இராமயாணம் - பணம் வந்தால் குணம் மாறும்
கூனி, கைகேயின் மனத்தை கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறாள். இராமனை பெற்ற எனக்கு என்ன துன்பம் வரும் என்று பதில் கேள்வி கேட்டால் கைகேயி.
கூனியின் வாயிலாக கம்பன் ஒரு மிகப் பெரிய உண்மையை எடுத்து வைக்கிறான்.
"அடியே கைகேயி, இராமன் இன்று நல்லவனாய் இருக்கலாம். ஆனால் நாளை செல்வம் (நாடு) வந்தபின் அப்படியே இருப்பானா என்று கேள்வி எழுப்புகிறாள். அற வழியில் நிற்கும் தவ சீலர்கள் கூட செல்வம் வந்த பின் மாறி விடுவார்கள். உன்னை இன்று வீரத்தின் பாற்பட்ட நெறியின் காரணமாக கொல்லாமல் விட்டாலும், நாளை உனக்கு மன உலைச்சைளை சந்து நீயே உன்னை மாய்த்துக் கொள்ளும்படி செய்து விடுவான்"
என்று கூறினாள்.
பாடல்
அறன் நிரம்பிய அருளுடை அருந் தவர்க்கேனும்,
பெறல் அருந் திருப் பெற்றபின், சிந்தனை பிறிது ஆம்;
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும், மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர், இடையறா இன்னல்.
பொருள்
அறன் நிரம்பிய = அறம் நிரம்பிய
அருளுடை = அருள் உள்ளம் கொண்ட
அருந் தவர்க்கேனும் = அரிய தவம் புரிந்த முனிவர்களுக்குக் கூட
பெறல்அருந் = பெற முடியாத, பெறுவதற்கு அரிதான
திருப் = செல்வத்தை
பெற்றபின் = பெற்றபின்
சிந்தனை பிறிது ஆம் = மனம் மாறி விடும்
மறம் நினைந்து = வீர நெறி நினைத்து
உமை வலிகிலர் ஆயினும், = உன்னையும், உன்னை சார்தவர்களையும் கொல்லாமல் விட்டாலும்
மனத்தால் = ஆனால், மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர் = இற்றுப் போகும்படி செய்வர் (எப்படி தெரியுமா ?)
இடையறா இன்னல் = இடைவிடாத துன்பத்தின் மூலம்
கடைசி வரை நல்லவளா கெட்டவளா என்று அறிந்து கொள்ள முடியாத பாத்திரம் கைகேயி. கம்பனுக்கே அந்த குழப்பம் இருந்திருக்குமோ ? ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் அவளின் குணம் அப்படியே தலைகீழாக மாறுவதை கம்பன் படம் பிடித்துக் காட்டுகிறான்.
எப்படி அவள் மனம் ஊசலாடுகிறது என்று பார்ப்போமா ?
கைகேயி நல்ல குணத்துக்கும், கேட்ட சிந்தனைக்கும் இடைப்பட்ட எல்லைக் கோட்டில் இருக்கும் குனத்தவள்.நிஜ வாழ்வில் அப்படி நபர்கள் இல்லையா என்ன?
ReplyDelete