Wednesday, May 5, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - ஓரைந்தும் காப்பான்

திருக்குறள் - நீத்தார் பெருமை - ஓரைந்தும் காப்பான்


ஒரு வண்டியில் மாட்டினை கட்டி இழுக்க வைக்கலாம். குதிரையை கட்டலாம். கழுதையை கூட கட்டலாம். 


ஐந்து மதம் கொண்ட யானைகளை கட்டி வண்டி ஓட்ட முடியுமா? ஒரு மதம் கொண்ட யானையை கட்டி இழுக்க வைப்பதே கடினம். இதில் ஐந்து மதம் கொண்ட யானைகள் என்றால் முடியுமா? ஒன்றை சரி பண்ணி ஓட வைப்பதற்குள், மத்த நாலு யானைகளும் நாலு பக்கம் பியித்து கொண்டு ஓடும். 


ஓடினாலாவது பரவாயில்லை, வண்டியையையும் அதை ஓட்டுபவனையும் போட்டு மிதித்து துவம்சம் செய்து விட்டு ஓடி விடும்.


அந்த ஐந்து மதம் கொண்ட யானைகள் தான் நம் ஐந்து புலன்களும். ஒவ்வொன்றும் எங்கே நாம் சொல்வதை கேட்கின்றன? அததது பாட்டுக்கு நம்மை அவை விரும்பும் பக்கம் எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. 


மருத்துவர் சொல்கிறார்..."சர்க்கரை வியாதி முற்றி விட்டது...இனிப்பை கையில் தொடவே கூடாது" என்று. முடிகிறதா? இலட்டை பார்த்தவுடன் எச்சில் ஊறுகிறது. "ஒரே ஒரு இலட்டு தானே...வேணும்னா இன்னொரு இன்சுலின் மாத்திரை போட்டுக்கலாம்" என்று தின்ன ஓடுகிறது. 


இந்த புலன்களை எப்படித் தான் அடக்குவது? 


அறிவு என்ற அங்குசத்தால் அடக்க வேண்டும். 


"அட போங்க சார், அறிவு ஆயிரம் சொன்னாலும் நம்ம புலன்கள் எங்கே கேக்குது..." என்று நீங்கள் கூறலாம். அதையும் யோசித்து வள்ளுவர் வழி சொல்கிறார். 


பாடல் 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_5.html


(please click the above link to continue reading)


உரனென்னும்  = உறுதி, திண்மை என்ற 


தோட்டியான் = தோட்டி என்றால் அங்குசம். யானையை அடக்கும் அங்குசம். அங்குசத்தை உடையவன் 


ஓரைந்தும் = புலன்கள் ஐந்தையும் 


காப்பான் = தவறான வழியில் செல்லாமல் காப்பவன் 


வரனென்னும் = உயர்ந்தது என்று சொல்லப்படுகிற 


வைப்பிற்கோர் = வைக்கும் இடத்துக்கு ஒரு 


வித்து = விதை 



இனி பரிமேலழகர் உரையை பார்ப்போம். 



முதலாவது, குறளில் யானை என்ற சொல்லே இல்லை. யானைய அடக்கும் என்று எப்படி சொல்லலாம்?  அதற்கு ஏகதேச உருவக அணி என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒன்றை சொல்லி (ஏகம் என்றால் ஒன்று) மற்றதை சொல்லாமல் விடுவது. 



இன்றைய தலைமுறைக்கு சொல்வது என்றால் திரைக் கதை என்று சொல்லலாம். "முருகனுக்கு ஏகப்பட்ட சொத்து, வீடு, வாசல், நிலம், நீச்சு, ஆள், அம்பு, சேனை...." என்று சொல்லிக் கொண்டே போகலாம். மாறாக, சினிமாவில் காட்டுவது என்றால் முருகன் விலை உயர்ந்த ஆடை அணிந்து,  விலை மதிப்புள்ள ஒரு காரில் இருந்து இறங்கி வருவதை காட்டினால் போதும்...அவன் பெரிய பணக்காரன் என்று நாம் அறிந்து கொள்கிறோம் அல்லவா. 



அது போல, அங்குசத்தால் அடக்கி என்று கூறியதன் மூலம், புலன்களை யானைக்கு ஒப்பிடுகிறார் என்று புரிந்து கொள்ள முடியும். அங்குசத்தை வைத்து எதை அடக்குவார்கள்? பூனையையா அடுக்குவார்கள்? 



இரண்டாவது, அந்த அங்குசம் வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். சும்மா ஒரு அட்டையில் அங்குசம் செய்து வைத்துக் கொண்டு யானையை அடக்க முடியாது. அது போல அறிவு மட்டும் இருந்தால் போதாது. அது வலிமை உள்ளதாக, உறுதி உள்ளதாக இருக்க வேண்டும். "திரண்" என்ற சொல்லை வள்ளுவர் பயன் படுத்துகிறார்.


மூன்றாவது, "ஓரைந்தும் காப்பான்"...ஏதோ ஒன்றிரண்டை காப்பாற்றினால் போதாது, ஐந்து புலன்களையும் காக்க வேண்டும். ஒரு சிலருக்கு இனிப்பு பிடிக்காது. (அப்படியும் சிலர் இருக்கிறார்கள்). அதற்காக அவர்கள் அனைத்து புலன்களையும் வென்று விட்டதாக அர்த்தம் அல்ல. 



நான்காவது, "வரன் எனும் வைப்பு". உயர்ந்த இடத்தில் என்று பொருள். எது  உயர்ந்த இடம்? வீடு பேறு. அது தான் அனைத்திலும் உயர்ந்த இடம். 



ஐந்தாவது, "வித்து". விதை. எல்லா விதையும் எல்லா இடத்திலும் முளைக்காது. காஷ்மீரில் விளைவது கன்யாகுமரியில் விளையாது. மலையில் விளைவது, மற்ற இடத்தில் விளையாது. 


அது போல, வீடு பேறு என்று சொல்லப் படும் அங்கு விளையும் விதை இந்த உரன் என்ற தோட்டியால் ஓரைந்து புலன்களையும் கட்டுப் படுத்துபவன். இந்த விதை அங்குதான் முளைக்கும். 


அப்படி என்றால் என்ன அர்த்தம்?  இங்கு முளைக்காது என்று அர்த்தம். அவன், மீண்டும் இங்கு வந்து பிறக்க மாட்டான் என்று அர்த்தம். 


எப்படி சொல்கிறார் பாருங்கள். 


பிறப்பு அறுத்து வீடு பெறுவான் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார். 


வீடு பேறு அடைகிறோமோ இல்லையோ, குறள் படிப்பதன் மூலம் அழகாக பேசவும், எழுதவும் படித்துக் கொள்ளல்லாம். 


உறுதியான அறிவைக் கொண்டு புலன்களை கட்டுப் படுத்தினால் வீடு பேறு கிட்டும் என்பது குறளின் சாரம். 


கிட்டட்டும். 


(சிலர் வற்புறுத்திக் கேட்டாதால் ஒரே ஒரு முறை என் e mail id: rethin@hotmil.com)






3 comments:

  1. Thanks for your email id.

    Chittanandam

    ReplyDelete
  2. "அங்குசத்தை வைத்து எதை அடக்குவார்கள்? பூனையையா அடுக்குவார்கள்?" என்னை வாய் விட்டுச் சிரிக்க வைத்துவிட்டது இந்த வரி!

    வித்து என்ற சொல்லை இங்கே எப்படிப் பொருத்துவது என்பதே தெளிவாக இல்லை. இந்த மாதிரி ஐந்து புலன்களையும் அடக்குவதே, உயர்ந்த இடத்துக்குச் செல்வதற்கு வித்து, அதாவது அடைப்படை விதை என்று நான் பொருள் கொண்டான். தவறா?

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐந்தாவது, "வித்து". விதை. எல்லா விதையும் எல்லா இடத்திலும் முளைக்காது. காஷ்மீரில் விளைவது கன்யாகுமரியில் விளையாது. மலையில் விளைவது, மற்ற இடத்தில் விளையாது.



      அது போல, வீடு பேறு என்று சொல்லப் படும் அங்கு விளையும் விதை இந்த உரன் என்ற தோட்டியால் ஓரைந்து புலன்களையும் கட்டுப் படுத்துபவன். இந்த விதை அங்குதான் முளைக்கும்.



      அப்படி என்றால் என்ன அர்த்தம்? இங்கு முளைக்காது என்று அர்த்தம். அவன், மீண்டும் இங்கு வந்து பிறக்க மாட்டான் என்று அர்த்தம்.



      எப்படி சொல்கிறார் பாருங்கள்.



      பிறப்பு அறுத்து வீடு பெறுவான் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.

      Delete