பிரபந்தம் - உன்னை மகனாய் பெற
வள்ளுவரை கேட்டால் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி (கடமை), இவனை மகனாகப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லும் படி வாழ்வது என்பார்.
குலசேகர ஆழ்வார் ஒரு படி மேலே போகிறார்.
தசரதன், இராமனைப் பார்த்து கூறுகிறான்....இன்னும் வரும் பிறப்பில் எல்லாம் உன்னையே மகனாகப் பெரும் வரம் வேண்டும் என்று இராமனைப் பார்த்து உருகுகிறான்.
இராமன் நினைத்து இருந்தால், கானகம் போக மாட்டேன் என்று மறுத்து இருக்கலாம். சட்டப்படி அரசு அவனுக்கு வர வேண்டிய ஒன்று. அரசை பரதனுக்குத் தர தசரதனுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது. அது மனு தர்மமும் அல்ல. இராமன் மறுத்திருந்தால் யாரும் அவனைக் குறை சொல்ல முடியாது.
தரசதன் சொன்ன வார்த்தை பொய் ஆகி விடக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக இராமன் கானகம் போனான்.
தசரதனுக்குத் தாங்க முடியவில்லை. தான் சொன்ன ஒரு வார்த்தையை மெய்யாக்க கானகம் போகிறானே தன் மகன் என்று அவன் மேல் பாசம் பொங்கி பொங்கி வருகிறது. "அப்பா, உன்னையே ஏழேழ் பிறவிக்கும் மகனாய் பெரும் வரம் வேண்டும் " என்று வேண்டுகிறான்.
பாடல்
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே.
சீர் பிரித்த பின்
முன்பு ஒருநாள் முழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாகக் கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகக் பெறப் பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே
பொருள்
முன்பு ஒருநாள் = முன்பு ஒரு நாள்
முழு வாளி = வாளி என்றால் கோடாலி. கோடாலியையை ஆயுதமாகக் கொண்டவன் (பரசுராமன்)
சிலை வாங்கி = வில்லை வாங்கி
அவன் தவத்தை = அவனுடைய தவத்தை
முற்றும் செற்றாய் = முற்றிலும் அழித்தாய்
உன்னையும் = உன்னையும் (இராமனாகிய உன்னையும்)
உன் அருமையும் = உன் அருமையும்
உன் மோயின் வருத்தமும் = உன் தாயின் (கௌசலையின்) வருத்தமும்
ஒன்றாகக் கொள்ளாது = ஒரு பொருட்டாகக் கொள்ளாமல்
என்னையும் = (தசரதானகிய) என்னையும்
என் மெய் உரையும் = நான் சொன்ன மெய் உரையை
மெய்யாகக் கொண்டு = சத்ய வாக்காகக் கொண்டு
வனம் புக்க = வனம் போக
எந்தாய் = என் தந்தையே
நின்னையே = உன்னையே
மகனாகக் பெறப் பெறுவேன் = மகனாகப் பெரும் பேறு பெறுவேன்
ஏழ் பிறப்பும் = ஏழேழ் ஜன்மங்களும்
நெடுந்தோள் வேந்தே = நீண்ட நெடிய தோளை கொண்ட வேந்தே
நம்மை மகனாகவோ மகளாகவோ மீண்டும் பெற நம் பெற்றோர்கள் இப்படி விரும்புவார்களா ?
நல்ல பிள்ளைகள் பிறக்கப் பெற்றோர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ReplyDelete