நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒக்கலையில் கொண்டு
குழந்தையை கொஞ்சுவது போல ஒரு சுகம் உலகில் இல்லை.
குழந்தையை தோளில் போட்டு தூங்க வைப்பது, அதோடு விளையாடுவது, அது நம் விரல் பிடித்து நடப்பது எல்லாம் அவ்வளவு சுகம்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
என்பார் வள்ளுவர். குழந்தைகள் நம்மை கட்டி அணைப்பது நம் உடலுக்கு இன்பம். அவர்கள் சொல்லும் மழலையைக் கேட்பது செவிக்கு இன்பம் என்கிறார்.
பெண்களுக்கு ஒரு படி மேலே. குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொள்வார்கள். அவர்கள் இடுப்பு குழந்தை அமர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் பெண்களின் இடுப்பு ஒடுங்கி இருந்தது.
"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு" என்று ஔவையார் சொன்னால், "ஆகா, பெண்கள் பட்டினி கிடக்க வேண்டுமா? நீங்கள் எங்களை பார்த்து இரசிக்க நாங்கள் பட்டினி கிடந்து துன்பப் பட வேண்டுமா? நாங்களும் நல்லா சாப்பிடுவோம்" என்று பெண் விடுதலை பேசி, இடுப்பு என்பதே இல்லாமல் தூண் போல ஆகும் ஒரு தலைமுறை வந்து கொண்டு இருக்கிறது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
கண்ணன் தெருவில் விளையாடுகிறான். அவன் மேல் அங்குள்ள பெண்களுக்கு அவ்வளவு அன்பு, ஆசை. போவோர் வருவோர் எல்லாம் அவனை தூக்கி தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு "வா, நம்ம வீட்டுக்குப் போகலாம்" என்று தூக்கிக் கொண்டு போய் விடுவார்களாம்.
அங்கு கொண்டு போய், அவனோடு ஆசை தீர விளையாடுவார்களாம்.
வீட்டுல உள்ள பெண் பிள்ளைகள் அவனோடு விளையாடுவார்கள். கொஞ்சுவார்கள். மற்றவர்களுக்கு அவன் செய்வதைப் பார்த்து அப்படி ஒரு சந்தோஷம்.
அந்தக் காட்சியை மனதில் கண்டு, பெரியாழ்வார், கண்ணனை நோக்கி, "கண்ணா, நீ நல்லா ஆடு" என்று நேரில் பார்த்து கூறுவதைப் போலக் கூறுகிறார்.
பாடல்
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*
என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_12.html
(Pl click the above link to continue reading)
உன்னையும் = உன்னை (கண்ணனை)
ஒக்கலையில் கொண்டு = இடுப்பில் தூக்கிக் கொண்டு
தமில்மருவி = தம் + இல் + மருவி = தங்களது இல்லத்துக்கு தூக்கிச் சென்று
உன்னொடு = உன்னோடு (கண்ணனோடு)
தங்கள் கருத்தாயின செய்துவரும் = தங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றியதோ அப்படி எல்லாம் விளையாடி
கன்னியரும் மகிழக் = பெண்கள் அவனைக் கொஞ்சி, அவன் கூட விளையாடி மகிழ
கண்டவர் கண்குளிரக் = அதைப் பார்பவர்கள் மனம் குளிர
கற்றவர் = படித்தவர்கள்
தெற்றிவரப் பெற்ற = அருள் கொண்டு நோக்கப் பெற்ற
எனக்குஅருளி = எனக்கு (பெரியாழ்வார்) அருள் செய்து
மன்னுகுறுங் குடியாய்! = நிலைத்து நிற்கும் புகழுடைய திருக்குறுங்குடி என்ற தலத்தில் உறைபவனே
வெள்ளறையாய்! = திரு வெள்ளறை என்ற தலத்தில் இருப்பவனே
மதிள்சூழ் = கோட்டை மதிள் சூழ்ந்த
சோலைமலைக் கரசே! = திருமாலிருஞ்சோலைக்கு அரசனே
கண்ண புரத்தமுதே! = கண்ணபுரத்தில் இருக்கும் அமுதம் போன்றவனே
என்னவலம் = என் அவலம் (துன்பம்)
களைவாய்! = நீக்குவாய்
ஆடுக செங்கீரை = ஆடுக
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. = ஏழு உலகம் உடையவனே ஆடுக, ஆடுகவே
(செங்கீரை என்பது ஒரு குழந்தைப் பருவம்)
பெரியாழ்வார் கற்பனையில் காண்கிறார். கண்ணன் தெருவில் விளையாடினால் அங்கு என்னவெல்லாம் நிகழ்ந்து இருக்கும் என்று.
அவர் கற்பனையில் கண்டது மட்டும் அல்ல, அதை நம் கண் முன்னே கொண்டு வந்தும் நிறுத்தி விடுகிறார்.
ஏதோ நாமும் கண்ணனை நம் வீட்டுக்கு கொண்டு வந்து அவன் கூட விளையாடுவது போல இருக்கிறது.
அவ்வளவு அன்யோன்யம்.
பிரபந்தம் படிக்க ஒரு மனம் வேண்டும்.
No comments:
Post a Comment