Saturday, March 19, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - தோற்றமும் மறைவும்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - தோற்றமும் மறைவும் 


நமது பக்தி இலக்கியங்கள் எல்லாம் தோற்றம், இருத்தல், மறைதல் என்பது பற்றி பேசுகின்றன. 


பிரம்மா படைப்பு கடவுள், விஷ்ணு காக்கும் கடவுள், உருத்திரன் அழிக்கும் கடவுள் என்று பேசுகின்றன. 


இவை எல்லாம் ஒருவித மயக்கமே.


தோற்றமும், அழிவும், இருத்தலும் வேறு வேறு அல்ல. 


ஒரு பானை செய்கிறோம் என்றால் களிமண் அழியும், பானை உண்டாகும். களிமண்ணே இல்லாமல் பானை உருவாக்க முடியுமா?


தங்கத்தை உருக்கி, நகை செய்கிறோம்.. கட்டியாக இருந்த தங்கம் அழிந்து, ஆபரணமாக உள்ள தங்கம் வெளிப்படுகிறது. இதில் தோற்றம் என்ன, அழிவு என்ன. 


ஒரு அழிவில் ஒரு தோற்றம் உண்டாகிறது. ஒரே சமயத்தில். இன்று அழிவு ஒரு வாரம் கழித்து தோற்றம் என்று இல்லை. அழிவும் தோற்றமும் ஒரு செயல்தான்.


விதை அழிகிறது, செடி முளைக்கிறது. இன்று விதை அழிந்து அடுத்த மாதம் செடி முளைக்கும் என்று அல்ல. 


தோற்றம் தான் அழிவு. அழிவுதான் தோற்றம். ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. 


இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_68.html


(pl click the above link to continue reading)


ஆக்கம், காத்தல், அழிதல் என்பது முத்தொழில் அல்ல. அது ஒரே தொழில்தான். 


ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கும். வட்டத்தின் தொடக்கம் எது, முடிவு எது?  தொடங்கிய இடம் தான் முடியும் இடமும். முடியும் இடம் தான் தொடக்கமும். 


அடியும் முடியும் தெரிய முடியாது. சுத்தி சுத்தி வர வேண்டியது தான். 


மும்மூர்த்திகள் என்று சொல்வது ஒரு வசதிக்குத் தான். எல்லாம் ஒரு மூர்த்தி தான். இருப்பது ஒரு வேலைதான். 


நகை செய்யும் ஆசாரி தான் தங்கத்தையும் அழிக்கிறார். 


பெரிய மரத் துண்டு கிடக்கிறது. அதை வெட்டி, நறுக்கி, இழைத்து ஒரு மேஜை செய்கிறார் ஒரு தச்சர்.


மரத்தை வெட்டியது ஒருவர், மேஜையை செய்தவர் இன்னொருவரா? 


நான் உணவு உண்கிறோம். வளர்கிறோம். கல்யாணம் செய்து கொள்கிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். மறைந்து போகிறோம். நம்மை புதைத்து விடுகிறார்கள். நம் உடல் மக்கி, உரமாகி செடி கொடி மரமாகி, உணவாகிறது. 


இது ஒரு சுழற்ச்சி. அவ்வளவுதான். 


இதைத் தான் அறிவியல் Law of conservation of Mass என்கிறது. ஒரு பொருளை உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறும். அவ்வளவுதான். 


தோன்றுகிறது, இருக்கிறது, அழிகிறது என்று சொல்லுவதெல்லாம ஒரு மயக்கமே. 


மேஜை செய்யும் தச்சரை மரத்தை அழிப்பவர் என்று சொல்லலாமா? சொல்லலாம். அவர் தான் அழித்தார். 


தோட்டக்காரரை விதை அழிப்பவர் என்று சொல்லலாமா? விதையை அப்படியே வைத்துக் கொண்டு தோட்டம் போட முடியாது. விதை அழிய வேண்டும். 


எனவே, இந்த தோற்றம், இருத்தல், அழிவு என்பதெல்லாம் ஒரே செயலின் தொடர் வினைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். 




சரி, இதெல்லாம் எதுக்கு? சிவ ஞான போதம் எங்கே என்று கேட்கிறீர்களா?


வருகிறது. இது புரிந்தால் தான் சூத்திரம் புரியும். 


இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அதையும் பார்த்து விட்டு சூத்திரத்துக்குள் நுழைவோம். 


சரியா?



2 comments:

  1. சிவ ஞான போதம் அறிமுக படுத்துதற்கு மிக்க ந‌ன்றி! வணக்கம்!

    ReplyDelete