Friday, September 25, 2020

திருக்குறள் - செய்க பொருளை

திருக்குறள் - செய்க பொருளை 


பகை யாருக்குத்தான் இல்லை?

இராமனுக்கு பகை இலங்கையில் இருந்தது. இராமன் பகையைத் தேடிப் போகவில்லை. அதுவாக வந்து சேர்ந்தது. 

காந்திக்குப் பகை உள்ளூரிலேயே இருந்து வந்தது. 

வள்ளலாருக்கு எதிரிகள் இருந்தார்கள். 

அவர்களுக்கே அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம். 

பகைவர்கள் என்றால் ஏதோ நம் மீது சண்டை போட வருபவர்கள் அல்ல. 

நம் மீது பொறாமை கொண்டவர்கள், நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள். தெரிந்தே நமக்கு தவறான வழி காட்டுபவர்கள், நம் தோல்வி கண்டு நம்மை ஏளனம் செய்பவர்கள், இவர்கள் எல்லாம் நமக்கு பகைதான். 

நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தர்வகள் என்ற கர்வம் கொண்டு நம்மை தாழ்வாக நினைப்பவர்கள். 

இது ஒரு நீண்ட பட்டியல். 

பகைவர்களை எப்படி வெல்வது? அவர்களோடு சண்டை போடுவதா? பதிலுக்கு பொறாமை படுவதா? 

இல்லை. 

வள்ளுவர் சொல்கிறார். 

"நிறைய பொருள் சேர்.  பகைவர்களின் செருக்கை அறுக்க அது போன்ற கூரிய ஆயுதம் வெறும் எதுவும் இல்லை என்று"

பாடல் 

*செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்*

பொருள் 

click the following link to continue reading 





செய்க பொருளைச் = பொருளைச் செய்க 

செறுநர் = பகைவர்களின் 

செருக்கு அறுக்கும் = இறுமாப்பை, மமதையை, அறுக்கும் 

எஃகு = இரும்பு, ஆயுதம் 

அதனின் கூரியது இல் = அதைவிட கூர்மையானது எதுவும் இல்லை 

எப்போதாவது தான், வள்ளுவர் கட்டளையாகச் சொல்வார். 

அப்படி சொன்ன குறள்களில் இதுவும் ஒன்று. 

"செய்க பொருளை" என்று கட்டளையாகக் கூறுகிறார். 

பெரிய செல்வம் உடையவனாக இருந்தால், பகைவர்களின் செருக்கு தானே அடங்கும். 

ஏன்?

பெரிய செல்வம் இருந்தால், பெரிய இடங்களில் இருப்பவர் நட்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நம்மை , நம் பகைவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். 

கத்தி இருக்கிறதே, அது பொருள்களை வெட்டும். குணத்தை வெட்டுமா ?  எதிரியின் பகை உணர்ச்சியை வெட்ட  எந்தக் கத்தியைக் கொண்டு போவது?

நம்மிடம் நிறைய பொருள் இருந்தால், அது எதிராளியின் செருக்கை , ஆணவத்தை அறுக்கும் என்பதால், செல்வத்தை கூரிய கத்தி என்றார் வள்ளுவர். 

செருக்கு என்ற குணத்தை அறுப்பதால் அது கூரிய கத்தி. 

எதிராளியின் செருக்கை அடக்க வேண்டும் என்றால் நிறைய படி, பலப் பல பட்டங்கள் வாங்கு, படை திரட்டு, என்றெல்லாம் சொல்லவில்லை. 

செல்வத்தைச் சேர் .  பகை ஒடுங்கும் என்கிறார். 

ஏதோ நம் அற நூல்கள் எல்லாம் நம்மைச் சாமியாராக போகச் சொல்கின்றன என்ற ஒரு  குற்றச் சாட்டு உண்டு. 

அது தவறு. 

இந்தக் குறளைப் பாருங்கள்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் " பொருளைச் சேருங்கள்" என்கிறார். 

செல்வத்தைச் சேருங்கள். பகை தானே ஒடுங்கும். 

இதுக்கு மேல் இவ்வளவு பெரிய கருத்தை எளிமையாக, சுருக்கமாக யாரால் சொல்ல முடியும்?

யார் யாருக்கோ நன்றி சொல்கிறோம். 

ஒரு நாளேனும் வள்ளுவருக்கு நன்றி சொன்னதுண்டா?  



1 comment:

  1. எத்தனையோ குறள்கள் சொல்லும் செய்திக்கு மாறாக இருக்கிறது இந்தக் குறள்! அனால் அருமை.

    ReplyDelete