இராமாயணம் - தாயின் நல்லான்
குகனைப் பற்றி ஒரு முழு புத்தகமே எழுதலாம். கம்பன் இழைத்து இழைத்து பண்ணுகிறான் இந்த பாத்திரத்தை. படிக்க படிக்க திகட்டாத பாத்திரப் படைப்பு.
எந்த பாத்திரத்துக்கும் தராத ஒரு அடை மொழியையை குகனுக்குத் தருகிறான் கம்பன் "தாயின் நல்லான்". கண்ணை இமை போல் பார்த்துக் கொண்ட இலக்குவனுக்கு கூட அந்த அடை மொழியை கம்பன் தரவில்லை. பரதனுக்கு தரவில்லை. குகனுக்கு மட்டும் தந்தான் அந்த அடை மொழியையை.
இலக்குவனும், பரதனும் இராமனின் உடன் பிறந்தவர்கள். அவர்கள் இராமன் மேல் அன்பு செலுத்தியதில் பெரிய ஆச்சரியம் இல்லை. முன்ன பின்ன அறியாத குகனின் அன்பு அளவிட முடியாதது.
முதலில் பாடலைப் பார்ப்போம்.
குகன் இராமன் கங்கை கரையை அடைந்ததை அறிந்து அவனை காண வந்து இருக்கிறான், தன் பரிவாரங்களுடன்.....
இலக்குவன் அவனை வெளியில் நிறுத்தி விட்டு இராமனிடம் குகனின் வருகையையை அறிவிக்கச் செல்கிறான்...
பாடல்
நிற்றி ஈண்டு' என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,
'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்' என்றான்
பொருள்
நிற்றி ஈண்டு = இங்கு நில்
என்று = என்று சொல்லி விட்டு
புக்கு = உள்ளே சென்று (இராமன் இருப்பிடம் உள்ளே சென்று)
நெடியவன் = நெடியவனான இராமனை
தொழுது, தம்பி = தொழுது, தம்பியான இலக்குவன் சொல்லுவான்
'கொற்றவ! = அரசனே
நின்னைக் காணக் = உன்னை காண்பதற்கு
குறுகினன், = வந்து இருக்கிறான்
நிமிர்ந்த கூட்டச் சுற்றமும், தானும்;= பெரிய திரளான சுற்றத்தாருடன்
உள்ளம் தூயவன்; = தூய்மையான உள்ளம் கொண்டவன்
தாயின் நல்லான்; = தாயை விட நல்லவன்
எற்று நீர்க் கங்கை = அலை மோதும் கங்கையில்
நாவாய்க்கு இறை; = படகுகளுக்குத தலைவன்
குகன் ஒருவன்' என்றான் = குகன் ஒருவன் என்றான்
ஏன் குகனுக்கு இவ்வளவு அடை மொழி - உள்ளம் தூயவன், தாயின் நல்லான் , நாவாய்க்கு இறை - காரணம் இல்லாமல் கம்பன் ஒரு வார்த்தையை போடுவானா ?
ஏன் என்று பார்ப்போம்....
அருமையான விளக்கத்துடன் ஒரு அருமையான பாடல் தந்ததற்கு நன்றி .கம்பனின் அடைமொழி விளக்கம் விரைவில் வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
ReplyDelete"தாயின் நல்லான்" என்ற சொல்லை, இலக்குவன் வாயால் சொல்ல வைத்தது சிறப்பு!
ReplyDeleteஈடுஇனையற்ற தாயன்பிற்கு ஈடான விளக்கம் மிக சிறப்பு
ReplyDeleteமெய் சிலிர்க்க கூடிய விளக்கம்
ReplyDelete