இராமாயணம் பரதன் 4 - பங்கமில் குணத்து நம்பி
இராமனுக்கு முடி சூட்டுவது என்று தீர்மானம் ஆனது. மந்தரை செய்த சூழ்ச்சியால் , கைகேயி வரம் கேட்டு, இராமனுக்கு முடி இல்லை என்று தீர்மானம் ஆகி விட்டது. காட்டுக்குப் போ என்று கைகேயி சொல்லி விட்டாள் . இராமனும் அதை ஏற்றுக் கொண்டு விட்டான். கௌசலையை பார்க்க வருகிறான்.
கோசலை கேட்கிறாள் "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உள்ளதோ " என்று. மிக மிக நுணுக்கமான இடங்கள். அதை எல்லாம் விட்டு விடுவோம்.
இராமன் சொல்கிறான், "முடி புனைய ஒரு தடையும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம், நான் முடி புனையவில்லை, பரதன் முடி சூட்டப் போகிறான்" என்கிறான்.
அப்படி சொல்லும் போது , பரதனுக்கு ஒரு அடை மொழி தருகிறான் இராமன்..."ஒரு குற்றமும் இல்லாத குணங்களைக் கொண்ட , என் தம்பி பரதன்" என்கிறான்.
பாடல்
மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி “நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான்“ என்றான்.
பொருள்
மங்கை = கோசலை
அம்மொழி கூறலும் = அந்த மொழி கூறலும். அதாவது முடி சூட்டிக் கொள்ள தடை ஏதும் இருக்கிறதா என்ற மொழியை கூறவும்
மானவன் = உயர்ந்தவன் (இராமன்)
செங்கை = சிவந்த கைகளை
கூப்பி = கூப்பி, வணங்கி
“நின் = உன்னுடைய
காதல் = அன்பான
திரு மகன் = சிறந்த மகன்
பங்கம் இல் = குற்றம் இல்லாத
குணத்து = குணங்களை கொண்ட
எம்பி = என் தம்பி
பரதனே = பரதனே
துங்க மா = பரிசுத்தமான
முடி சூடுகின்றான் = முடி சூட்டுகிறான்
என்றான் = என்றான்.
ஒரு காப்பியத்தில், அதன் கதாநாயன் இன்னொரு பாத்திரத்தை உயர்த்தி பேசுவது என்பது சற்று வித்தியாசமான விஷயம் தான்.
அதுவும் எப்போது, தனக்கு வர வேண்டிய அரசை பரதனிடம் இழந்து, காட்டுக்கும் போக வேண்டிய சூழ்நிலையில், இராமன் , பரதனைப் பற்றி குற்றமே இல்லாத குணத்தவன் என்று சொல்கிறான் என்றால் பரதனின் குணம் எப்படி இருந்திருக்க வேண்டும்.
பரதன் நல்லவனாகவே இருந்தாலும், இராமனின் இழப்பு மிகப் பெரிய இழப்பு. அரசு போனது மட்டும் அல்ல, காட்டுக்கும் வேறு போக வேண்டும். கோபம் வருவது இயற்கை. பரதன் முடி சூட்டப் போகிறான் என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தாலும் யாரும் இராமன் மேல் குறை காண முடியாது.
"பங்கமில் குணத்து எம்பி" என்கிறான்.
நல்ல குணங்கள் உள்ள பரதன் என்று சொல்லி இருந்தால் கூட சின்ன சந்தேகம் வரும். நல்ல குணங்கள் இருக்கிறது, அது கூடவே கொஞ்சம் கெட்ட குணமும் இருக்குமோ என்ற சந்தேகம் வரும். எனவே இராமன் சொல்கிறான் "குற்றமே இல்லாதவன்" என்று.
அது மட்டும் அல்ல, 'என் தம்பி' என்று பாசம் காட்டுகிறான்.
"உன் காதல் திருமகன்" என்று தாயிடமும் சொல்கிறான். எங்கே கோசலை பரதன் மேல் கோபித்து விடுவாளோ என்று நினைத்து,"உன் காதல் மகன்" என்று சொல்கிறான்.
குற்றமில்லாதவன் என்று இராமன் தரும் முதல் சான்றிதழ். இராமனால் பாராட்டப் பட்டவன் பரதன்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் , என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்தவன் பரதன்.
மேலும் பார்ப்போம்.
படிக்கப் படிக்க இனிமை.
ReplyDelete