நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்று ஒன்றிலம் கதியே
ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். சண்டை என்பது இன்று நேற்று அல்ல, அந்தக் காலத்திலும் இதே தான்.
இரண்டு பக்கமும் ஆட்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை என்றால் இழப்பு இருக்கத்தானே செய்யும்.
சண்டையும் போட வேண்டும், ஆளும் இறக்கக் கூடாது...அதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். அமுதம் உண்டால் இறப்பு வராது என்று அறிந்து கொண்டார்கள். அமுதம் பாற்கடலை கடைந்தால் வரும்.
பாற்கடலை எப்படி கடைவது? எந்த மத்தில், எந்த கயிறைக் கொண்டு அதை கடைய முடியும்?
முடிவாக மேரு மலையை மத்தாக, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு கடைவது என்று முடிவு செய்தார்கள்.
மலையை தலைகீழாக நட்டு ஆகி விட்டது. பாம்பை சுத்தியாச்சு. யார் வால் பக்கம், யார் தலைப் பக்கம் என்ற சர்ச்சை வந்தது. எப்படியோ பேசி சமாளித்து, அசுரர்களை தலைப் பக்கம் பிடிக்க சொல்லி விட்டார்கள் தேவர்கள்.
கடைந்தார்கள். வாசுகி என்ற பாம்புக்கு உடல் எல்லாம் வலி. வலி பொறுக்க முடியாமல், அது விஷத்தை கக்கியது. வாசுகியின் விஷம் என்றால் சும்மாவா?
யாராலும் தாங்க முடியவில்லை. எல்லோரும் சிவனிடம் ஓடினார்கள். அவர் அதை எடுத்து விழுங்கினார். அம்பாள் அதை அவருடைய தொண்டைக் குழியில் நிறுத்தி விட்டாள்.
அமுதம் வந்தது. யாருக்கு எவ்வளவு என்ற சண்டை ஆரம்பம் ஆனது.
அப்போது திருமால் மோகினி வடிவம் கொண்டு வந்து, ஆடிப் பாடி அந்த அமுதத்தை எல்லாம் தேவர்களுக்கே கொடுத்து விட்டார்.
அது புராணக் கதை. எல்லோருக்கும் தெரிந்த கதை.
அப்படி அமுதம் கொடுத்த இடம் மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற இடம்.
திரு மோகனி ஊரு, திரு மோகன ஊர், திரு மொமொகனுர் , திருமோகூர் என்று ஆகி மருவி விட்டது.
சின்ன கிராமம். மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் இருக்கிறது.
இந்தத் தலத்துக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து இருக்கிறார்.
பத்துப் பாடல்கள்.
அத்தனையும் தேன். கற்கண்டு.
பாடலை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் காலத்தில் பின்நோக்கிப் போக வேண்டும்.
அது ஒரு சின்ன கிராமம். அந்தக் காலம். மின்சாரம், பெட்ரோல், தொழிற்சாலை இல்லாத காலம். எங்கும் இயற்கை. வயல்கள், குளம், குட்டை, ஆறு, நீர் நிலைகள். எங்கும் பச்சை பசேல் என்று இருக்கும் கிராமம்.
அங்குள்ள நீர் நிலைகளில் தாமரை மலர்கள் பூத்து நிறைந்து இருக்கின்றன. ஊரைச் சுற்றி பசுமையான வயல்கள். குளிர்ச்சி. அந்த வயல்களைச் சூழ்ந்து குளங்கள். அதில் சிவந்த தாமரை மலர்கள்.
பச்சை வயல். நடு நடுவே சிலு சிலுவென்ற நீர். சுற்றி சிவந்த தாமரை நிறைந்த குளங்கள்.
கற்பனையில் பார்க்க வேண்டும்.
ஊருக்குள் நுழைந்து பெருமாளை சேவிக்கிறார் நம்மாழ்வார்.
நான்கு தோள்கள், சுருள் சுருளாக முடி, தாமரை போன்ற கண்கள், அழகான உதடுகள்...
கண்ணீர் மல்குகிறது. இதை விட வேறு என்ன வேண்டும் என்று உருகுகிறார்.
பாடல்
தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. (3891)
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_31.html
(Pl click the above link to continue reading)
தாள = தாள் என்றால் நார், தண்டு. தண்டு உள்ள
தாமரைத் = தாமரை மலர்கள்
தடமணி = அந்த தாமரை மலர்களை அணிகலனாக அணிந்த
வயல் = வயல்கள் நிறைந்த
திருமோகூர் = திருமோகூர்
நாளும் மேவி = தினம் தோறும் சென்று
நன் கமர்ந்து = நன்கு அமர்ந்து
நின் ற = நின்ற
அசுரரைத் தகர்க்கும் = அசுரர்களை வதைக்கும்
தோளும் நான்குடைச் = நான்கு தோள்கள் உடைய
சுரிகுழல் = சுருட்டை முடி
கமலக்கண் = தாமரை போன்ற கண்கள்
கனிவாய் = சிவந்த அதரம்
காள மேகத்தை யன் றி = அந்தக் கோவிலில் உள்ள காளமேகப் பெருமாளைத் தவிர
மற் றொன்றிலம் = வேறு ஒன்றும் இல்லை
கதியே. = வழியே
இந்தா இருக்கு மதுரை. ஒரு எட்டு எடுத்து வைத்தால் போய் வரலாம். இப்ப தான் கொரோனா எல்லாம் இல்லையே. போய்டு வாங்க.
இன்னும் ஒன்பது பாசுரங்கள் இருக்கின்றன.
No comments:
Post a Comment