திருவாசகம் - பரிணாம வளர்ச்சி
ஒரு காலத்தில் தமிழ் புலவர்களை திருவாசகத்துக்கு உரை எழுதித் தாருங்கள் என்று சொன்னால் "கடலில் விழுந்து சாகச் சொல்கிறீர்களா....சந்தோஷமாக சாகிறேன்...திருவாசகத்துக்கு உரை எழுத என்னால் முடியாது " என்று சொல்லி ஓடி விடுவார்களாம்.
திருவாசகம் என்பது அப்படிப்பட்ட ஒரு நூல்.
உணர்வு என்றால் உணர்ச்சி கொட்டிக் கிடக்கும் நூல்.
ஞானம் என்றால் ஞானத்தின் உச்சியை தொடும் நூல்.
இது ஏதோ சொல்லுக்கு உரை சொல்லும் கதை அல்ல.
படிக்கப் படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கும் ஒரு நூல். இதுக்கு இதுதான் அர்த்தம் என்று சொல்லி விட முடியாது.
இன்று இப்படித் தோன்றுகிறது. நாளை என்ன தோன்றுமோ? யாருக்குத் தெரியும்.
மணிவாசகரிடமே கேட்டார்கள்...."நீங்கள் எழுதிய இந்த நூலுக்கு என்ன பொருள்" என்று. சிவன் திருவடியைக் காட்டி "இது தான் பொருள்" என்று சொல்லி அதில் ஐக்கியமானார் என்று சொல்லுவார்கள்.
சிவ பெருமான், தானே தன் கையால் எழுதிய நூல் என்பார்கள். ஊழிக் காலத்தில் இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் அழிந்த பின்,தனித்து நிற்கும் இறைவன் தான் வாசிக்க ஒரு நூல் வேண்டும் என்று திருவாசகத்தை தன் கைப்பட எழுதினான் என்று சொல்லுவார்கள்.
பாடல்
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_63.html
(Please click the above link to continue reading)
நாம் பலமுறை கேட்டது தான். வாசித்தது தான்.
நாம் புல், பூண்டு, புழு இவற்றில் இருந்து வந்தோமா?
சரி, ஏதோ ஒரு பரிணாம வளர்ச்சியில் வந்தோம் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய அறிவியலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் போது நாம் ஒரு செல் நுண்ணுயிரிகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களானோம் என்கிறது.
ஆனால், கல்லாய் என்கிறார் மணிவாசகர். கல்லில் இருந்து நாம் வந்தோமா?
உயிரற்ற கல்லில் இருந்து எப்படி உயிர் வந்திருக்கும்?
அறிவியலில் விடை இல்லை.
ஒரு எளிய உயிரில் இருந்து ஒரு சிக்கலான உயிர் வருவதை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது.
உயிரற்ற ஒன்றில் இருந்து உயிர் வருமா?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த பிரபஞ்சம் தோன்றி, நட்சத்திரங்கள் தோன்றி, ,பின் கோள்கள் தோன்றின.
நம் பூமியும் அப்படி பிறந்த ஒன்று தான். முதலில் வெறும் தூசியாக இருந்து, ,பின் அவை ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டு, ஒன்றாகி ஒரு பெரிய பாறையாகி, இந்த பூமி உண்டானது. அந்தப் பாறையின் மேல் அமில மழை, வெயில் காற்று என்று மாறி மாறி தாக்கி அது மணலானது. அதில் இருந்து புல் முளைத்தது என்று நாம் அறிகிறோம்.
முதலில் பாறைதான் இருந்தது. அது வெடித்து, துகளாகி, மணலாகி, அதில் இருந்து தாவரங்கள், மற்றும் பிற உயிர்கள் தோன்றின.
எனவே, எல்லாம் கல்லில் இருந்துதான் வந்தது.
மணிவாசகர் சொல்லும் வரிசையில் அவை தோன்றவில்லை. மணிவாசகரும் அப்படிச் சொல்லவில்லை.
இதற்கு முன்னால் அவையெல்லாம் ஆக இருந்தேன் என்கிறார். அந்த வரிசையில் வந்தேன் என்று சொல்லவில்லை.
நாம் மனிதர்களாக பிறப்பதற்கு முன்னால் கல்லாகத்தான் இருந்தோம். நம்மை எல்லாம் "star dust" என்று கூறுவார்கள். நட்சத்திர தூசிகள் நாம்.
மணிவாசகருக்கு இந்த உலகம் எப்படி உருவானது என்று தெரியுமா?
இப்படி ஒரு சிந்தனை அவருக்கு எப்படி வந்தது?
நம் அறிவியல் ஓர்செல் உயிரில் இருந்து மனிதன் வரை எப்படி உயிர்கள் வளர்ந்தன என்று சொல்கின்றன.
குரங்கில் இருந்து மனிதன்.
மனிதனில் இருந்து?
அடுத்து என்ன? தெரியாது.
மணிவாசகர் சொல்கிறார்
"மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,"
பரிணாம வளர்ச்சி என்றால் அது மனிதனோடு ஏன் நிற்க வேண்டும்?
மணிவாசகர் மனிதாராக இருந்து இந்தப் பாடலை எழுதி இருக்கிறார்.
ஆனால்,பேயாகவும் அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் இருந்தேன் என்கிறார்.
அதாவது, பரிணாமம் கீழ் நோக்கியும் போகும் என்கிறார்.
தேவராக இருந்து மனிதராக ஆகி, ,பின் புல் பூண்டு கல்லாகவும் முடியும் என்கிறார்.
நாம் பல கதைகளில் படிக்கிறோம். தேவர்கள், கந்தர்வர்கள் சாபம் பெற்று மனிதராக, விலங்குகளாக பிறக்கிறார்கள் என்று படிக்கிறோம்.
கல்லாய் போகும் படி அகலிகை சபிக்கப் பட்டாள் என்று படித்து இருக்கிறோம் அல்லவா. கல் பின் பெண்ணானது.
"முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக"
என்று இரண்டு தீயவர்களை கவுந்தி அடிகள் சபித்தார் என்று சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.
மனிதர்கள் விலங்காகப் போனதற்கு அது ஒரு கதை. .
திருவாசகத்தை எப்படிப் புரிந்து கொள்வது?
படித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தெரிய வரும் நேரத்தில் தெரியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
உங்கள் பணி இதே போல் தொடர, மணிவாசகர் அருள் உங்களுக்கு கிடைக்க பரார்த்தனைகள்.
ReplyDeleteஅருமை அண்ணா
ReplyDelete