Wednesday, July 20, 2022

திருக்குறள் - பொறையுடைமை - அறன்அல்ல செய்யாமை நன்று

       

திருக்குறள் - பொறையுடைமை -  அறன்அல்ல செய்யாமை நன்று


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 






)


ஆயிரம்தான் சொன்னாலும், நமக்கு தீமை செய்தவர்களுக்கு, நம்மை நோகப் பண்ணியவர்கள் செய்த செயலை பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பது என்பது முடியாத காரியம். வள்ளுவர் சொல்லுவார். அதெல்லாம் நடைமுறை சாத்தியம் அல்ல என்றுதான் நமக்குத் தோன்றும். 


சரி. ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்குத் தீமை செய்கிறோம். 



கணக்கு தீர்ந்து விட்டதா?  அது தொடராதா?  அப்படி தீர்ந்து விடும் என்றால் தீமைக்கு தீமை பதிலுக்குச் செய்யலாம். 


இல்லை. அவன் செய்த தீமைக்கு அவனுக்கு அதன் பலன் கிடைக்கும். அப்படி என்றால் பதிலுக்கு நாம் அறம் அல்லதாவற்றைச் செய்தால், நமக்கு? 


அந்த அறம் அல்லாத செயலுக்கு நமக்கும் பலன் கிடைக்கும் தானே?


ஒருவன் நம்மை அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பதிலுக்கு நாமும் அடிக்கிறோம். 


இரண்டு பேருக்கும் அறம் அல்லாத தீவினை செய்ததற்கு பலன் கிடைக்கும்தானே?




பாடல்



திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று


பொருள் 




(pl click the above link to continue reading)


திறன்அல்ல  = முறையற்ற செயல்களை 


தன் = தனக்கு 


பிறர் செய்யினும் = பிறர் செய்தாலும் 


நோநொந்து = அதற்காக கவலைப் பட்டு 


அறன்அல்ல = தான் அறம் அல்லாதவற்றை 


செய்யாமை நன்று = செய்யாமல் இருப்பது நல்லது.




இதில் எங்கே வருகிறது, அவன் செய்த பழிக்கு அவனுக்கும் பலன் கிடைக்கும் என்றும், நாம் செய்த பழிக்கு நமக்கு பலன் கிடைக்கும் என்று ? 


பிறர் செய்த துன்பத்தால் வருந்தி அவர்களுக்கு பதில் துன்பம் செய்யாமல் இருப்பது நல்லது என்று தானே சொல்லி இருக்கிறார் என்று தோன்றும். 



பரிமேலழகர் இல்லை என்றால் இவை எல்லாம் நமக்குப் புரியாது. 


"நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று " என்பதற்கு   'அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று'

என்று உரை செய்கிறார். 


அவர் உரைக்கு கொஞ்சம் எளிமையான உரை காண்போம். 


ஒருவன் நமக்கு துன்பம் செய்கிறான் என்றால் "பாவி, நீ எனக்கு செய்த இந்த துன்பத்தினால் நீ என்னென்ன அனுபவிக்கப் போகிறாயோ..." என்று நாம் மனம் நொந்து, அந்த மாதிரி நாமும் செய்தால், நமக்கும் அந்த வினைப் பயன் வந்து சேரும் என்று நினைத்து பதிலுக்கு பாவ காரியம் செய்யாமல் இருப்பது நன்றி. 


ஒருவன் நம் பொருளை திருடிவிட்டான். அது தவறுதான். பதிலுக்கு அவவன் பொருளை நாம் களவாடுவது சரியா?  ஏன், செய்தால் என்ன ? சட்டம் தண்டிக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது தவறு என்று நம் மனதிற்கு தோன்றுகிறது அல்லவா? 


இராமன் மனைவியை இராவணன் தூக்கிக் கொண்டு வந்து விட்டான். பதிலும் இராமன் இராவணன் மனைவியை தூக்கிக் கொண்டு வந்தால் சரியாக இருக்குமா? 



மற்றவன் என்னதான் செய்தாலும், நாம் அறம் அற்ற செயல்களை செய்யக் கூடாது. 



செய்தால் என்ன ஆகும், பிறவி தொடரும். அந்த பாவத்தைப் போக்க இன்னொரு பிறவி வரும்.  வாழ்வின் நோக்கம் வீடு பேறு அடைவது. திட்டியவனை எல்லாம் பதிலுக்கு திட்டிக் கொண்டு இருப்பது அல்ல. 


வீடு பேறு என்ற நோக்கம் இருக்குமானால், பிறவிக்கு வழி செய்யும்  பாவதை விட்டு விட வேண்டும். 


இல்லை, என்ன ஆனாலும் சரி, எத்தனை பிறவி வந்தாலும் சரி, மற்றவர்களுடன் சரி மல்லுக்கு நிற்பேன், அது தான் எனக்கு திருப்தி என்றால், என்ன செய்ய முடியும். நல்லது, அதுவும் நடக்கட்டும் என்றுதான் சொல்லத் தோன்றும். 


No comments:

Post a Comment