Sunday, September 6, 2020

இலக்கியமும், சினிமா பாடல்களும்

இலக்கியமும், சினிமா பாடல்களும்


ஏதோ அந்தக் காலத்தில் தான் உயர்ந்த பாடல்கள் எழுதப்பட்டன, இப்போதெல்லாம் அப்படி தரமான பாடல்கள் எழுத ஆள் இல்லை என்று நாம் நினைக்கலாம்.

பல சினிமா பாடல்களை கேட்கும் போது, அட, என்ன ஒரு அருமையான வரி என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். இந்த சினிமா பாடல் வரிகள் இலக்கியத்தில் இருந்து வந்ததா, அல்லது இலக்கியம் இந்த வரிகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்ததா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மனித மனதின் உணர்வுகளை, உறவின் பிரிவை, பரிவை,  அதில் எழும் சிக்கல்களை அன்றும் பாடி இருக்கிறார்கள், இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது.

அன்று பாடியவை கொஞ்சம் கடினமான தமிழாக இருக்கிறது. காரணம், அதில் உள்ள பல தமிழ் வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இல்லை. மேலும், நாம் நமது மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வது இல்லை. எத்தனை பேர் தமிழ் அகராதி பார்த்து இருப்பீர்கள்?

வாலி இறந்து கிடக்கிறான்.  தாரை அவன் மேல் விழுந்து அழுது புலம்புகிறாள்.

"நீயும் நானும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இருப்பதாக சொல்லிக் கொண்டு எவ்வளவு அன்போடு இருந்தோம். நான் உன் என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால், இராமன் விட்ட அம்பு என் மேல் குத்தி இருக்க வேண்டும். நீ என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால் , இப்படி இறந்து கிடக்க மாட்டாய். நாம் ஒருவர் மனதில் இன்னொருவர் இருந்தோம் என்று சொன்னது எல்லாம் பொய் தானா? " என்று புலம்புகிறாள்

பாடல்

செரு ஆர் தோள! நின்
      சிந்தை உளேன் எனின்,
மருவார் வெஞ் சரம்
      எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை
      ஆகின், உய்தியால்;
இருவே முள்
      இருவேம் இருந்திலேம்.

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_6.html

செரு ஆர் = போர் செய்ய சிறந்த

தோள!  = தோள்களை உடையவனே

நின் = உன்னுடைய

சிந்தை உளேன் எனின், = மனதில் நான் உள்ளேன் என்றால்

மருவார்  = பகைவரது (இராமனின்)

வெஞ் சரம் = கொடிய அம்பு

எனையும் வவ்வுமால்; = என்னையும் கொன்றிருக்க வேண்டும்

ஒருவேனுள் = தனியான என்

உளை ஆகின், =  (நீ ) உள்ளாய் என்றால். அதாவது, என் மனதில் நீ இருந்தால்

உய்தியால்; = நீ தப்பித்து இருப்பாய்

இருவே முள் = இருவருக்குள்

இருவேம் = இருவரும்

இருந்திலேம். = இருக்க வில்லை

இன்று வருவோம்.

முதல்வன் படப் பாடல்.

காதலி பாடுகிறாள்.

உன் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன் என்றால், உன் உயிர் எனக்குள் இருக்கிறது. என் உயிர்  உனக்குள் இருக்கிறது. 

உன்னை கொல்ல வந்த கூற்றுவன், உன் உயிர் உன் உடம்பில் இல்லாததை கண்டு  குழம்பிப் போய் விடுவான்.  உன் உயிரை எடுக்க வேண்டும் என்றால் என்னைக் கொல்ல வேண்டும். என்னை கொல்ல வேண்டும் என்றால் என் உயிர் உனக்குள் இருக்கிறது. பாவம், எமன் என்ன செய்வான் என்று தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.


(உன்) உசிா் என்னோட இருக்கையிலே
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சீவனே நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா


(முழுப் பாடலையும் தரவில்லை. பல முறை கேட்ட பாடல் தான்).

youtube link கீழே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=gYD0jmmZtJU&ab_channel=TamilFilmSongs

கம்ப இராமாயணமாக இருந்தால் என்ன,  சினிமா பாடலாக இருந்தால் என்ன,  அன்பு வெளிப்படும் விதம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

திறந்த மனதோடு எல்லாவற்றையும் அணுகுவோம், இரசிப்போம்.




3 comments:

  1. அன்றும் இன்றும் உணர்வுகளை பாடல்கள் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன

    ReplyDelete
  2. அருமை. உள் உணர்வுகள் என்றும் மாறாது.சொல்லும் விதம்தான் காலத்தின் போக்கில் சற்று மாறி இருக்கும்.

    ReplyDelete