பட்டினத்தார் - எரிந்த கட்டை மீது எரித்து
நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்கு கீழே எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள். எனக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு. நான் எவ்வளவு படித்து இருக்கிறேன்....இப்படி இந்த "நான்" என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.
இத்தனை சுகங்களையும், உறவுகளையும், சேர்த்து வைத்த சொத்தையும் விட்டு போக மனம் இல்லை.
இது எல்லாம் ஒன்றும் இல்லை. நம்மை விடவும் பெரிய பெரிய அரசர்கள் இதற்க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். அப்படி பட்ட மன்னர்களையும், அவர்கள் இறந்த பின், புது இடத்தில் கூட இல்லை முன்பு ஏதேதோ உடல்களை எரித்த அதே இடத்தில் வைத்து, கட்டி இருந்த உள் ஆடைகளை கூட எடுத்து விட்டு எரித்து சாம்பலாக்கி இருக்கிறார்கள். நாம் எல்லாம் எம்மாத்திரம்.
அதை எல்லாம் பார்த்த பின்னும் , இந்த வாழ்க்கையில், இந்த சுக போகங்களில், இந்த பிறவியில் இன்னுமா உங்களுக்கு ஆசை என்று கேட்க்கிறார் பட்டினத்தார்...
பாடல்
இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !
பொருள்
இன்னம் = மீண்டும் மீண்டும்
பிறக்க இசைவையோ = பிறப்பதற்கு ஒத்துக் கொள்வாயா
நெஞ்சமே ? = மனமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை = மன்னர் இவர் என்று வாழ்ந்தவர்களை
முன்னம் எரிந்தகட்டை மீதில் = முன்பு எரித்த கட்டை மேல்
இணைக்கோ வணத்தை = கட்டியிருந்த உள் ஆடையையையும்
உரிந்துருட்டிப் = உரித்து எடுத்து பின் அந்த உடலை உருட்டி
போட்டது கண்டு ! = போட்டதை கண்ட பின்னும்
No comments:
Post a Comment