவனை கீழே இறக்க அல்ல, நம்மை மேலே ஏற்ற. உன்னைப் போன்ற ஒருவன் அப்படி இருக்க முடியும் என்றால், நீயும் அப்படி இருக்கலாம் என்று நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்லவும் தான்.

அப்படி காட்டும் இடங்களில் இராமன், சீதையை பிரிந்து வாடுவதாக வரும் இடங்கள்.

தவிக்கிறான். ஒரு சாதாரண மானிடன் இப்படி துணையை பிரிந்து தவிப்பானோ, அப்படி தவிக்கிறான்.


வாலி வதம் முடிந்து விட்டது. சீதையைத் தேட வேண்டிய கார் காலம் வந்து விட்டது. சுக்ரீவன் வந்த பாடில்லை. கார்காலம் (மழைக் காலம்) பெரும் தவம் செய்த முனிவர்களையே வாட்டும் என்றால், இராமன் பாடு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்.


பாடல்

அளவு இல் கார் எனும் அப்பெரும்
    பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்
    தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
    குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்
    அது வருத்தோ?


பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post.html

அளவு இல் = நீண்ட

கார் எனும்  = கார் காலம் என்று சொல்லப் படும்

அப்பெரும் பருவம் = அந்த பெரிய பருவ நிலை

வந்து = வந்து

அணைந்தால் = சேர்ந்து கொண்டால்

தளர்வர் என்பது = தளர்ந்து போவார்கள் என்பது

தவம் புரிவோருக்கும் = தவம் புரியும் முனிவர்களுக்கும்

தகுமால்; = ஏற்படும் என்றால்

கிளவி = மொழி, சொல், குரல்

தேனினும் அமிழ்தினும் = தேனையும், அமுதத்தையும் விட

குழைத்தவள் = குழைத்து தந்ததைப் போல உள்ள

வளைத் தோள் = மூங்கில் போன்ற நீண்ட தோள்கள்

வளவி = தழுவி

உண்டவன் = இன்பம் அனுபவித்தவன்

வருந்தும் என்றால் = (அவளைப் பிரிந்து ) வருந்துகிறான் என்றால்

அது வருத்தோ? =  அது என்ன சாதாரண வருத்தமா?


பெண்களின் குரல் தேனையும், அமுதத்தையும் கலந்த மாதிரி இனிமையாக இருந்ததாம்.  அந்தக் காலத்தில்.

அகத்தில் இருப்பது, புறத்தில் வரும்.

மனம் இனிமையாக இருந்தால், குரல் இனிமையாக இருக்கும்.

அன்பும், கருணையும், பாசம், காதலும் இருந்தால் குரலில் அது வெளிப்படும்.

இப்போதெல்லாம்  அப்படி எதிர் பார்க்க முடியாது.  ஆணும் பெண்ணும் சமம். ஆணின் முரட்டுக் குரல்தான் பெண்ணுக்கும் வரும். குரல் மட்டும் வேறாக ஏன் இருக்க வேண்டும்?


அது ஒரு புறம் இருக்கட்டும்.


"கார் எனும் பெரும் பருவம்" என்கிறார் கம்பர்.

சீதையை பிரிந்து இருப்பதால், ஒவ்வொரு நொடியும் நீண்டு இருப்பதைப் போல இராமனுக்குத் தெரிகிறது. அந்த கார் காலமே நீண்டு இருப்பதாகப் படுகிறது.



"வளைத் தோள் வளவி உண்டவன் வருந்தும்"

வளவி உண்டவன் என்றால் இன்பம் துய்த்தவன் என்று ஒரு பொருள்.

அவள் கைகளால் உணவு ஊட்ட உண்டவன் என்று பொருள்.

வருத்தம் இருக்காதா?






No comments:

Post a Comment