Sunday, October 10, 2021

திருக்குறள் - சான்றோன் எனக் கேட்ட தாய்

திருக்குறள் - சான்றோன் எனக் கேட்ட தாய் 


பெண் விடுதலையாளர்கள் தங்கள் கொடிகளை எடுத்துக் கொள்ளலாம். கொடி பிடிக்கும் நேரம் இது. 


"தன்னுடைய புதல்வனை மற்றவர்கள் சான்றோன் என்று சொல்லக் கேட்டத் தாய், அவனை ஈன்ற பொழுதை விட மிக மகிழ்வாள்" 


என்கிறது அடுத்த குறள். 


அது என்ன தாய்க்கு மட்டும் தனியாக சொல்லுவது? அவளுக்கே தெரியாதா? மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? 


ஆணாதிக்கம். பெண்ணடிமை...என்று கொடி பிடிப்பவர்கள் ஒரு புறம் பிடிக்கட்டும். 


நாம் குறளைப் பார்ப்போம். 


பாடல் 


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_53.html


(Please click the above link to continue reading)



ஈன்ற பொழுதிற் = பெற்றெடுத்த நேரத்தை விட 


பெரிதுவக்கும் = மிக மகிழும் 


தன்மகனைச் = தன்னுடைய மகனை 


சான்றோன் = சான்றோன் 


எனக்கேட்ட தாய் = என்று சொல்லக் கேட்டத் தாய் 


இதன் ஆழமும், நுணுக்கமும் பரிமேலழகர் இல்லாமல் புரியாது. 


முந்தைய குறளில் 


தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

மன்னுயிர்க்கெலாம் இனிது 


என்று கூறினார். 


மாநிலத்து மன்னுயிரில் தாய் கிடையாதா? சொன்னதையே ஏன் திருப்பி திருப்பிக் கூற வேண்டும்? கூறியது கூறல் குற்றம் இல்லையா?


பரிமேலழகர் விளக்கம் சொல்கிறார். 


"தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது"


என்கிறார். 


எல்லோரும் மகிழ்வார்கள். ஆனால், ஒரு தாயின் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. அவளின் மகிழ்ச்சி அளவிடமுடியாத தனி மகிழ்ச்சி என்பதால் அதற்கென்று ஒரு தனிக் குறள் வைக்கிறார் வள்ளுவர்.  பெண்ணடிமை? 


சொல்லக் கேட்டத் தாய் - "பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். "


ஒரு தாய்க்கு, தன் மகன் என்ன பெரியவன் ஆனாலும் அது தெரியாது. அவளுக்கு அவன் பிள்ளை. அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு. தன் மடியில் படுத்து பால் அருந்திய பிள்ளையாகத் தான் அவன் தெரிவான். மற்றவர்கள் வந்து சொல்லும் போது தான் "அட, இவனா இவ்வளவு பெரியவனாகி விட்டான்...பார்ரா" என்று மகிழ்வாளாம். அவன் என்ன சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் அவளுக்கு அவன் எப்பவுமே "ராசா" தான். மற்றவர்கள் சொல்லும் போது தான் தெரியும், அவன் உண்மையிலேயே 'ராசா" என்று.  அதனால்தான் "கேட்ட தாய்" என்றார்.   ஆணாதிக்கம்? 


"பெரிதுவக்கும்" - சான்றோன் என்று கேட்டால் பெரிதாக மகிழ்வாள். அப்படி என்றால் சாதரணமாக மகிழ்ந்த தருணம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அது எது? அது ஈன்ற பொழுது.  பிள்ளையை பெற்ற அந்தக் கணத்தில் மகிழ்ந்தாள். அவனை சான்றோன் என்று கேட்ட போது அதனினும் மகிழ்ந்தாள் என்கிறார். 


"சான்றோன்" - பிள்ளை கோடீஸ்வரன் ஆகி விட்டான், பட்டம் பெற்று விட்டான் என்பதில் எல்லாம் மகிழ்ச்சி கிடையாது. சான்றோன் என்பது ஒரு மனிதனுக்கு தரும் அதிகபட்ச உயர்வு அடை மொழி. கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்த ஒருவனைத்தான் சான்றோன் என்று உலகம் கூறும். படித்தால் மட்டும் போதாது, பணம் சேர்த்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் வேண்டும்.  நிறைய படித்து, நிறைய பணம் சம்பாதித்து இப்போது உன் மகன் சிறையில் இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் எந்தத் தாய் மகிழ்வாள்? 


"மகனை" என்று இருக்கிறது. மக்களை என்று இல்லை. சான்றோன் என்று இருக்கிறது. சான்றோர் என்றோ சான்றோள் என்றோ இல்லை. என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது கொடி. பிடிக்க வேண்டியதுதான். 


"சான்றோன் எனக் கேட்ட தாய்": சான்றோன் என்று யார் சொல்லக் கேட்டத் தாய்?  யார் வேண்டுமானாலும் சொல்லலாமா? பரிமேலழகர் சொல்கிறார் "தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்" என்று. 


ஏன்? 


ஒருவன் சான்றோனா இல்லையா என்பது அறிவுடையாற்குத் தான் தெரியும் என்பதால்.  


உலகம், தந்தை என்று எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, தாய்க்கு என்று ஒரு தனிக் குறள் வைத்து சிறப்பிக்கிறார் வள்ளுவர். 


தாய் தந்தை என்ற பாகுபாடெல்லாம் மறைந்து வரும் காலம் இது. பெண்கள், ஆண்களாக மாற படாத பாடெல்லாம் படுகிறார்கள். வரும் காலங்களில் மீசை, தாடி எல்லாம் கூட வைத்துக் கொண்டு வருவார்கள் போலத் தெரிகிறது. 


ஏன், நாங்கள் மீசை வைக்கக் கூடாதா? எங்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று கேட்கும் காலம் வரலாம். கூந்தலை குறைத்தாகி விட்டது. மீசையும் வளர்த்து விட்டால் என்ன ஆகி விடும். 


ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை 

சான்றோன் எனக் கேட்ட தாய்



 





1 comment:

  1. அருமையான உணர்ச்சி ததும்பும் குறள் இது.

    ஆண்-பெண் செய்தி சரியில்லைதான், இருந்தாலும் வள்ளுவரை மன்னித்து விடலாம்!

    ReplyDelete