திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு
பையனோ பெண்ணோ ஏதோ தப்பு செய்து விட்டார்கள் (வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு சினிமாவுக்கு போதல், வீட்டுக்குத் தெரியாமல் தம் அடிப்பது, ). எப்படியோ உங்களுக்குத் தெரிந்து விடுகிறது. உங்களுக்குத் தெரிந்து விட்டது என்று அவர்களுக்கும் தெரிய வருகிறது.
சரி தான், இன்னைக்கு நல்ல பாட்டு விழப் போகிறது என்று தயங்கி தயங்கி உங்களிடம் வருகிறார்கள்.
"நா ஒண்ணு சொல்லுவேன்...கோவிக்கக் கூடாது " என்று அவர்கள் ஆரம்பிக்கும் முன்னமேயே, நீங்கள் அவர்களைப் பார்த்து,
"ஒண்ணும் கவலைப் படாதே, எனக்கு ஒரு கோவமும் இல்லை, என் கிட்ட வா " என்று அவர்களை அனைத்து ஒரு முத்தம் கொடுத்தால் அவர்களின் மனம் எப்படி நெகிழும்...அப்படி நெகிழ்கிறார் வள்ளலார்....
இறைவனிடம் சென்று, தான் செய்த பாவங்களை சொல்லி, "மன்னித்துக் கொள், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று சொல்வதருக்கு முன்னேயே அவன் மன்னித்தது மட்டும் அல்ல...கருணையும் பொழிந்தான்...அதற்க்கு என்ன கை மாறு செய்வேன் என்று உருகுகிறார் வள்ளலார்....
பாடல்
தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
பொருள்
தனியே கிடந்து = தனியாகக் கிடந்து
மனங்கலங்கித் = மனம் கலங்கி
தளர்ந்து தளர்ந்து = மீண்டும் மீண்டும் தளர்ந்து
சகத்தினிடை = இந்த உலகத்தில்
இனியே துறுமோ = இனி ஏதுருமோ = இனி என்ன நிகழுமோ
என்செய்வேன் = என்ன செய்வேன்
எந்தாய் = என் தாய் போன்றவனே
எனது பிழைகுறித்து = எனது குற்றங்களை குறித்து
முனியேல் = கோவித்துக் கொள்ளாதே
எனநான் = என்று நான்
மொழிவதற்கு முன்னே = சொல்வதற்கு முன்னே
கருணை அமுதளித்த = உன் கருணை என்ற அமுது அளித்த
கனியே = கனியே
கரும்பே = கரும்பே
நின்தனக்குக் = உனக்கு
கைம்மா றேது கொடுப்பேனே = கை மாறாக என்ன தருவேன் ? ஒன்றும் தர முடியாது என்பது பொருள்
என்ன ஒரு நல்ல பாடல்! உன் உரையும் என்னைத் தொட்டது. நன்றி
ReplyDelete