Sunday, October 17, 2021

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான்

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான் 


இராவணன் பாத்திரத்தை கம்பன் செதுக்கியது போல இன்னொரு பாத்திரத்தை செதுக்கினானா என்று தெரியவில்லை. 


ஒரு புறம் மாபெரும் வீரம், இந்திராதி தேவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வீரம், இன்னொரு புறம் அளவுகடந்த சிவ பக்தி, இன்னொரு புறம் இறைவனை இறங்கி வரச் செய்யும் இசை ஞானம், மறு புறம் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவு....இது எல்லாம் ஒரு புறம். 


இன்னொரு புறம், சீதையின் மேல் அளவு கடந்த காமம், தம்பிகள் மேல் வாஞ்சை, மகன் மேல் உயிர் உருகும் அன்பு....


அறிவு, வீரம், காமம், காதல், பாசம், அன்பு என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறான். 


அவனின் வீரம், கம்பீரம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் காமத்தால் அவன் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் என்று பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. 


இராவணன், சீதையை பார்த்துப் பேசும் இடங்கள்...நான் என்ன சொல்ல அந்த கவிதைகளை நீங்களே பாருங்கள். 


அசோகவனம் நோக்கி இராவணன் வருகிறான்....


"உலகில் உள்ள பெரிய மலைகள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும். அது போல இருந்தது பத்துத் தலையோடு இராவணன் வருவது. உடல் எங்கும் ஆபரணங்கள். அதில் இள வெயில் பட்டு ஜொலிக்கிறது. அது கடல் நீரில் சூரிய ஒளி பட்டு மின்னுவது போல இருக்கிறது. அவன் வரும் போது இரவு கூட பகல் போல ஒளி விடும்"


பாடல் 


 சிகர வண்குடுமி நெடு வரை எவையும்

     ஒரு வழித்திரண்டன சிவண,

மகரிகை வயிரகுண்டலம் அலம்பும்

     திண்திறல் தோள் புடை வயங்க,

சகர நீர் வேலைதழுவிய கதிரின்,

     தலைதொறும்தலைதொறும் தயங்கும்

வகைய பல் மகுடம்இள வெயில் எறிப்ப,

     கங்குலும்பகல்பட, வந்தான்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_17.html


(please click the above link to continue reading)





 சிகர = சிகரங்கள், மலைகள் 


 வண்குடுமி = உயர்ந்த உச்சி, மலை உச்சி 


நெடு வரை = நீண்ட மலைகள் 


எவையும் = அனைத்தும் 


ஒரு வழித்திரண்டன சிவண, = ஓரிடத்தில் சேர்ந்தது போல 


மகரிகை = மீன் வடிவாய் அமைந்த ஆபரணங்கள் 


வயிரகுண்டலம் = வயிரத்தால் அமைந்த காதில் அணியும் குண்டலம் 


அலம்பும் = அசையும் 


திண்திறல் தோள் புடை = புடைத்த, உறுதியான தோள்களில் 


வயங்க = விளங்க 


சகர நீர் வேலை  = சகர புத்திரர்கள் தோண்டியதால் உண்டானது சாகரம். கடல். அந்த கடல் நீரில் 


தழுவிய கதிரின் = பிரதிபலிக்கும் சூரிய ஒளி 


தலைதொறும்தலைதொறும்  = ஒவ்வொரு தலையிலும் 


தயங்கும் = விளங்கும் 


வகைய = விளங்கும் 


பல் மகுடம் = பல மகுடங்கள் (பத்து) 


இள வெயில் எறிப்ப, = இளமையான வெயில் (மாலை நேரமாக இருக்கும்) 


கங்குலும்பகல்பட, வந்தான். = இரவு கூட பகல் போல் வெளிச்சமாக தோன்றும் படி வந்தான். 


என்ன ஒரு buildup.


கடலுக்கு சாகரம் என்று ஒரு பெயர் உண்டு. 


சகர புத்திரர்கள் தோண்டியதால் அதற்கு சாகரம் என்று பெயர்.


அந்தக் கதையை இங்கே காணலாம். 


https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2014/oct/31/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1004451.html





2 comments:

  1. ராவணனின் ஆகிருதி, நடை,உடை,அலங்காரம், வலிமை எல்லாம் கம்பனின் பாடலில் அற்புதமாக வெளிப் படுகிறது. உங்கள் விவரிப்பு சற்றும் குறைவில்லாமல் வெளிப் படுகிறது.
    எதற்கும் எவருக்கும் அச்சாமல் அடக்கி ஆளும் திறமை படைத்த இந்த வீரன் சீதையின் முன் இறைஞ்சுகிறான் என்றால் என்ன காரணம்? அவள் இட்ட ஆணையின் பயத்தினாலோ?

    ReplyDelete
  2. தூரிகையால் படம் வரையலாம். இங்கே வார்த்தைகளால் கம்பர் படம் வரைந்து விட்டார்!

    நன்றி.

    ReplyDelete