Thursday, September 17, 2020

திருக்குறள் - பொய் சொல்லணும்

 திருக்குறள் - பொய் சொல்லணும் 

சில பேர் ரொம்ப ஞாயவானாக இருப்பார்கள். எப்போதும் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுவது.  அதில் ஒரு பெருமையும் கொள்வார்கள். 

அது யாராக இருந்தாலும் சரி. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசி விடுவது அவர்கள் வழக்கம்.

அது சரி அல்ல என்கிறார் வள்ளுவர். 

சில இடத்தில் பொய் சொல்ல வேண்டும்.  அப்போது தான் நல்லது என்கிறார் அவர். 

என்னது, வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?  அறத்துப் பால் எழுதிய வள்ளுவரா அப்படிச் சொன்னார்? இருக்கவே இருக்காது என்று நினைப்பீர்கள். 

கணவன் மனைவி உறவில் போய் சொல்லலாம் என்கிறார். 

உடனே,  மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு சின்ன வீடு வைத்துக் கொள்ளலாம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. 

வள்ளுவர் சொல்லுவது, பாராட்டுவதில் பொய் சொல்லலாம் என்கிறார். 

அதற்கு அவர் வைத்த பெயர் "நலம் புனைந்து உரைத்தல்"

நல்லதை கொஞ்சம் கற்பனை கலந்து சொல்லுதல். 

உதாரணமாக,

மனைவி அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும், "எனக்கு நீ தாண்டி இரதி"  என்று சொல்ல வேண்டும். "அந்த ஒரு தெத்துப் பல்லு இருக்கே, அது தான் உனக்குஅழகு" என்று சொல்ல வேண்டும், அது அழகாக இல்லாவிட்டாலும். 

அது போல கணவன் பெரிய திறமைசாலியாக இல்லாவிட்டாலும், மனைவி  கணவனை புகழ வேண்டும்.  "இந்த வீட்டுக்காக நீங்க எவ்வளவு பாடு படுறீங்க...பாவம்" என்று அவன் மேல் பரிவு கொள்ள வேண்டும். "ஆமா, என்னத்த பெருசா கிழிச்சுடீங்க...அவனவன் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறான்...இங்க ஒரு கார்/நகை/வீடு வாங்க வக்கில்லை" என்று சொல்லக் கூடாது. அது உண்மையாகவே இருந்தாலும். 

"நீ ரொம்ப வெயிட் போட்டுட்ட...வர வர உன் சமையல் வாயில வக்க விளங்கல" என்றெல்லாம் பேசுவது கூடாது. 

நலம் புனைந்து உரைத்தல் என்ற அதிகாரத்தில் பத்து குறள் இருக்கிறது. 

அதில் முதல் குறள் 


பாடல் 

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_17.html


நன்னீரை  = நல்ல குணங்களை உடைய 

வாழி  = நீ வாழ்க 

அனிச்சமே = அனிச்ச மலரே 

நின்னினும் = உன்னை விட 

மென்னீரள் = மென்மையான இயல்பு உடையவள் 

யாம்வீழ் பவள் = என் காதலி / என் மனைவி 

அனிச்ச மலரே, என் மனைவி உன்னை விட மென்மையானவள்.

அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் இயல்பு  கொண்டது. அவ்வளவு மென்மையானது. 

ஒரு பெண்ணும் அவ்வளவு மென்மையாக இருக்க முடியாது. 

இருந்தும், அவன் சொல்கிறான்...என் மனைவி/காதலி உன்னை விட மென்மையானவள் என்று. 

சும்மா. பொய் தான். 


அந்த பொய் தான் உறவை பலப்படுத்தும்.  அதைக் கேட்ட அவள் வெட்கப் படுவாள். பெண் வெட்கப் பட்டால், அது ஒரு அழகு.

அது மட்டும் அல்ல.  அதற்கு பின்னால், ஒரு மனோ தத்துவமும் அடங்கி இருக்கிறது. 

அவள் ஏதோ ஒரு உடை, அல்லது நகை அணிந்த போது  பாராட்டினால், "அட...அவர்  இதை எல்லாம் கவனிக்கிறாரா..." என்று தன்னை அழகு படுத்திக் கொள்வதில்  மேலும் ஆர்வம் காட்டுவாள்.  சமையலில் இன்னும்  ஈடுபாடு  அதிகம் ஆகும். 

இல்லை என்றால், "என்ன செஞ்சு என்ன...ஒரு வார்த்தை சொல்றது கிடையாது...செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாட்டாலும் ஒண்ணு தான் " என்று  ஒரு சலிப்பு வந்து விடும். 

பாராட்டு ஒரு ஊக்கம் தரும். சலிப்பை போக்கும். உறவை பலப்படுத்தும். 

பொய் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்கள். 

கணவனையோ, மனைவியையோ பாராட்டி (பொய்யாக இருந்தாலும்) சொல்லிப் பாருங்கள்.  வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். 



3 comments:

  1. அழகாக சொன்னீர்கள்.இது கணவன் மனைவிக்கு மிக்க பொருந்தினாலும் ,எல்லோரிடமும் உள்ள நல்ல குணங்களை சற்றே தூக்கி சொன்னால் உறவுகள் பலப்படும்.

    ReplyDelete
  2. இனிமையான குறள் , இனிமையான விளக்கம்!

    ReplyDelete