Saturday, December 8, 2012

பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்க்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலையும் மக்களைப் பார்த்து பாடுகிறார்....

பாடல்


நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே 
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் 
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்? 
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே !

பொருள் 

நீற்றைப் புனைந்தென்ன? = திரு நீற்றை பூசி என்ன ? 

நீராடப் போயென்ன? = கங்கை முதலான புனித தீர்த்தங்களில் நீராடி என்ன பயன் ?

நீ மனமே = நீ மனமே

மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை = மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கும் இந்த நிலையை மாற்றி பிறக்கும் வகையை நீ அறியவில்லை.

மாமறைநூல்  = பெரிய மறை நூல்களில்

ஏற்றிக் கிடக்கும் = எழுதப்பட்டு இருக்கும்

எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?  = கோடிக்கணக்கான மந்திரங்களை படித்தும் நீ என்ன கண்டாய் (ஒன்றும் காணவில்லை )

ஆற்றில் கிடந்தும் = ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும்

துறையறி யாமல் அலைகின்றையே ! = படித்துறை அறியாமல் அலைகின்றாயே 


No comments:

Post a Comment