திருக்குறள் - பொறையுடைமை - நோற்பாரின் பின்
(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
குறள் 51: அகழ்வாரை
குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html
குறள் 53: வலிமையுள் வலிமை :
குறள் 54: நிறையுடைமை வேண்டின் :
குறள் 56: ஒரு நாள் இன்பம்
குறள் 57: அறன் அல்ல செய்யாமை
குறள் 58: தகுதியான் வென்று விடல்
குறள் 59: துறந்தாரின் தூய்மை உடையார்
)
இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு வந்து விட்டோம்.
வாழ்வின் நோக்கம், மனிதப் பிறவியின் நோக்கம் வீடு பேறு அடைவது. அந்த வீடு பேறு அடைவதற்கு பெரிய நீண்ட வரிசை நிற்கிறது. அந்த வரிசையில் முன்னால் நிற்பவர்கள், உலகப் பற்றுகளை துறந்து, உண்ணா விரதம் இருந்து, தவம் செய்யும் முனிவர்கள்.
அவர்களுக்குப் பின்னால் தான் இல்லறத்தில் உள்ளவன்.
அவர்கள் எப்போது போவது, இவன் என்று வீடு பேறு அடைவது.
வவ்ளுவர் ஒரு சிறப்பு வழி சொல்கிறார். இல்லறத்தில் உள்ளவன் முனிவர்களை, துறவிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் போய் விடலாம், எப்படி என்றால் பொறுமையை கடைப் பிடித்தால் என்கிறார்.
பாடல்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
பொருள்
((pl click the above link to continue reading)
உண்ணாது நோற்பார் = உணவை உண்ணாமல் விரதம் மேற்கொள்ளும்
பெரியர் = பெரியவர்கள், உயர்ந்தவர்கள், முனிவர்கள், துறவிகள்
பிறர்சொல்லும் = மற்றவர் சொல்லும்
இன்னாச்சொல் = நன்மை தராத சொற்களை
நோற்பாரின் பின் = பொறுத்துக் கொண்டவர்களுக்குப் பின்னால்
என்னத்துக்கு அனாவசியமா இருக்குறதை எல்லாம் துறந்து, சோறு தண்ணி இல்லாம, காட்டுல போய் கஷ்டப் படணும் ?
இல்லறத்தில் இருந்து கொண்டே அந்தப் பலன்களை எல்லாம் பெறமுடியும் என்கிறார் வள்ளுவர்.
அது மட்டும் அல்ல, அதில் இன்னொரு ஆழமான செய்தியும் புதைந்து கிடக்கிறது.
ஒரு வேளை உணவை நம்மால் விட முடிகிறதா? அந்த நேரத்துக்கு வயிற்றில் மணி அடித்து விடுகிறது. சாப்பிடாவிட்டால் ஒரு பதற்றம் வருகிறது, லேசா தலை வலிக்கிறது, சோர்வு வருகிறது.
அதையே ஒரு வழக்கமாகக் கொள்வது எவ்வளவு கடினம்?
பொறுமையாக இருப்பவர் அவர்களுக்கு முன்னால் என்றால், பொறுமையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்து கொள்ள முடியும்.
அதிலும் இல்லறத்தில் இருந்து கொண்டு பொறுமையாக இருப்பது என்பது மிக மிகக் கடினம்.
இதுவரை திருக்குறளுக்கு பரிமேலழகர் ஊடாக உரை கண்டோம்.
இந்த அதிகாரத்தை நான் இன்னொரு விதமாகவும் பார்க்கிறேன். இது நிச்சயம் வள்ளுவர் கூறியதோ, பரிமேலழகர் கூறியதோ அல்லது வேறு உரை ஆசிரியர்கள் கூறியதோ அல்ல. எனவே, பிழை எல்லாம் என் பொறுப்பே. நான் சொல்ல நினைப்பது அதிகாரத்தோடு நேரடி தொடர்பு இல்லாதது ஆனால் இப்படி சிந்தித்தால் என்ன என்று தோன்றியது.
பொறுமை என்பது மற்றவர்கள் நமக்குச் செய்யும் அல்லது சொல்லும் தீய சொற்களை பொறுப்பது மட்டும் அல்ல.
வாழ்வில் பொறுமை பல விதங்களில் தேவைப் படுகிறது. பொறுமை இல்லாததால் பல துன்பங்கள் நமக்கு வந்து சேர்கின்றன.
நல்லது செய்தால் கூட, அதன் விளைவுகளை காண, பெற பொறுமை அவசியமாகிறது.
நான் எவ்வளவு செய்தேன், ஒரு நன்றி இல்லையே, ஒரு பாராட்டு இல்லையே என்று நாம் சில சமயம் வருந்தாலம். பொறுமை வேண்டும். சில சமயம் நல்ல விடயங்களுக்கு பலன் கிடைக்க காலம் ஆகலாம்.
எத்தனை நாள் உடற் பயர்ச்சி செய்கிறேன், உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். எடை குறையவே மாட்டேன் என்கிறதே என்றால், பொறுமை. அவசரப் படக்கூடாது.
சில விதைகள் ஓரிரு நாளில் துளிர்விடும். சில விதைகள் நாள் கணக்கில் புதைந்து கிடக்கும்.
இவ்வளவு வேலை செய்தேன், பதவி உயர்வு வரவில்லை, சம்பள உயர்வு வரவில்லை என்று வருந்தக் கூடாது. வரும். பொறுமை அவசியம்.
பிள்ளைகளுக்கு திருமணம், வேலை, அவர்கள் பிள்ளைகள் பெறுவது, எல்லாவற்றிலும் நமக்கு ஒரு அவசரம். பொறுமை கிடையாது. நாம் அவசரப்பட்டால் இரண்டு நிகழும்.
ஒன்று அவசரத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டு காலம் எல்லாம் வருந்த நேரலாம்.
அல்லது, நமக்கு ஒரு பதற்றம், மன அழுத்தம், இரத்த அழுத்தம், தூக்கமின்மை என்று வரலாம்.
இரண்டும் தேவை இல்லாதவை.
பொறுமை இல்லாததால் எரிச்சல், கோபம், வருத்தம் எல்லாம் வரும். ஏன் இந்த போக்குவரத்து இவ்வளவு மெதுவாகப் போகிறது? என்று அவசரமாக வண்டியை வேகமாக ஓட்டி, எங்காவது மோதி, அனாவசியமான சிக்கல்கள் வந்து சேரும்.
பொறுமை இல்லாததால், நாம் நின்று நிதானமாக வாழ்வை இரசிக்க முடிவதில்லை.
சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும், சீக்கிரம் வீடு கட்ட வேண்டும், சீக்கிரம் பதவி உயர்வு வேண்டும், சீக்கிரம் எல்லாம் வேண்டும் என்று குறிக்கோளிலேயே மனம் நிற்கிறது.
மனைவியை இரசிக்க நேரம் இல்லை, பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை, கணவனோடு அன்பாகப் பேச நேரம் இல்லை, மழையில் நனைய, இசையை இரசிக்க, காலாற குடும்பத்தோடு நடக்க, பேசி மகிழ, எதற்குமே நேரம் இல்லாமல் போய் விட்டது. காரணம் எல்லாம் வேண்டும், இன்றே வேண்டும்.
கொஞ்சம் வேகத்தைக் குறைத்து, பொறுமையாக இருந்தால் வாழ்வை பலமடங்கு இரசிக்கலாம்.
"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க"
(திருவாசகம்).
நான் சொன்னது குறளுக்கு வெளியேதான். குறளுக்கு உரை அல்ல. அது ஒரு சிந்தனை அவ்வளவுதான்.
பிடித்தால் இரசியுங்கள்.
உங்கள் உரை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநிறையப்பிடித்தது் . ரசித்துப் படித்தேன்
ReplyDeleteஉண்மையே, சரி.மிக்க நன்றி.
ReplyDelete