Monday, May 10, 2021

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 2

 

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 2


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_10.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


அரிய செயல்கள் என்று பரிமேலழகர் கூறுவது "இயமம், நியமம் முதலிய எண்வகை யோக உறுப்புகளை "


யோகம் என்றால் என்ன ? அது என்ன எண்வகை ?


யோகம் என்றால் இணைப்பது. 


எதோடு எதை இணைப்பது ? மனதையும், உடலையும் இணைப்பது.  அதை ஏன் இணைக்க வேண்டும்? இணைப்பதால் என்ன பலன்? இணைக்காவிட்டால் என்ன நிகழும் என்பது பற்றி அறிய யோக சூத்திரம் முழுவதும் படிக்க வேண்டும். 


இங்கு எட்டு யோக உறுப்புகளை பார்ப்போம். 


பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்தில் யோகத்தை எட்டு அங்கங்களாக பிரிக்கிறார். 


முதல் நாலு பிரிவுகள் யோகம் செய்வதிற்கான ஆயத்த நிலைகள். இரண்டாவது நாலு பிரிவுகள் தான் யோகம் பற்றியவை. 


இவற்றைப் பார்ப்பதற்கு முன்னால், யோகம் பற்றிய சில சிந்தனைகளை நாம் சரி செய்து கொள்ள வேண்டும். 


யோகம் என்பது ஏதோ உடற் பயிற்சி அல்ல. இன்று யோகா என்பது ஏதோ உடல் பயிற்சி என்று ஆகிவிட்டது. அந்த யோகா, இந்த யோகா  என்று பலவிதமான யோகா நிலையங்கள் வந்து விட்டன. டிவி யிலும் பல யோகா பயிற்சிகள் சொல்லித் தருகிறார்கள். 


இது எல்லாம் ஆசனம் என்ற ஒரு பகுதி மட்டும் தான்.  மிஞ்சி மிஞ்சி போனால் பிரணாயாமம் கூட சேரலாம். அது இரண்டு மட்டுமே யோகம் அல்ல. 


அஷ்டாங்க யோகம் பற்றி சிந்திப்போம். 


முதல் நான்கு அங்கங்கள்:


இயமம்

நியமம் 

ஆசனம் 

பிரணாயாமம் 


இயமம் என்றால் விலக்கியன ஒழிதல். அதாவது எந்த தீய ஒழுக்கங்களை விலக்க வேண்டும் என்று உயர்ந்தவர்களும், உயர்ந்த நூல்களும் கூறுகின்றனவோ அவற்றை விலக்க வேண்டும். 


உதாரணமாக புகை பிடிப்பது, மது அருந்துவது, கொலை, களவு, போன்றவை.   யோகாசனம் ஒரு மணி நேரம் செய்து விட்டு பின் வெளியே வந்து புகை பிடிப்பது சரி அல்ல. 


யோகாசானத்தின் முதல் அங்கம், தீயவற்றை விட்டு விலகுவது. அதிகம் உண்பது, போதை தரும் பொருள்களை விடுவது,  சோம்பேறித்தனம், பொறாமை,கோபம் போன்றவற்றை விடுவது. இதற்கே ஒரு வாழ்நாள் போய்விடும் போல் இருக்கிறது. 


நியமம் என்பது நல்ல நூல்களில், உயர்ந்தவர்கள் கூறியவற்றை கடைபிடிப்பது. முதலில் தீயவற்றை விலக்குவது. பின் நல்லவற்றை கடைபிடிப்பது. தீய பழக்கங்களை விடாமல் நல்ல பழக்கங்களை கைக் கொள்ள முடியாது. 


மூன்றாவது, ஆசனம்.  ஆசனம் என்பது உடலை சம நிலைப் படுத்துவது. எந்த வேலை  செய்ய வேண்டும் என்றாலும், உடல் ஒத்துழைக்க வேண்டும். உடல் களைத்தால், வேலை நின்று விடும். யோக முயற்சி என்பது நீண்ட கால முயற்சி. அதற்கு உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதற்கு ஆசனம் பழக வேண்டும். 


நான்காவது, பிராணாயாமம். உடல் சம நிலை பட்டுவிட்டால், அடுத்து மூச்சு சமநிலை படவேண்டும்.  மூச்சு நிதானமானால், மன நிலை சமப்படும். 


மனதை கட்டுப் படுத்த வேண்டும் என்றால், மூச்சு சமப் படவேண்டும். மூச்சு சமப் பட வேண்டும் என்றால், உடல் சமப் படவேண்டும். அதற்கு நியமும், இயமும் வேண்டும். 


இந்த நான்கு அங்கங்களையும் கடந்த பின்னால்தான் உண்மையான யோக முயற்சிகள் தொடரும். 


அடுத்த நான்கு  அங்கங்கள் 


பிரத்தியாகாரம் 

தாரண

தியானம் 

சமாதி 


இந்த நான்கையும் பற்றி நாளை சிந்திப்போம்.





இதன் முதல் பகுதியை கீழே காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html


1 comment: