Thursday, October 20, 2016

திருவாசகம் - யானை மாதிரி

திருவாசகம் - யானை மாதிரி

மனிதன் என்றால் மனதால் செலுத்துப் படுபவன், மனம் வேலை செய்யும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்.

குழந்தை பிறந்த சில காலம் வரை, நாம் அந்தக் குழந்தையை "அது" என்று தான் சொல்லுவோம். "அது அப்படித்தான், பசிச்சா ஒரே சத்தம் போடும்" "அது படுக்கையை நனைக்கும்" என்று சொல்கிறோம்.

அது என்பது விலங்குகளுக்கு போடும் சொல். ஏன் மனிதக் குழந்தைக்கு அதை போடுகிறோம் ?

ஏன் என்றால் குழந்தைகளுக்கு மனம் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை.

அதே போல், மிக வயதாகி, ஞாபகம் தவறி, புலன்கள் தடுமாறி மனம் சரியாக வேலை செய்யாமல் இருக்கும் வயதானவர்களை "அதுக்கு வேற வேலை இல்லை , ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும்" என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

மனம் சரியாக வேலை செய்யும் வரைதான் மனிதன். இல்லை என்றால் அவன் மனிதன் இல்லை.

மாணிக்க வாசகர் தன்னை யானை என்று உருவகித்து பாடல் தருகிறார்.

யானையைப் போல இருந்தேன். என் மனம் என்ன என்று நான் அறிய மாட்டேன். கண்டதெல்லாம் துன்பமே. வருக என்று என்று என்னை கட்டளை இட்டாய். வலிமையில்லாதவன் நான். புலன் இன்பங்களை அனுபவிக்க என்றே பிறந்த நான்என்கிறார்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இரு கை யானையை ஒத்திருந்த என் உள்ளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உள்ளோருக்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இரு கை = இரண்டு கைகளை உடைய

யானையை = யானையை

ஒத்திருந்த = போல் இருந்த

என் = என்னுடைய

உள்ளக் = உள்ளத்தின்

கருவை = உள் நிலையை

யான் = நான்

கண்டிலேன் = காணவில்லை

கண்டது = கண்டது எல்லாம்

எவ்வமே = துன்பமே

வருக என்று = என்னை வா என்று

பணித்தனை = கட்டளை இட்டாய்

வான் உள்ளோருக்கு = வானில் உள்ள தேவர்களுக்கு

ஒருவனே = சிறந்தவனே

கிற்றிலேன் = வலிமை இல்லாதவன் நான்

கிற்பன் உண்ணவே = உண்பதற்கு மட்டும் வலிமை உள்ளவன்

சரி, இதில் எதற்கு யானையை குறிப்பிட்டு மாணிக்க வாசகர் கூறுகிறார் ?

யானைக்கும் நமக்கும்  பல ஒற்றுமை உண்டு.

யானை என்நேரமும் எதையாவது தின்று  கொண்டே இருக்கும். யானைக்கு வயறு தான் எல்லாம். வாயில் ஒன்றை வைத்துக் கொண்டே தும்பிக்கையில் இன்னொன்றை பற்றிக் கொண்டு இருக்கும். "இரு கை " என்று   கூறியது,இரு பக்கம்  என்ற பொருளில். சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதர்களில் பலர் அப்படித்தான். காலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் காப்பி  , டீ குடிப்பது. அப்புறம் சிற்றுண்டி, அப்புறம் பதினோரு மணிக்கு இரு காப்பி அல்லது டீ....என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

யானை, தன்னை கட்டுவதற்கு சங்கிலியை எடுத்து யானை பாகன் கையில் தரும்.

நாமும் அப்படித்தானே, இருவினை என்ற சங்கிலியை எடுத்து நாமே பூட்டிக் கொள்கிறோம்.

யானை, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். மனிதர்களும் அப்படித்தான். அவரக்ளை பாவம் செய்யச் சொல்லி தூண்டுவது யார். அவர்களே வலியச் சென்று செய்வார்கள்.

யானைக்கு தனக்கு மேல் ஒரு பாகன் அமர்ந்து இருக்கிறான் என்று தெரியாது.  அது போல மனிதர்களும் , தனக்கு மேல் ஒன்று உண்டு என்று அறிவது  இல்லை என்கிறார் மணிவாசகர்.

எனவே யானைக்கு தன்னை உதாரணமாகச் சொன்னார்.

இறை அருள் என்பது ஏதோ நாம் தேடிப் போய் அடைவது அல்ல. அதற்கு உரிய நேரமும், பக்குவமும், முன் முயற்சியும் இருந்தால் அல்லாது நிகாழாது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மணிவாசகர்.

தவமும் தவம் உடையவர்க்கே ஆகுமாம் என்பார் வள்ளுவர். தவம் செய்வதற்கு தவம் செய்திருக்க வேண்டும்.

எனவே தான் :"வருக என்று பணித்தனை" என்கிறார் மணிவாசகர்.

 
"என் உள்ளக் கருவை யான் கண்டிலேன்"

நான் யார். நம் உள்ளம் என்ன. நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நம் ஆசைகள், அச்சங்கள் என்ன ? நம்மை தூண்டுவது எது ? இதெல்லாம் நமக்குத் தெரியாது.  சாவி கொடுக்கப் பட்ட  பொம்மை போல இயங்குகிறோம். பிறந்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளை பெற்றோம் என்று இயந்திர கதியில் வாழ்க்கையை நடத்துகிறோம்.

உள்ளே சென்று ஆராய வேண்டும். நம்மை நாம் அறிய வேண்டும். நாம் அறிந்தது எல்லாம் யார் யாரோ சொன்னது. நம் சொந்த அனுபவம், ஆராய்ச்சி என்று ஒன்றும் கிடையாது.  இவற்றை தாண்டி நான் யார் என்று அறிய வேண்டும்.

நான் யார் என்ற அறிவு வரும் வரை, வாழ்க்கை துன்பம் நிறைந்தே இருக்கும். நம்மை நாம் அறியும் போது , துன்பம் விலகி இன்பம் பிறக்கும்.

அதை அறிய ஒரு குருவின் துணை வேண்டும்.

வீட்டில் தாய்மார்கள் சூடான பொருட்களை தூக்க  கிடுக்கியை உபயோகப் படுத்துவார்கள். அது அனைத்து பாத்திரங்களையும் தூக்கப் பயன்படும். ஆனால், தன்னைத் தானே அதனால் தூக்க முடியாது. அதற்கு இன்னொரு கிடுக்கி வேண்டும்.

அது போல, நாம் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், நம்மை நாம் அறிய ஒரு குருவின் துணை வேண்டும்.


புலன் இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு எதற்கும் எனக்கு சக்தி இல்லை. நீ தான் எனக்கு வழி காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.


1 comment:

  1. உள்ளர்த்ததை இவ்வளவு தெளிவாக விளக்கியதற்கு
    மிக்க நன்றி.

    ReplyDelete