Sunday, May 9, 2021

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 1

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 1 


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


இதில் செயற்கரிய செயல், அது அல்லாத செயல் என்ன என்று வள்ளுவர் சொல்லவில்லை.  யாரிடம் போய் கேட்பது? எப்படி அறிந்து கொள்வது?


இமயமலை மேல் ஏறுவது செயற்கரிய செயல்தான். எல்லோராலும் முடியாது. அதற்காக அங்கு ஏறியவர்கள் எல்லோரும் பெரியர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?



பல கோடி சொத்து சேர்ப்பது,  பந்தயங்களில் தங்கப் பதக்கம் வாங்குவது எல்லாம் அரிய செயல் தான்.  பணக்கார்கள் எல்லோரும் பெரியவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?



வீட்டு வேலை செய்வது,  பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எல்லோரும் செய்வதுதான். அதற்காக அதை செய்பவர்களை சிறியர் என்று கூற முடியுமா? 



சிக்கல்தானே. 


பரிமேலழகர் இல்லை என்றால் இந்த சிக்கலை நம்மால் விடுவிக்கவே முடியாது. 


அவர் உரையில், 


"செயற்கு அரிய ஆவன, இயமம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். 


செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. "


என்று குறிப்பிடுகிறார். 


அதாவது யோகம் செய்வது அரிய செயல் என்றும், புலன்களை பொறிகள் செல்லும் வழியில் செல்ல விடுதலும் சிறியர் செய்யும் செயல் என்கிறார். 


சிறியர் செயல் நமக்குப் புரிகிறது. 


சாப்பிடவேண்டும் என்று நினைத்தால் சாப்பிடுவது.  முன்பு எப்போது உண்டோம், எவ்வளவு உண்டோம், அது ஜீரணம் ஆகி இருக்குமா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.  உணவைப் பார்த்தவுடன் ஒரு ஆசை. நாக்கில் எச்சில் ஊறுகிறது. உண்ணத் தலைப்படுகிறோம்.  


ஒவ்வொரு ஆசையும் அப்படியே யோசித்துக் கொள்ளுங்கள். 


அது என்ன இயமம், நியமம் என்ற  எண்வகை யோக உறுப்புகள் ? அவற்றை செய்வது அவ்வளவு கடினமா? அவற்றை செய்தால் என்ன கிடைக்கும்  ? 


எண்வகை யோக உறுப்புகளை நாளை சிந்திப்போம். அது சற்றே பெரிய தலைப்பு என்பதால், அதற்கென்று ஒரு ப்ளாக் இருப்பது நலம். 

1 comment:

  1. நல்ல விளக்கம் ....
    தாங்கள் தருவதும்.
    நாளை எப்போது விடியும் ?

    ReplyDelete