Thursday, March 24, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - தொகுப்புரை

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - தொகுப்புரை 


இதுவரை செய்நன்றி அறிதல் பற்றி சிந்தித்தோம்.


என்ன படித்தோம்?  எவ்வளவு நினைவில் நிற்கிறது?  என்ன சொல் வந்தார்? நமக்கு என்ன புரிந்தது? 


இவற்றை ஒரு தொகுப்பு உரையாக பார்ப்போம். 


திருக்குறள் மொத்தமுமே ஒரு அறநூல். அறத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். 


இல்லறம், துறவறம் என்று. 


முதலில் இல்லறத்தை எடுத்துக் கொள்கிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_24.html



(Please click the above link to continue reading)


அதில், முதலில் உலகம் தோன்றக் காரணமான இறைவனை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடினார். 


பின், இல்லறமும், துறவறமும் இனிது நடக்க வேண்டும் என்றால் மழை வேண்டும். மழை இல்லை என்றால் சிறப்பொடு, பூசனை செல்லாது என்பதால் அனைத்து அறங்களுக்கும் ஆதாரமான மழை பற்றி வான் சிறப்பு கூறினார். 


பின், அறங்கள் நிலைக்க வேண்டும் என்றால் அதை யாராவது உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறான முனிவர்களை சிறப்பித்து "நீத்தார் பெருமை" பற்றிக் கூறினார். 


பின், அந்த நீத்தார் கூறும் அறத்தின் வலிமை பற்றி "அறம் வலியுறுத்தல்" என்று கூறினார். அறம் என்பது இம்மை, மறுமை, வீடு பேறு என்ற மூன்றிற்கும் வழி கோலும் என்பதால் அதன் சிறப்பு பற்றிக் கூறினார். 


பின்,  இரண்டு அறங்களில் இல்லறம் முதலில் வருவதால், அதன் சிறப்பு பற்றி "இல் வாழ்க்கை" என்ற அதிகாரத்தில் கூறினார். 


பின், இல்லறம் நடத்த மனைவியின் துணை இன்றி முடியாது என்பதால், "வாழ்க்கை துணை நலம்" என்று மனைவியின் பெருமை பற்றிக் கூறினார். 


பின், கணவனும் மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தின் பலனாக அவர்கள் பெறும் பிள்ளைகளின் சிறப்பு கூற "புதல்வரைப் பெறுதல்" என்ற அதிகாரம் கூறினார். 


பின், கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற இல்லறத்தின் அடி நாதமான அன்பு பற்றி  "அன்புடைமை" பற்றிக் கூறினார். 


பின், இல்லறம் என்பது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டும் அல்ல. அந்த அன்பு வீடு தாண்டியும் விரியும் , விரிய வேண்டும் என்பதால் என்பதால் "விருந்தோம்பல்" பற்றிக் கூறினார். 


பின், விருந்தோம்பலை சிறப்பாகச் செய்ய இனிய சொற்கள் அவசியம் என்பதால் "இனியவை கூறல்" என்ற அதிகாரம் செய்தார். 


பின், இனியவை கூறி, உறவினர் தம்பால் வந்து தமக்கு ஒரு உதவி செய்தால், அதை மறக்கக் கூடாது என்பதைச் சொல்ல "செய்நன்றி அறிதல்" என்ற அதிகாரம் செய்தார். 


அந்த செய்நன்றஅறிதல் என்ற அதிகாரத்தில் ,


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது


என்ற முதல் மூன்று குறள்களில் செய்யாமல் செய்த உதவி, காலத்தால் செய்த உதவி, பயன் கருதாமல் செய்த உதவி என்று உதவியின் சிறப்பு பற்றிக் கூறினார். 


அடுத்தது, 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.


என்ற அடுத்த இரண்டு குறள்களில் மேலே சொன்ன மூன்று மட்டும் அல்ல, உதவியின் தரம் அதைப் பெற்றுக் கொண்டவரைப் பொருத்தும் சிறக்கும் என்று கூறினார். 


அடுத்தது, 


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


செய்நன்றி அறிதலின் இம்மை, மறுமை பலன்கள் பற்றிக் கூறினார்.


 அடுத்தது, 


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.


என்ற இரண்டு குறள்களில் நன்றி மறப்பதும், மறவாமை பற்றியும் கூறினார். 


அடுத்தது, 


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.



எப்படி நன்றியை மறக்கக் கூடாதோ, அதே போல் நல்லது அல்லாததை மறப்பது பற்றிக் கூறினார். 



அடுத்த கடைசிக் குறளில், 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


நன்றி கொன்ற பாவம் பற்றி கூறி முடிக்கிறார். 


இந்த தொகுப்பு இது வரை படித்ததை ஒரு முறை நினைவு படுத்தும் முயற்சி. 


உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.




1 comment:

  1. அருமையான தொகுப்பு. நன்றி.

    ReplyDelete