திருக்குறள் - எண்ணித் துணிக கருமம்
பாடல்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
பொருள்
எண்ணித் = ஆராய்ந்து
துணிக = தொடங்குக
கருமம் = வேலையை
துணிந்தபின் = தொடங்கிய பின்
எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம்
என்பது இழுக்கு = என்று நினைப்பது தவறு
எந்த காரியத்தையும் யோசித்து, ஆராய்ந்து செய்ய வேண்டும். காரியத்தை ஆராய்ந்த பின், யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.
அவ்வளவுதான் பொருள்.
கொஞ்சம் ஆராய்வோம்.
"எண்ணி" என்றால் என்ன ?
இதற்கு இரண்டு அர்த்தம். ஒன்று நினைத்துப் பார்த்தல். யோசித்துப் பார்த்தல். இன்னொன்று ஒன்று, இரண்டு என்று எண்ணிப் பார்த்தல்.
ஒரு வேலையை தொடங்கும் முன்
இந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப் படும், நம்மிடம் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு காலம் ஆகும், நம்மால் அத்தனை காலம் பொறுக்க முடியுமா என்று நம்மிடம் உள்ள பணம், பொருள், நேரம், போன்றவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அனுமானிக்க வேண்டும்.
அடுத்தது, எப்படி செய்வது, யாருடைய துணை தேவைப் படும், இதில் என்னென்ன சிக்கல்கள் வரும் , வந்தால் என்ன செய்யவது , சிக்கல்களை சமாளிக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
இது இரண்டையும் சேர்த்து "எண்ணி" என்றார்.
ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது
அடுத்தது, "துணிக"
அது என்ன துணிக. செய்க என்று சொல்லி இருக்கலாம் அல்லவா. ஏன் துணிக என்றார் ?
ஒரு காரியத்தை நாம் செய்யப் போகிறோம் என்றால் அதற்காக காலத்தையும், பொருளையும் செலவிடப் போகிறோம் என்று அர்த்தம். அப்படி ஒரு காரியத்திற்காக செலவிடும் போது அந்த காலத்தையும், பொருளையும் மற்ற காரியங்களுக்கு செலவிட முடியாது. எவ்வளவோ வேலைகளை விட்டு விட்டு இந்த காரியத்தை செய்யப் போகிறோம். இது சரியாக வரலாம், வராமலும் போகலாம். தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றியாக முடிய வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ? தோல்வியும் வரலாம். மற்ற காரியங்களை வேண்டாம் என்று தள்ளி வைக்கும் துணிவு, தோல்வி வந்தால் துவண்டு விடாமல் மீண்டும் தொடரும் துணிவு வேண்டும்.
மேலும், ஒரு காரியத்தை தொடங்கினால், பல இடையூறுகள் வரும். சங்கடங்கள் வரும். எதிர்பார்த்த சிக்கல்கள், எதிர்பாராத ஆபத்துகள் என்று பல வரலாம். இவற்றை எல்லாம் எதிர் கொள்ளும் துணிவு வேண்டும். துவண்டு விடக் கூடாது. வியாபாரம் என்றால் நட்டம் வரும். திருமணம் என்றால் மன வேற்றுமை வரும். தேர்தல், தேர்வு என்றால் வெற்றி தோல்வி வரும். துணிந்து இறங்க வேண்டும்.
துணிந்த பின் எண்ணுவம் ....
வேலை பாதி போய் கொண்டிருக்கும் போது , இது சரிதானா, இது தேவைதானா, இந்த வழி சரிதானா என்று யோசிக்கக் கூடாது.
திருமணம் முடிந்த பின், ஒரு வேளை அந்தப் பெண் இவளை விட நல்லா இருந்திருப்பாளோ என்று நினைக்கக் கூடாது.
ஒரு course எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டால், பாதியில், அடடா இதுக்கு பதில் அதை எடுத்து இருக்கலாமோ என்று நினைக்கக் கூடாது.
சரி, அப்படி நினைத்தால் என்ன ஆகும் ?
"இழுக்கு" என்றார்.
அப்படினா ?
பாதியில் சிந்தனை தடுமாற ஆரம்பித்தால் , இது வரை செய்த வேலை வீணாகப் போய் விடும்.அது மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களையும் அது குழப்பி விடும். "இவனுக்கு என்ன வேணும் ? இப்ப இது வேணாம் , அது வேணுங்கிறான், நாளைக்கு அதுவும் வேண்டாம், இன்னொன்னு வேணும்னு கேக்க மாட்டான்னு என்ன நிச்சயம் " என்று சுற்றி இருப்பவர்கள் சலிப்படைவார்கள்.
அது மட்டும் அல்ல, நாம் எந்த முடிவை எடுத்தாலும்,யாரும் ஆதரிக்க மாட்டார்கள். நினைச்சு நினைச்சு மாத்திக்கிட்டே இருப்பான் அப்படினு நம்மை தனியாக விட்டு விடுவார்கள்.
சரி, அதற்காக ஒரு தவறான முடிவை எடுத்து விட்டால் அதை திருத்திக் கொள்ளக் கூடாதா ?
மீண்டும் முதல் அடியைப் படியுங்கள்...எண்ணித் துணிக கருமம். முதலில் தவறான முடிவை எடுக்கக் கூடாது.
ஒரு வேலையை தொடங்குமுன், இதில் என்னென்ன சிக்கல்கள் வரலாம், வந்தால் என்ன செய்வது என்று முன் கூட்டியே யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வீடு வாங்கப் போகிறோம் என்றால், ஒரு வேலை வீட்டின் விலை அதிகரித்து விட்டால், குறித்த காலத்துக்குள் கட்டி முடிக்க வில்லை என்றால் என்ன செய்வது என்பது பற்றி முன்பே யோசித்து முடிவு செய்ய வேண்டும். வந்தா பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது இழுக்கு.
எந்த காரியத்தையும் ஆராய்ந்து, யோசித்து, துணிந்து செய்ய வேண்டும். ஆரம்பித்த பின், யோசிக்கலாம் என்று நினைப்பது தவறு.
இன்று முதல் எந்த வேலை செய்வதானாலும் திட்டம் போடுங்கள். நல்லது கெட்டது நாலையும் யோசியுங்கள். தைரியமாக செயல் படுத்துங்கள்.
வெற்றி வரும்.
Nicely explained. Thanks
ReplyDeleteNicely explained. Thanks
ReplyDelete