Sunday, October 2, 2016

சிலப்பதிகாரம் - சதுக்க பூதம்

சிலப்பதிகாரம் - சதுக்க பூதம் 


தவறு செய்பவர்களுக்கு பயம் இல்லாமல் போய் விட்டது. மாட்டிக் கொண்டால் என்ன ? சட்டம், வழக்கு, வக்கீல், சாட்சி, மேல் முறையீடு , சட்டத்தில் உள்ள ஓட்டைகள் , என்று ஏதோ வழியில் தப்பி விடலாம் என்று நினைக்கிறார்கள். தப்பியும் விடுகிறார்கள் பல பேர்.

சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் உள்ள பலவீனம் தவறு செய்பவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது.

தெரு முனையில் , போக்கு வரத்து விதியை மீறுபவரை பிடிக்கும் காவலரில் இருந்து , உயர் அதிகாரி வரை இலஞ்சம் கொடுத்து சரி கட்டி விடலாம் என்று பணம் படைத்த தவறு செய்பவர்கள் நினைக்கிறார்கள். பணம் இருந்தால் போதும் , எந்த குற்றத்தில் இருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் வலுத்து விட்டது.

மனசாட்சி என்பது இல்லாமல் போய் விட்டது.

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்த பின், தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகார காலத்தில் , சதுக்க பூதம் என்று ஒன்று இருந்தது.

 சதுக்கம் என்றால் நாலு வீதி சேரும் இடம். ஊருக்குப் பொதுவான  ஒரு இடம்.

அங்கே ஒரு பூதம் இருக்குமாம்.

தவறு செய்தால் அல்ல, செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், அந்த பூதம் பெரிய குரல் எழுப்பி சத்தம் போட்டு, அப்படி தவறு செய்பவர்களை பிடித்து, நடு வீதியில் வைத்து நைய புடைத்து , கடித்து தின்று விடுமாம்.

தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே போதும், பூதம் "ஓ" என்று கத்திக் கொண்டு வந்து, ஊருக்கு நடுவில் வைத்து அடித்து துவைத்து பிழிந்து , கடித்து தின்று விடும்.

தவறான எண்ணம்  வருமா ?

யார் யாரை எல்லாம் அந்த சதுக்க பூதம் பிடித்து தின்னும் என்று இளங்கோ அடிகள் ஒரு பட்டியல்  தருகிறார்.

பாடல்

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும


பொருள்

தவ = தவம்

மறைந் தொழுகுந் தன்மை யிலாளர் = வேடத்தில் மறைந்து , தவத்திற்கு உரிய  தன்மை இல்லாதவர்கள்

 
அவமறைந் தொழுகும் = அவலத்தை மறைத்து வாழும்

அலவற் பெண்டிர் = விலை மகளிர் 

அறைபோ கமைச்சர் = சூது செய்யும் அமைச்சர்கள் 

பிறர்மனை நயப்போர் = மற்றவனுடைய மனைவியை விரும்புபவன்

பொய்க்கரி யாளர் = கரி என்றால் சாட்சி. பொய் கரி என்றால் பொய் சாட்சி சொல்பவர்கள்

புறங்கூற் றாளரென் = புறம் கூறுபவர்கள்

கைக்கொள் பாசத்துக் = கையில் உள்ள பாசக் கயிற்றால்

கைப்படு வோரெனக் = வீசிப் பிடித்து  (கையில் கொண்டு)

காத நான்கும் = நான்கு காதமும் கேட்க்கும் படி

கடுங்குர லெடுப்பிப் = பெரிய குரலை எழுப்பி

பூதம்= பூதம்

புடைத்துணும் = அடித்து புடைத்து உண்ணும்

பூத சதுக்கமும = பூதம் வாழும் சதுக்கமும்

போலி சாமியார்களை பிடித்து தின்று விடும்.

பொய் சாட்சி சொல்பவர்களை தின்று விடும்

மற்றவர்களை பற்றி புறம் சொல்லுபவர்கள், மற்றவன் மனைவியை விரும்பினாலே போதும்,  பூதம் வந்து பிடித்துக் கொண்டு போய்விடும்.

சூது செய்யும் அமைச்சர்களை கொண்டு போய் தின்று விடும்.

தவறு செய்யும் எண்ணம் வருமா ?

ஊரின் நடுவில் ஒரு பூதத்தின் சிலை இருக்கும்.

அந்த ஊரில் உள்ள சின்ன பிள்ளைகளுக்கு இப்படி சொல்லி   வளர்ப்பார்கள். தப்பு நினைத்தால் பூதம் கடித்து தின்று விடும் என்று.

போகும் போதும், வரும் போதும்  அதை பார்ப்பவர் மனதில், குறிப்பாக  குழந்தைகள் மனதில் கெட்ட எண்ணங்கள் வளராது.

பூதம் பிடித்து தின்றதோ இல்லையோ. அப்படி இருக்க வேண்டும் என்று  எல்லோரும் நினைத்து ஊர் நடுவில் ஒரு சிலையை வைத்து இருந்தார்கள்.

நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள்  நாம்.

தவறான ஒன்றை நினைப்பதே கூட தவறு என்று  வாழ்ந்தவர்கள் நம் முன்னவர்கள்.

பெருமைப் படுவோம்.



2 comments:

  1. இப்படி ஒரு பூதம் உண்மையில் இருக்கக் கூடாதா?!

    ReplyDelete
  2. Traffic Police மற்றும் காவல்துறை தான் இன்றைய சதுக்க பூதம்.

    ReplyDelete