பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?
கடவுளை வணங்க வேண்டும் என்று நினைக்கிறார் பட்டினத்தார். கண் ஒரு பக்கம், மனம் ஒரு பக்கம், நாக்கு ஒரு பக்கம் என்று அவரை பல பக்கங்களில் இழுத்துக் கொண்டு அலைகிறது. மனம் ஒரு நிலை பட மாட்டேன் என்கிறது.
எல்லாம் துறந்த பட்டினத்தாருக்கு அந்த நிலை.
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க - அறியாத
சடகசட மூட மட்டி
என்று நோகிறார் அருணகிரி. அவன் திருவடி என்ற தாமரையில் மனதை அரை நிமிடம் கூட முறைப் படி தியானம் பண்ண முடியாத சட - கசட - மூட - மட்டி என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் அவர்.
பட்டினத்தாருக்கும் அருணகிரிக்கும் இந்த நிலை என்றால் நம்ம நிலை என்ன ?
பாடல்
கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே
பொருள்
கையொன்று செய்ய = கை பூவை எடுத்துப் போடும், ருத்ராட்ச மாலையை உருட்டிக் கொண்டு இருக்கும்...
விழியொன்று நாட = அந்த சமயத்தில் விழி வேறு எதையோ பார்க்கும் (இந்த சேலைல அவ அழகாத்தான் இருக்கா )
கருத்தொன்று எண்ண = கருத்து வேறு எதிலோ...(இன்னைக்கு அந்த ரிபோர்டை எப்படியாவது அனுப்பிரனும்)
பொய்யொன்று வஞ்சக நாவோன்று பேச = மந்திரம், பாசுரம், தேவராம் என்று நாக்கு எதையோ சொன்னாலும், மனம் ஒப்பாத அது பொய்யான பூஜை தான்
புலால கமழும் மெய்யொன்று சார = மாமிச வாடை அடிக்கும் இந்த உடல் ஒன்றைச் சார்ந்து நிற்கும் (பசிக்குது, இன்னைக்கு காலைல என்ன சிற்றுண்டி இருக்கும். )
செவியொன்று கேட்க = காது ஒன்றை கேட்க்க (மிக்சி ஓடுது, ஒரு வேளை தேங்காய் சட்னி செய்கிறாளோ ?)
விரும்பியான் = நான் விரும்பி
செய்கின்ற = செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே = இப்படி நான் செய்கின்ற பூசையை எவ்வாறு ஏற்றுக் கொள்வாய் வினை தீர்த்தவனே
மிகவும் உருக்கமான பாடல். நன்றி.
ReplyDelete