திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 1
இந்த குறளுக்கு எப்படி விளக்கம் சொல்லுவது என்ற மலைப்பில் சில நாட்கள் போய் விட்டன. ஒன்று மிக விரிவான ஆழமான குறள். இரண்டாவது, முழுவதுமாக புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கு.
முடிந்தவரை விவரிக்க முயற்சி செய்கிறேன்.
பாடல்
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html
(pl click the above link to continue reading)
சுவை = சுவை
ஒளி = ஒளி
ஊறு = தொடு உணர்ச்சி
ஓசை = ஓசை
நாற்றம் = மூக்கால் நுகர்வது
மென் றைந்தின் = என்ற ஐந்தின்
வகை = கூறுபாடுகளை
தெரிவான் = ஆராய்ந்து அறிபவன்
கட்டே உலகு = கண்ணதே உலகம்
இதில் என்ன சிக்கல் இருக்கிறது. ஐம்புலன்களை அறிந்தவன் கண்ணதே உலகம். அதுதான் தெளிவாக இருக்கிறதே. இதில் இன்ன குழப்பம் என்று நாம் நினைக்கலாம்.
"கட்டே உலகு" : உலகம் என்றால் என்ன? இது தெரியாதா, உலகம் என்றால் இந்த பூமி, நிலா, சூரியன், பால் வெளி, அண்டம், இந்த பூமியில் உள்ள புல் பூண்டு, உயிரினங்கள், மலை, காடு, கல், மண் எல்லாம் சேர்ந்ததுதான் உலகம்.
சரி, இந்த ஆராய்ச்சிக்கு பூமியையும் அதில் உள்ள பொருள்களையும் எடுத்துக் கொள்வோம். சரியா?
இந்த உலகம் பொருள்களால் நிறைந்தது. உயிருள்ள பொருள்கள், உயிர் இல்லாத பொருள்கள் என இரண்டு வகையான பொருள்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு பொருளுக்கும் சில குணங்கள் இருக்கின்றன அல்லவா?
இலட்டு என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும், இனிப்பாக இருக்கும், சிறிய பந்து போல இருக்கும், ஏலக்காய், கிராம்பு மணத்தோடு இருக்கும். இதே போல் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் குணங்களை கூற முடியும்.
பசு மாடு, தாமரைப் பூ, மலை, இரயில், நாற்காலி, படிக்கட்டு, புத்தகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிற்கு குணங்கள் இருக்கும். மனிதர்களுக்கும் குணங்கள் உண்டு. உயரம், குள்ளம், கறுப்பு, சிவப்பு, குண்டு, ஒல்லி என்று மனிதர்களுக்கு மனிதர் குண வேறுபாடு உண்டு.
இதுவரை சரி தானே?
இனி அடுத்த நிலைக்குப் போவோம்.
பொருளில் குணங்கள் இருக்கிறதா? அல்லது குணங்களின் தொகுப்பு பொருளா?
இலட்டில் இனிப்பு, மென்மை, மஞ்சள், ஏலக்காய் மணம் இருக்கிறதா அல்லது இந்த குணங்கள் எல்லாம் சேர்ந்த ஒன்றுக்கு இலட்டு என்று பெயரா?
இலட்டில் இருந்து இந்த குணங்களை எடுத்து விட்டால் என்ன ஆகும்?
மஞ்சள் நிறம் இல்லை.
உருண்டையாக இல்லை.
இனிப்பாக இல்லை.
மணம் இல்லை.
அதை இலட்டு என்று கூற முடியுமா?
முடியாது அல்லவா?
எனவே, பொருள் என்பது குணங்களின் தொகுப்பு என்று புரிகிறது அல்லவா?
பழைய நண்பர்களை வெகு நாள் கழித்து சந்திக்க நேர்ந்தால், அவர்களுடைய சில அடிப்படை குணங்கள் மாறி இருக்காலம். "என்னடா அந்தக் காலத்தில் எதுக்கு எடுத்தாலும் கோபப்பட்டு சண்டைக்கு போவ...இப்ப ரொம்ப அமைதியா ஆளே மாறிட்டியே" என்று சொல்லி இருப்போம். "குண்டு குண்டுன்னு இருப்ப...இப்ப துரும்பா இளைச்சு ஆள் அடையாளமே தெரியலையேடா"
குணம் மாறினால், "ஆளே மாறிட்டியே" என்று சொல்ல நேர்கிறது அல்லவா?
எனவே, உலகம் என்பது பொருள்களால் அல்ல குணங்களால் நிறைந்தது என்று தெரிகிறது அல்லவா?
சரி, குணங்கள் எங்கிருந்து வருகின்றன?
ஒருவனுக்கு மிளகாய் பஜ்ஜியை கண்ணில் கண்டாலே கண்ணில் நீர் வரும். இன்னொருவனோ, என்ன மிளகாய் பஜ்ஜி காரமே இல்லை என்று நறுக் நறுக் கென்று தின்று கொண்டிருப்பான்.
ஒருவனுக்கு குளிர் வாட்டும், இன்னொருவன் என்ன கச கச என்று இருக்கிறது. கொஞ்சம் மின் விசிறியை போட்டா என்ன என்பான்.
குணம் பொருளில் தங்கி இருக்கிறதா, அல்லது பொருளை பார்ப்பவனில் தங்கி இருக்கிறதா?
குணம் பொருளில் தங்கி இருக்கிறது என்றால், எல்லோரும் ஒன்றையே சொல்ல வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒன்று சொல்வதனால், அது பொருளை அனுபவிப்பவனை பொறுத்து அமைகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
எனவே, உலகம் என்பது பொருளில் இருந்து குணத்துக்கு மாறி, குணத்தில் இருந்து அதை அனுபவிப்பவனுக்கு போய் விட்டது.
அப்படி என்றால், இந்த உலகம் பார்பவனை பொறுத்தது என்று நம்மால் சிந்திக்க முடிகிறது அல்லவா?
இதை யோசித்துக் கொண்டு இருங்கள்.
நாளை மேலும் சிந்திக்க இருக்கிறோம்.
கண்ணே ( கட்டே) உலகு என்று சொன்னதால், அவனிடத்திலேயே உள்ளது என்றே பொருள் கொள்ளலாம். அதாவது நாம் காண்பது கேட்பது, உணர்வது, சுவைப்பது எல்லாமே நமக்குள் ஏற்படும் அனுபவம். நமக்கு வெளியே எதுவுமே இல்லை. எல்லாம் உள்ளேயே இருக்கிறது
ReplyDelete