இராமாயணம் - தீராக் காதலன்
இராமன் இருப்பதோ சிறிய குடில். அயோத்தியில் இருந்து வந்து இருக்கிறான். கங்கை கரையில் பெரிய வீடு ஒன்றும் இருக்க சாத்தியமில்லை. அங்குள்ள முனிவரிகள் ஏதாவது ஒரு சிறய குடில் அமைத்து தந்திருக்கலாம் அல்லது தங்களது குடிசை ஒன்றை தந்திருக்கலாம். குகனோ தன் பரிவாரங்களோடு வந்து இருக்கிறான். அவர்களை எங்கு தங்க வைப்பது ? அதை மிக நாகரீகமாக குகனுக்கு உணர்த்தினான் இராமன் " நீ போய் உன் சுற்றத்தாரோடு இரவு தங்கிவிட்டு நாளை காலை வா" என்றான்.
கேட்டால் தானே ? குகனுக்கு புரியவில்லை. உன்னை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான்.
இராமனுக்கு தர்ம சங்கடம். இருக்கிறேன் என்று சொல்பவனை எப்படி போகச் சொல்வது ? சரி இரு என்று சொன்னால், எங்கு தங்க வைப்பது ?
நம் வீடுகளில் பார்த்து இருக்கிறோம். மனைவியிடம் முன்ன பின்ன சொல்லாமல், கணவன் சில நண்பர்களை அழைத்து வந்து விடுவான். " எல்லாருக்கும் காபி டிபன் பண்ணு " இல்லை என்றால் " அவங்க எல்லாம் இன்னைக்கு இரவு இங்க தான் சாப்பிடப் போகிறார்கள், உணவு தயார் பண்ணிவிடு" என்று சொல்லவதை கண்டிருக்கிறோம். மனைவிக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. என்ன செய்வது. சங்கடப் படுவார்கள்.
இராமன் அப்படி பட்டவன் அல்ல. குகன் இருக்கிறேன் என்று சொன்னவுடன், சீதையின் முகத்தை பார்க்கிறான். அவள் கண்ணாலேயே சரி என்று சொல்லி இருக்க வேண்டும். அப்புறம் லக்ஷமணனை பார்க்கிறான். அவனும் " சரி அண்ணா, சமாளித்துக் கொள்ளலாம் " என்று ஜாடையால் உணர்த்துகிறான்.
சீதை சாப்பாடு தயார் பண்ணிவிடுவாள், இலக்குவன் தங்க வசதி பண்ணி விடுவான் என்று அறிந்த பின் அவர்களிடம் "இந்த குகன் தீராத காதலன்" என்று சொல்லி விட்டு , குகனை நோக்கி " யாதினும் இனிய நண்பனே, நீ எங்களோடு இரு" கருணையோடு சொன்னான்.
தீராத காதலன் - இராமன் குகனுக்கு தந்த அடை மொழி.
யாதினும் இனிய நண்ப - இதுவும் இராமன் குகனுக்குத் தந்த அடை மொழி. யாதினும் என்பது அஹ்ரினை. யாரினும் என்று சொல்லி இருந்தால் எல்லோரையும் விட என்று பொருள் தரும். கம்பன் அப்படி சொல்லவில்லை. யாதினும் என்று சொன்னான். மனிதர்கள் சில நேரம் நட்பாய் இருப்பார்கள், சில சமயம் அவர்களே நட்பில்லாமலும் போய் விடலாம். யாதினும் என்பது எல்லாவற்றையும் விட என்று பொருள் தரும். மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள், பொருள்கள், பிடித்தமான உணவு, இசை, பொழுது, தத்துவம், நம்பிக்கை, உடை, என்று எல்லாம் அந்த "யாதினும்" என்ற சொல்லில் அடங்கும். எல்லாவற்றையும் விட இனிய நண்பனே என்று இராமன் குகனை அழைக்கிறான்.
பாடல்:
கோதை வில் குரிசில், அன்னான்
கூறிய கொள்கை கேட்டான்;
சீதையை நோக்கி, தம்பி
திருமுகம் நோக்கி, ‘தீராக்
காதலன் ஆகும்’ என்ற,
கருணையின் மலர்ந்த கண்ணன்.
‘யாதினும் இனிய நண்ப!
இருத்தி ஈண்டு, எம்மொடு’ என்றான்.
பொருள்
கோதை = தோலாலான கை உறை. அம்பு விடும் போது, வில்லின் நான் அதிரும். அப்படி அதிர்ந்த நான் கையை கிழிக்காமல் இருக்க தோலால் ஆன உறையையை அணிந்து கொள்வார்கள். அந்த உறைக்கு கோதை என்று பெயர்
வில் = வில்
குரிசில் = சிறந்தவன்
அன்னான் = அவன், குகன்
கூறிய கொள்கை கேட்டான் = சொன்னவைகளை கேட்டு
சீதையை நோக்கி = சீதையின் முகம் பார்த்து (அவள் சம்மதம் பெற்ற பின்),
தம்பி = இலக்குவன்
திருமுகம் நோக்கி = முகத்தை பார்த்து (அவன் சம்மதத்தையும் பெற்று),
‘தீராக் காதலன் ஆகும்’ = இந்த குகன் நம் மேல் தீராக் காதல் கொண்டவன்
என்ற = என்று கூறி
கருணையின் மலர்ந்த கண்ணன் = கருணையால் மலர்ந்த கண்ணன் (இராமனை பல இடங்களில் கண்ணன் என்று அழைக்கிறான் கம்பன்)
‘யாதினும் இனிய நண்ப = எல்லாவற்றையும் விட இனிய நண்பனே
இருத்தி ஈண்டு, எம்மொடு’ என்றான்.= எங்களோடு நீ இரு என்றான்.
இதை அடுத்து கம்பன் குகன் காவல் காத்து நின்றதை மிக மிக அருமையான ஒரு உதாரணம் சொல்லி விளக்குகிறான்
அது என்ன என்று அடுத்த ப்ளாக் இல் பார்ப்போம்........
யாதினும் விளக்கம் அருமை.
ReplyDeleteகம்பன் குகன் பாத்திரத்தை செதுக்கிய விதமும் நீங்கள் அதை அற்புதமாக அனுபவித்து நாங்கள் எல்லாரும் மிகவும் ரசிக்கும் படி எழுதுகிற விதமும் மிக உயர்வாக உள்ளது . நன்றி.
இந்த suspense தான வேண்டான்றது. நாளை வரை காத்திருக்கணும்
ReplyDeleteஅருமையான பாடல். நன்றி.
ReplyDelete