குரு பூர்ணிமா - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
இன்று குரு பூர்ணிமா. குருவுக்கு வணக்கும் சொல்லும் நாள்.
குரு என்பவர் ஏதோ பள்ளிக் கூடத்தில், கல்லூரியில் பாடம் சொல்லித் தருபவர் மட்டும் அல்ல. யாரிடம் இருந்து எல்லாம் நாம் பாடம் கற்றுக் கொள்கிறோமோ, அவர்கள் எல்லோரும் நமக்கு குரு தான்.
சில சமயம் நம் எதிரிகள், நமக்கு துன்பம் செய்பவர்கள், தீமை செய்பவர்கள் கூட நமக்கு சிலவற்றை சொல்லித் தருவார்கள். சொல்லித் தர வேண்டும் என்று செய்வது அல்ல. அவர்கள் செயலில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். அவர்களும் குருதான்.
அவர்களுக்கும் பணிவான வணக்கம்.
கற்றுக் கொள்ளும் மனம் அமைந்து விட்டால் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அறிவு இங்குதான் இருக்கும் என்று கட்டாயம் அல்ல.
பிள்ளையிடமே சிவன் கற்றுக் கொள்ளவில்லையா? யாராய் இருந்தால் என்ன. அறிவு தரும் எல்லோரும் குருதான்.
எல்லோருக்கும் வணக்கம்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_13.html
(click the above link to continue reading)
எவ்வளவோ புத்தகங்கள் படிக்கிறோம். பல விடயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அந்த புத்தகம் எழுதிய ஒவ்வொருவரும் நமக்கு குருதான். சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜையில் வைத்து கும்பிடுகிறோம். அது அந்த காகிதத்துக்கு செலுத்தும் வணக்கம் அல்ல. அந்த புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களுக்கு செலுத்தும் மரியாதை.
அனைத்து புத்தக ஆசிரியர்களுக்கும் வணக்கம்.
YouTube, ,WhatsApp, Facebook, , TV என்று பல இணைய தளங்கள் மூலம் பலவற்றை கற்றுக் கொள்கிறோம். அதன் மூலமும் குருவருள் வந்து கொண்டே இருக்கிறது. இணைய தளங்கள் மூலம் அறிவு தந்த அத்தனை குருமார்களுக்கும் வணக்கம்.
குரு என்பவர் மனித வடிவில் தான் இருக்க வேண்டும் என்று அல்ல. நாம் பட்ட துன்பங்கள், வலிகள், வேதனைகள் நமக்கு பலவற்றை சொல்லித் தந்திருக்கும். அவைகளும் நமக்கு குருதான்.
அத்தனை வலிகளுக்கும், வேதனைகளுக்கும், துரோகங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் குரு வணக்கம்.
பெயர் தெரியாத ரிஷிகள், முனிவர்கள், அருளாளர்கள், நாம் உய்ய வேண்டும் என்று உண்மைகளை எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். அத்தனை பெரியவர்களுக்கும் குரு வணக்கம்.
நல்ல நண்பர்கள் இதமாகவும், பதமாகவும்,பல சமயங்களில் இடித்தும் பலவற்றை சொல்லித் தந்திருப்பார்கள்.
சொல்லித் தந்த அத்தனை நண்பர்களுக்கும் குரு வணக்கம்.
கற்றுக் கொள்வது என்பது அறிவை மட்டும் அல்ல.
அன்பை, கருணையை, பாசத்தை, தியாகத்தை எல்லாம் கூட கற்றுக் கொள்ளலாம்.
தாயிடம், மனைவியிடம், மகளிடம், சகோதரியிடம், தந்தையிடம், கணவனிடம், மகனிடம், சகோதரனிடம் இருந்து நாம் அன்பை, கருணையை, பாசத்தைக் கற்றுக் கொள்கிறோம்.
"அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும், மாமியும் நீ" என்று உறவை எல்லாம் இறைவனாகப் பார்த்தார் நாவுக்கரசர்.
சொல்லித் தந்த அத்தனை உறவுகளுக்கும் குரு வணக்கம்.
எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராத கடன்களில் குருவுக்கு பட்ட கடன்.
கேளாமல் கிடைத்த வரம், குருவருள்.
கைகூப்பி வணங்கி, நன்றி சொல்வோம்.
அற்புதமான விளக்கம். ஒன்றையும் விட்டு விடலை. உங்களிடமிருந்து ஏராளமாக கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு மனமார்ந்த எனது நன்றியும் வணக்கமும் உரித்தாகுக.
ReplyDeleteபார்த்தசாரதி