Sunday, December 16, 2012

திருக்குறள் - சூதும் உயிரும்

திருக்குறள் - சூதும் உயிரும் 


சூதாட்டத்தில் தோர்க்க தோர்க்க, விட்டதை பிடிக்க வேண்டும் என்ற வெறி வரும். இந்த குதிரை மேல் கட்டலாமா, அந்த குதிரை மேல் கட்டலாமா என்று மனம் அலை பாயும். அதிர்ஷ்டம் எப்படியாவது ஒருதடவை அடித்தால் போதும், காசை அள்ளிரலாம் என்று இழக்க இழக்க சூதின் மேல் மேலும் மேலும் காதல் வரும். அதை விட்டு விட்டு வர மனம் இருக்காது. 

அது எப்படி இருக்கிரதென்றால்...

இந்த உடல் எவ்வளவுக்கு எவ்வளவு துன்பப் படுகிறதோ, இந்த உயிருக்கு அந்த உடல் மேல் மேலும் மேலும் ஆசை பெருகிக் கொண்டே இருக்கும். வயதாக வயதாக உடல் பலம் குன்றி நோய் வாய்ப் படும். நைந்து போன உடலை உயிர் விட்டு விட்டு போய் விடாது. நோயோடு போராடும். வாழுகின்ற ஆசை உடல் தேய தேய கூடிக் கொண்டே போகும். 

வயதானவர்களைப் பார்த்தால் தெரியும்...அவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆசை கூடி கொண்டே போகும்...நல்ல சாப்பாடு, நாலு இடம் பார்க்க வேண்டும், எல்லா விழாக்களிலும் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை...முடியவில்லையே என்று விடுவது கிடையாது.

சர்க்கரை வியாதி உள்ளவனுக்கு இனிப்பின் மேல் தோன்றும் ஆசை போல...

சரி இவ்வளவு பணம் போச்சே, இதை இனியாவது விட்டு தள்ளுவோம் என்று சூதை யாரும் விடுவது கிடையாது. 

பாடல்


இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.

பொருள் 

இழத்தொறூஉம் = ஒவ்வொரு முறை இழக்கும் போதும்

காதலிக்கும் = காதல் மிகும்

சூதேபோல் = சூதாட்டம் போல்

துன்பம் = துன்பம்

உழத்தொறூஉம் = ஒவ்வொரு முறை துன்பம் வந்து உழலும் போதும்

காதற் றுயிர். = உயிர் உடலின் மேல் காதல் மேலும் கொள்ளும்



1 comment:

  1. திருக்குறள் எல்லாம் என்ன ஒரு பொக்கிஷம். THANKS FOR GIVING SUCH TREASURES. திருவள்ளுவர் கிடக்கிறார் விடு. WE WANT MORE!!!

    ReplyDelete