நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்
காமம் பற்றி பேசுவது என்பது இன்றும் ஒரு சங்கடமான விஷயமாகவே இருக்கிறது. பிள்ளைகள் எந்த வலை தளத்தில் , எதைப் பார்த்து கெட்டுப் போவார்களோ என்ற பயப்படாத பெற்றோர்கள் இல்லை. பிள்ளைகள் சில வலை தளங்களுக்குச் செல்லாமல் தடுக்கவும் எத்தனையோ வழி முறைகள் , மென் பொருள்கள் வந்துள்ளன.
எல்லாம் எதனால் ?
காதல், காமம் பற்றி சரியான ஒரு அணுகுமுறை இல்லாததால்.
திருக்குறள், நாலடியார் போன்ற நூல்கள், காமத்தை எவ்வளவு அழகாகச் சொல்கின்றன.
ஒரு தாயும் மகனும் ஒன்றாக அமர்ந்து , முகம் சுளிக்காமல் அவற்றை படிக்க முடியும்.
ஒரு தந்தையும், மகளும் ஒன்றாக படித்து இன்புற முடியும்.
அப்படி ஒரு பாடல்.
ஒரு பெண் பிரிவுத் துயரால் வாடுகிறாள். அவள் காதலன் பொருள் தேடி வெளியூர் சென்றிருக்கிறான். தன் துயருக்கு நான்கு பேரை அவள் குற்றம் சாட்டுகிறாள்.
சிவன், காகம், பாம்பு, தாய்.
இந்த மூன்று பேரும்தான் தன்னுடைய துயருக்கு காரணம் என்கிறாள்.
எப்படி ? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே ?
பாடல்
கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.
பொருள்
கண்மூன் றுடையானும் = மூன்று கண்கள் உடைய சிவனும்
காக்கையும் = காக்கையும்
பையரவும் = அரவு என்றால் பாம்பு. படம் எடுத்து ஆடும் பாம்பும்
என்னீன்ற யாயும் = என்னை ஈன்ற தாயும்
பிழைத்ததென் = எனக்கு பிழை செய்தார்கள்
பொன்னீன்ற = பொன் போன்ற
கோங்கரும் = முளை விடும் அரும்பு
அன்ன = போன்ற
முலையாய் = மார்பை உடையவளே
பொருள்வயிற் = பொருள் சேர்க்க வேண்டி
பாங்கனார் = தோழர்
சென்ற நெறி = சென்ற வழி
என்ன இது ஒண்ணுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா ?
சிவன், முன்பு ஒரு முறை மன்மதனை எரித்தான் . அப்படியே விட்டிருக்கலாம். ரதியின் மேல் பரிதாபம் கொண்டு, அவனை மீண்டும் உயிர்பித்தான். அப்படி உயிர்ப்பிக்காமல் இருந்திருந்தால், அவன் இப்படி என் மேல் மலர் அம்புகளை ஏவி என்னை இப்படி வதைக்க மாட்டான் அல்லவா. எனவே, சிவன் முதல் குற்றவாளி.
இந்த காகம் , தன் கூட்டில் உள்ள குயிலின் முட்டையை அடை காத்து குயிலாக வெளிக் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தக் குயில் இப்படி இனிமையாகக் கூவி என் பிரிவுத் துயரை மேலும் துன்பம் உள்ளதாக மாற்றாமல் இருந்திருக்கும்.
பாம்பு. இராகு கேது என்ற பாம்பு , சந்திரனை கிரகணத்தன்று விழுங்கியது. அப்படியே இருந்திருக்கலாம். ஏனோ மீண்டும் வெளியில் விட்டு விட்டது. அப்படி விட்டதால் தானே இந்த நிலவு என்னை இப்படி சுட்டு எரிக்கிறது.
தாய். எல்லாவற்றிற்கும் மேல், என் தாய் என்னை பெண்ணாக பெறாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த துயர் வருமா என்று கேட்கிறாள்.
யாரிடம் ? தன் தோழியிடம். அவளை எப்படி வருணிக்கிறாள் ? தென்னை மரத்தில் சின்ன குருத்து வரும். அது போல இளமையான மார்பகங்களை கொண்டவளே என்று. தானும் அவ்வளவு சின்னப் பெண் என்று சொல்லாமல் சொல்கிறாள்.
இளமையான, காதல் வயப்பட்ட பெண். பிரிவு அவளை மிகவும் வாட்டுகிறது.
எவ்வளவு கண்ணியமாகச் சொல்கிறாள்.
பிரிவிலும் ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது.
என்ன அருமையான கற்பனை! நன்றி.
ReplyDelete