Saturday, May 4, 2019

கம்ப இராமாயணம் - ஊசலின் உலாவுகின்றாள்

கம்ப இராமாயணம் - ஊசலின் உலாவுகின்றாள் 


சூர்பனகைக்கும் இராமனுக்கும் நடந்து கொண்டிருக்கின்ற உரையாடலை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

யார் என்று இராமன் கேட்டதற்கு, சூர்ப்பனகை பதில் சொல்லுகிறாள். அதற்கு இராமன் மேலும் சந்தேகம் கேட்கிறான். சூர்ப்பனகை விளக்குகிறாள். கடைசியில், தன் மனதில் உள்ள ஆசையை சொல்லி விடுகிறாள்.

இராமன் பேசாமல் நிற்கிறான்.

"எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. உன் எண்ணம் தவறானது. வேறு இடம் பார்" என்று சொல்லி இருக்கலாம்.

அல்லது, பலதார மணம் என்பது அந்தக் காலத்தில் உள்ள ஒன்று தான் (பாடல்களை அது நடந்த காலத்தோடு சேர்த்து வைத்துப் பார்த்தல்). எனவே, இராமன் இன்னொரு பெண்ணை நினைப்பதில் தவறில்லை என்று சூர்ப்பனகை நினைத்திருக்கலாம்.

இராமனின் உரையாடல் சூர்பனகைக்கு ஒரு தெளிவான முடிவைத் தரவில்லை. குழம்புகிறாள்.

"இப்படி பேசாமல் நிற்கிறானே. அவன் உள்ளத்தில் என்ன இருக்கிறது. என் மேல் ஆசை இருக்கிறதா ? அல்லது நான் வேண்டாம் என்று  நினைக்கிறானா. ஒரு குழப்பமாக இருக்கிறதே "

என்று தவிக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் 
     பெற்றி ஓராள்; 
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், 
     'புகன்ற என்கண் 
ஆசை கண்டருளிற்று உண்டோ? அன்று 
     எனல் உண்டோ?' என்னும் 
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் 
     ஓர் உரையைச் சொல்வாள்;

பொருள்


பேசலன் = பேசாமல் இருக்கிறான்

 இருந்த வள்ளல்  = இருக்கின்ற வள்ளலான இராமனின்

உள்ளத்தின் = மனதின்

பெற்றி ஓராள்;  = தன்மை, நிலைமை தெரியாதவள்

பூசல் வண்டு அரற்றும்  = பூவில் வண்டு முரலும்

கூந்தல் = கூந்தலைக் கொண்டவள்

பொய்ம் மகள்,  = பொய்யானவள்

'புகன்ற = இவற்றை எல்லாம் சொல்லிய

என்கண்  = என்னிடத்தில்

ஆசை கண்டருளிற்று உண்டோ?  = ஆசை கண்டு அருள் செய்வானா

அன்று எனல் உண்டோ?' = இல்லை வேண்டாம் என்று நினைக்கிறானா

 என்னும் = என்று

ஊசலின் உலாவுகின்றாள் = ஊஞ்சல் ஆடுவதைப் போல அவள் மனம் அங்கும் இங்கும் ஆடுகிறது

மீட்டும்  = மீண்டும்

ஓர் உரையைச் சொல்வாள்; = ஒரு செய்தி சொல்வாள்


ஒரு சிக்கலான, தர்ம சங்கடமான இடம்.

இராமன் உண்டு அல்லது இல்லை என்றது சொல்லி இருக்க வேண்டும்.

தேவை இல்லாமல் பல கேள்விகளை கேட்டுவிட்டு, பின் அவள் மனதில் உள்ள ஆசையை  சொன்ன பின், அமைதியாக நின்றால் என்ன அர்த்தம்?

நமக்குத் தெரியும் இராமன் ஏக பத்தினி விரதன் என்று.

சூர்பனகைக்குத் தெரியாதே.

வாசகர்களை ஒரு குழப்பத்தில், ஒரு நிலையற்ற தன்மையில், ஒரு எதிர்பார்ப்பில் கொண்டு வந்து  நிறுத்துகிறான் கம்பன்.

கதை சொல்லும் உத்தி அது.

வாசிப்பவனுக்கு  ஒரு tension , anxiety , suspense இருக்க வேண்டும். அப்போதுதான் கதை படிக்க சுவையாக இருக்கும்.

"ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது ஒரு நாள் என்ன பண்ணுச்சு தெரியுமா ?..."

என்று கேள்வி கேட்டு நிறுத்தும் போது, கேட்பவர்களுக்கு ஒரு ஆவல் உண்டாடுகிறது.

"சொல்லு சொல்லு...என்ன பண்ணுச்சு " என்று கேட்பார்கள்.

சரி, இதுக்கு மேலேயும் சூர்ப்பனகை என்னதான் சொல்லி இருப்பாள் ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post.html

1 comment:

  1. காக்கா உத்தியைத்தான் நீயும் பயன்படுத்துகிறாய்!

    ReplyDelete