திருக்குறள் - மகன் தந்தைக்கு செய்யும் உதவி
இதுவரை பிள்ளைகளை பெறுவதனால் உள்ள பயன், அவர்களால் பெற்றோருக்கு கிடைக்கும் இம்மை, மறுமை பயன்கள் பற்றி கூறினார். பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றியும் கூறினார்.
கடைசியில், மகன் தந்தைக்கு செய்யும் கடமை பற்றி கூறுகிறார்.
"தன்னை கல்வி , ஒழுக்கங்களில் உயர்ந்தவனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு என்பது, இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லும்படி வாழ்வது" என்கிறார்.
பாடல்
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_11.html
(Please click the above link to continue reading)
மகன் = கல்வி ஒழுக்கங்களில் உயர்ந்தவனாகிய மகன்
தந்தைக்கு = அவ்வாறு உயர வழி செய்த தந்தைக்கு
ஆற்றும்உதவி = செய்யும் கைம்மாறு
இவன்தந்தை = இவனுடைய தந்தை
என்னோற்றான் = என்ன தவம் செய்தானோ
கொல் = அசைச் சொல்
எனும் சொல் = என்று ஊரார் சொல்லும் பேச்சு
இதில் சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
முதலாவது, பிள்ளை நிறைய சொத்து சேர்பதோ, பெரிய பதவி அடைவதோ கைம்மாறு அல்ல. இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று ஊர் சொல்ல வேண்டும்.
இரண்டாவது, மிக முக்கியமானது, பிள்ளை வளர்ப்பது என்பது நம் கையில் மட்டும் அல்ல. பெற்றோர்கள் நினைக்கலாம், நம் சாமர்த்தியத்தில் பிள்ளைகளை நன்றாக வளர்த்து விடலாம் என்று. அப்படி அல்ல. முன் செய்த தவத்தால் தான் நல்ல பிள்ளைகள் வருவார்கள்.
"இவன் தந்தை எப்படி வளர்த்தான் எனும் சொல் " என்று சொல்லவில்லை.
நல்ல பிள்ளைகள் வேண்டும் என்றால் தவம் செய்ய வேண்டும்.
இப்போது செய்தால் அடுத்த பிறவியில் நல்ல பிள்ளைகள் வருவார்கள்.
மூன்றாவது, மகன், தந்தைக்கு ஆற்றும் உதவி என்றுதான் இருக்கிறது. மகள், தாய் எல்லாம் இல்லை. சிந்திக்க வேண்டிய விடயம். பிள்ளைகளை வளர்ப்பது என்பது தந்தையின் கடமை என்று இருந்தது. பிள்ளை எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், தாய் அவனை விட்டுக் கொடுக்க மாட்டாள். என் பிள்ளை அப்படி செய்திருக்க மாட்டான் என்று அவனுக்கு வேண்டித்தான் பேசுவாள். கண்டிப்பு இல்லாத இடத்தில் ஒழுக்கம் நிற்காது. தாய்மை என்பது உணர்ச்சி மிகுந்தது. அது பிள்ளையை அறிவுக் கண் கொண்டு பார்க்காது.
பெண்கள் பிள்ளைகளை வளர்க்கத் தலைப்பட்டார்கள். தன் பிள்ளை எல்லாவற்றிலும், முதலாவதாக வர வேண்டும் என்று அழுத்தம் தரத் தொடங்கினார்கள். விளையாட்டு, பாட்டு, இசை, நடனம், படிப்பு, என்று எதை எடுத்தாலும் என் பிள்ளை முதலில் வர வேண்டும் என்று தாய்மை விரும்பும். முடியுமா?
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
என்கிறது புறநானுறு.
ஈன்று புறந்தருதல் = பிள்ளையை பெறுவது என்னுடைய தலையாய கடமை
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடமை
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனுக்கு கடமை
அது ஒரு காலம்.
இந்த அத்தியாயம் முழுவதற்குமே நீங்கள் சொல்லிய விளக்கங்கள் சரியல்ல.
ReplyDeleteபாடல்களில் ஆண்பால் சொற்கள் பெண்களையும் குறிப்பதற்கும், பெண்பால் சொற்கள் ஆண்களையும் குறிப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.
மேலும், ஒரு குடும்பத்தில் தந்தை-தாய் இருவரின் உணர்ச்சிகளும் பிள்ளைகள் மேல் ஒன்றி விடுகின்றன - பிள்ளை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. அந்த உணர்ச்சிகளை வடிக்க வந்த வள்ளுவர், சில சமயம் தந்தையையும், சில சமயம் தாயையும் குறிப்பிட்டிருக்கிறார் என்று கொள்வதே நலம், அதுவே இனிமை.
இந்த மாதிரி எழுத, நான் ஒன்றும் பரிமேலழகர் இல்லை. நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு எல்லாக் குரள்களும், வேறு பல இலக்கியங்களும் தெரியாது. இருந்தாலும், இன்றைக்கால இரசிகன் என்ற முறையில் சொல்கிறேன்.
மேலும், ஒரு இலக்கியத்தின் பொருளை, அந்த அந்த காலங்களுக்கு ஏற்றபடிப் படிப்பதே சிறந்தது. இன்றைக்குப் பெண்கள் அறிவியல், மருத்துவம், அரசியல் என்று பல துறைகளில் சிறந்து விளங்கும் காலத்தில், இந்தக் குறள்களை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொட்டையாகப் படிக்காமல், மனித இனத்தை உயர்த்தும்படிப் பொருள் கொள்வதே சிறந்தது.
நன்றி.