திருக்குறள் - தன்னை விட அறிவான பிள்ளைகள்
தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையராக இருப்பது எந்த பெற்றோருக்கும் மகிழ்ச்சிதானே. என் பிள்ளை எவ்வளவு படித்து பெரிய ஆளாகி இருக்கிறான் என்று நினைத்து பெருமை படாத பெற்றோர் யார் இருக்கிறார்கள்?
பாடல்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_9.html
(Please click the above link to continue reading)
தம்மின் = தம்மைவிட
தம் மக்கள் = தங்களுடைய பிள்ளைகள்
அறிவுடைமை = அறிவு உள்ளவர்களாக இருப்பது
மாநிலத்து = பெரிய உலகில்
மன்னுயிர்க் கெல்லாம் = நிலைத்த உயிர்களுக்கெல்லாம்
இனிது = இனிமை பயப்பது
இப்படித்தான் நாம் பொருள் கொள்வோம்.
இதற்கு பரிமேலழகர் உரையை படித்தால்தான் தெரியும் அதன் நுணுக்கம். இன்னொரு நூறு பிறவி எடுத்தால் கூட நம்மால் அந்த அளவுக்கு சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.
"அறிவுடமை" என்றால் என்ன? படித்து பட்டம் வாங்கி வருவதா? நிறைய பட்டம் வாங்குவது, மெடல் வாங்குவது போன்றவையா? அப்படிப் பார்த்தால் வருடத்துக்கு ஒரு பல்கலை கழகத்தில் ஒரு சில பேருக்குத்தான் கிடைக்கும். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் வருத்தப் படுவார்களா?
அது ஒரு புறம் இருக்க, படித்து பட்டம் பெற்று விட்டால் போதுமா?
பரிமேலழகர் சொல்கிறார்
"ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை"
அறிவு வேறு, கல்வி வேறு.
அறிவு என்பது இயற்கையாகவே இருப்பது. கல்வி என்பது படித்து வருவது.
கல்வி, அறிவுடைமை என்று தனித் தனி அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். அது பற்றி பின்னால் மிக விரிவாக பார்க்க இருக்கிறோம்.
இயல்பான அறிவு இருக்க வேண்டும், அதோடு கூட கல்வியும் சேர வேண்டும். ஒன்று இருந்து மற்றது இல்லாவிட்டால் பலன் இல்லை.
"மன்னுயிர்க்கு" ...
தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
தமக்கு என்றும் இனிமை
என்று எழுதி இருக்க வேண்டும்.
என் பிள்ளை அறிவுடையவனாக இருந்தால் பக்கத்து வீட்டு காரனுக்கு என்ன அதில் இன்பம்?
பின் ஏன் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் என்று எழுதினர்?
ஒரு பிள்ளை அறிவுடையவனாக இருந்தால், அது அந்தப் பிள்ளையின் பெற்றோருக்கு மட்டும் அல்ல, அனைத்து உயிர்களுக்கும் இன்பம் என்கிறார்.
எப்படி?
ஒரு அறிவியல் அறிஞர் ஒரு நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறார். அவருக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. அவருடைய பெற்றோர்கள் அதனால் பெருமை அடைவார்கள். சரி. அதோடு நிற்கிறதா? அந்த மருந்தினால் உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பயன் பெறுகின்றன அல்லவா?
யாரோ கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன் தருகிறது அல்லவா? உயிர்கள் எல்லாம் மகிழ்கின்றன அல்லவா?
யாரோ ஒரு இசை கலைஞன் பாடுகிறான். அவனுக்கு பேரும் புகழும் கிடைப்பது ஒரு புறம் என்றாலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதைக் கேட்டு இன்புறுகிறார்கள் தானே.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நிலைத்து நிற்கும் உயிர்களுக்கு எல்லாம் என்கிறார். காரணம், ஒருவன் இப்போது ஏதோ ஒன்று கண்டு பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். து இப்போது உள்ள மக்களுக்கு மட்டும் அல்ல, இனி வரும் சந்ததிகளுக்கும் பயன் தரும் அல்லவா? பென்சிலின் என்ற மருந்து எப்போதோ கண்டு பிடிக்கப்பட்டது. இப்போதும் அது உயிர்களை காத்துக் கொண்டு இருக்கிறது அல்லவா?
எப்போதோ எழுதிய குறள். இன்றும் நமக்கு இன்பம் தருகிறதா இல்லையா. நிலைத்து நிற்கும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் என்றார்.
அது மட்டும் அல்ல
"மாநிலத்து" என்றால், ஒருவன் அறிவுடையவனாக இருந்தால் அதன் பயன் அவன் பிறந்த ஊருக்கு மட்டும் அல்ல, உலகம் அனைத்துக்கும் பலன் தரும். யாரோ கண்டு பிடித்த கணணி (கம்ப்யூட்டர் ), உலகம் அனைத்துக்கும் பயன் தருகிறது அல்லவா?
எனவே, பெற்றோர்களை விட, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்பம் அடையும் என்கிறார்.
இப்படி எல்லாம் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது.
"இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது"
என்று முடிக்கிறார் பரிமேலழகர்.
பிள்ளைகளைப் பெற்று, அவர்களை அறிவுடையவர்களாக ஆக்கி விட்டால், உலகம் இன்புறும்.
சரி, நம்மை விட நம் பிள்ளகைள் அறிவானவர்களாக இருந்தால் உலகம் இன்புறும் அவர்கள் பிள்ளைகள், அவர்களை விட அறிவாளிகளாக இருப்பார்கள் அல்லவா? இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் அறிவுடையவர்காக இருந்தால், ஒரு பத்து தலைமுறையில் இந்த உலகம் எவ்வளவு சிறந்து இருக்கும்?
"தம்மில் தம் மக்கள்".
அப்பாவை விட மகன்
மகனை விட பேரன்
எவ்வளவு நீண்ட, ஆழமான சிந்தனை.
ஒன்றே முக்கால் அடியில்.
என்ன ஒரு அருமையான வரிகள்! அதன் விளக்கம்அதை விட அருமை வலிமை
ReplyDeleteபரிமேலழகர் உரையைப் படித்தால், குறளின் பொருள் இன்னும் மெருகேறுகிறது. நன்றி.
ReplyDelete