இராமாயணம் - தூங்கும்போதும் அருள் பொழியும் கண்கள்
கைகேயி புரிந்து கொள்ள முடியாத ஒரு பாத்திரம். அவள் நல்லவளா, கெட்டவளா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.
சிலர் தூங்குவதை பார்த்தால் பயமாக இருக்கும். வாய் பிளந்து, குறட்டை விட்டுக் கொண்டு பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும். சில பேர் தூங்கும் போது பார்த்தால் உயிரோடு இருக்கிறானா இறந்து விட்டானா என்று தெரியாது. வெட்டிப் போட்ட பனை மரத் துண்டு போல கிடப்பான். தூங்கும்போதும் அழகாக இருப்பது குழந்தைகள் தான்.
கைகேயி தூங்கும் போதும் அவள் கண்ணில் இருந்து அருள் வழிகின்றது. மனதில் எத்தனை அன்பும் கருணையும் இருந்தால் உறக்கத்திலும் அருள் தெரியும்?
கைகேயி பஞ்சணையில் படுத்து இருக்கிறாள். வெள்ளை வெளேர் என்ற பட்டு மெத்தை. அதன் மேல் விரித்த வெள்ளை விரிப்பு ஒரு சில இடங்களில் மடிந்தும் சுருங்கியும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற் கடலில் அலை அடிப்பது போல இருக்கிறது. மடிப்புகளும் சுருக்கங்களும் அலை போல இருக்கிறது.
தசரதன் சக்கரவத்தி. அவனுக்கு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் படுக்கை விரிப்பு கொள்ள முடியும். ஆனாலும் வெள்ளை நிறம் தான் அவன் அரண்மனையில் இருந்து இருக்கிறது. படுக்கை விரிப்புக்கு வெள்ளை நிறம் தான் சிறந்தது என்பது ஒரு கருத்து இதில் இருந்து பெறப் படுகிறது.
அதன் மேல் அவள் படுத்து இருக்கிறாள். அவள் சிவந்த முகம் உடையவள். மேலிருந்து பார்த்தால் பாற்கடலில் பூத்த தாமரை போல் இருக்கிறது.
அவள் உடல் கொடி போல் மெலிந்து வளைந்து வளைந்து இருக்கிறது. தாமரை கொடியில் பூத்தது மாதிரி இருக்கிறது. நீர் நிலையில் தாமரை கொடி நீரின் சலனத்திற்கு ஏற்ப ஆடுவது மாதிரி இருக்கிறது அவள் படுத்து இருப்பது, அவள் அசைவது எல்லாம்.
அவளின் அவயங்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட மணிகள் மாதிரி இருக்கிறது. அப்படி ஒரு ஜொலிக்கும் அழகு.
அமைதியாகத் தூங்குகிறாள். முகத்தில் ஒரு அமைதி, சாந்தம். உறங்கும் போதும் கண் ஓரம் ஒரு அருள்.
உறங்கும் போது ஒருவன் தன்னை மறக்கிறான். அந்த நிலையிலும் அருள் வெளிப் படும் என்றால், அவன் இயற்கையாகவே அருள் உள்ளம் கொண்டவனாக இருக்க வேண்டும். விழித்து இருக்கும் போது அருள் இருப்பதை போல் நடிக்க முடியும். உறக்கத்தில் அது முடியாது.
சக்கரவர்த்தியின் மனைவி என்ற அகம்பாவம் இல்லை.
தான் பெரிய அழகு உள்ளவள் என்ற பெருமிதம் இல்லை.
அவள் கண்ணில் அருள் வழிகிறது.
பாடல்
நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-
போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள்.
பொருள்
நாற் கடல் = நான்கு கடல். தமிழில் நான்கு என்பதற்கு பல என்று ஒரு பொருள் உண்டு. நாலு பேர் மதிக்கும் படி வாழ வேண்டும் என்றால், எண்ணி நாலே நாலு பேர் அல்ல. எல்லோரும் என்று பொருள்.
படு மணி = கண்டு எடுத்து வந்த மணி (வைரம், வைடூர்யம் போன்ற உயர்ந்த மணிகள்)
நளினம் = குமுதம், தாமரை
பூத்தது = மலர்ந்தது
ஓர் = ஒரு
பாற்கடல் = பால் கடலில்
படு திரைப் = எழுகின்ற அலை போல்
பவள வல்லியே =பவளக் கொடி போன்ற அழகிய பெண்
போல் = போல
கடைக் கண் = கண் ஓரம்
அளி பொழிய = கருணை பொழிய
பொங்கு அணை = பொங்கி வருவந்து போன்ற மெத்தை. பாற்க் கடல் பொங்காதா என்ன ?
மேல் கிடந்தாள் தனை = மேல் கிடந்த கைகேயியை
விரைவின் எய்தினாள் = விரைவாக சென்று அடைந்தாள் (கூனி)
wow!!!
ReplyDeleteஇது என்ன தூள் கவிதை! நல்ல விளக்கம் தந்து, அழகுக்கு அழகு கூட்டினாய்! நன்றி.
ReplyDelete