Friday, December 14, 2012

குறள் - ஆத்திசூடி - சூது


குறள் - ஆத்திசூடி - சூது


வெல்வது சர்வ நிச்சயம் என்று தெரிந்தால் கூட, சூதாடாதே. சூதில் வரும் வெற்றி என்பது தூண்டிலில் உள்ள இரையை கவ்விய மீனின் வெற்றியை போன்றது. முதலில் நன்றாக இருக்கும், கொஞ்சம் கடித்தவுடன் முள் வாயில் ஏறி வேதனை செய்யும், அதில் இருந்து தப்பிக்க வேகமாக அங்கும் இங்கும் துள்ளும் போது அந்த முள் இன்னும் ஆழமாகத் தைக்கும். இரத்தம் வரும். தூண்டிலில் மீன் துள்ளுவதைப் கண்டு தூண்டில் போட்டவன் அதை மேலே இழுப்பான். நீரை விட்டு வெளியே வந்த மீன் மூச்சு முட்டி இறந்து போகும். அதுபோல சூதில் வரும் வெற்றி. முதலில் சுகமாகத் தோன்றினாலும் பின்னால் மிகுந்த துன்பத்தை தரும் எனவே சூதாடக் கூடாது என்கிறார் வள்ளுவர். 

பாடல் 


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.

பொருள் 

வேண்டற்க = வேண்டாம் என்று இருக்க

வென்றிடினும் = வெற்றி பெறுவது உறுதிதான் என்றாலும்

 சூதினை = சூதாட்டத்தை

வென்றதூஉம் = வெற்றி பெற்றால் கூட

தூண்டில்பொன் = (அந்த வெற்றி) தூண்டிலில் உள்ள முள்ளை

மீன்விழுங்கி யற்று.= மீன் விழுங்கியதர்க்கு ஒப்பாகும்

இதையே அவ்வையார் இரண்டே வார்த்தையில் சொல்கிறாள் 

கோதாட்டொழி 

கோதாடுதல் = சூதாடுதல்

ஒழி = விடு 

2 comments:

  1. அவ்வையின் சொல் நேரடியாக இருக்கிறது, ஆனால் வள்ளுவர் குறள் உவமையுடன் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  2. வள்ளுவனையும் அவ்வையையும் ஒன்றாக்கி கூரியது அறிவு..
    வாழ்க உங்கள் தொண்டு

    ReplyDelete