இராமாயணம் - வைத்த கண்ணை எடுக்காமல்
நீ போய் உன் சுற்றத்தாருடன் இரவு தங்கி விட்டு நாளை காலை கங்கையின் அக்கறை செல்ல படகு கொண்டு வா என்று குகனிடம் இராமன் கூறினான்.
குகனுக்கு போகவே மனம் இல்லை.
இராமா உன்னை பார்த்த கண்ணை என்னால் எடுக்க முடியவில்லை. உன்னை விட்டு போகவே முடியவில்லை. உன் கூடவே இருந்து உனக்கு உதவி செய்கிறேனே என்று கெஞ்சுகிறான்.
இன்னொரு பொருள், எப்படி சக்கரவர்த்தியாய் இருக்க வேண்டிய நீ இப்படி தவ கோலத்தில் இருக்கும் கோலத்தை பார்த்த பின்னும் அந்த கண்ணை பிடுங்கி எரியாமல் இருக்கும் நான் உன் மேல் அன்பு கொண்டவன் போல் நடிக்கும் பெரிய கள்வன்.
ஈர்த்தல் என்ற சொல்லுக்கு கவர்தல், பிடுங்குதல், வசப்படுதல் (காந்தம் இரும்பை ஈர்க்கும்).
குகனால் இராமனை விட்டு பிரிய முடியவில்லை. அவ்வளவு காதல்.
பாடல்
கார் குலாம் நிறத்தான் கூற,
காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
செய்குவென் அடிமை’ என்றான்.
பொருள்
கார் குலாம் நிறத்தான் கூற = மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட இராமன் அப்படி கூறவும் (நீ ஊருக்குப் போய், உன் சுற்றத்தாருடன் இனிதே இருந்து நாளை வா என்று இராமன் கூறினான்)
காதலன் = குகன். குகனை காதலன் என்று கூறுகிறான் கம்பன்
உணர்த்துவான் = உணர்த்துவான்
இப் பார் குலாம் செல்வ! = இந்த உலகம் எல்லாவற்றிற்கும் அதிபதியான செல்வனே
நின்னை = உன்னை
இங்ஙனம் = இப்படி
பார்த்த கண்ணை = பார்த்த கண்களை
ஈர்கிலாக் = எடுக்க முடியாத
கள்வனேன் யான் = நான் ஒரு கள்வன் (அன்புள்ளவன் போல் நடிக்கிறேன்)
இன்னலின் இருக்கை நோக்கித் = துன்பத்தின் இருப்பிடம் நோக்கி. இராமனுக்குதான் எவ்வளவு துன்பம் (இன்னல்). "கல்லணை மேல் கண் துயிலக் கற்றாயோ கரிய கோவே" என்று குலசேகர ஆழ்வார் கசிந்தது போல குகன் உருகுகிறான்.
தீர்கிலேன் = என்னால் முடியவில்லை. ஐயோ, உன் துன்பத்தை தீர்க்க என்னால் முடியவில்லையே என்று வருந்துகிறான்.
ஆனது, ஐய! = ஐயா
செய்குவென் அடிமை’ என்றான் = உன்னுடனேயே இருந்து உனக்கு சேவை செய்வேன் என்றான்.
எல்லோரும் இராமனிடம் தங்களின் குறை தீர்க்க வேண்டி வந்தார்கள். குகன், இராமனின் குறை தீர்க்க முடியவில்லேயே என்று வருந்துகிறான்.
இராமனை பார்த்த கண்களை எடுக்க முடியவில்லை என்று கூறுகிறான். அப்படி அனுபவிக்கிறான் அவன் அழகை.
இராமனின் தவக் கோலம் கண்டு தவிக்கிறான். எப்படி இருக்க வேண்டிய சக்கரவர்த்தி திருமகன் இப்படி இருக்கிறானே, இப்படி தவக் கோலத்தில் இருக்கிறானே என்று வருந்துகிறான்.
இவன் இப்படி சொன்னதை கேட்ட இராமன், குகனுக்கு இரண்டு அடை மொழிகளைத் தருகிறான்...மிக மிக இனிமையான அந்த அடை மொழிகள் என்ன தெரியுமா ?
மிக அருமையான விளக்கவுரை. நன்றி.
ReplyDeleteசஸ்பென்சை சீக்கிரம் அவிழ்க்கவும். (சஸ்பென்ஸ் என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன?!)
மர்மம் ?
DeleteFirst raavanan,then kumba karnan, and now guhan. by the time you finish kambaraamayanam i think we all will start liking every body except the hero. ram.
ReplyDeleteஇராமனை பற்றியும் எழுதி விட்டால் போகிறது...எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்த மாதிரி
Delete