Monday, May 6, 2019

கம்ப இராமாயணம் - நீதி நிலை இல்லாள்

கம்ப இராமாயணம் - நீதி நிலை இல்லாள் 


இராமன் மேல் தனக்குள்ள காதலை சூர்ப்பனகை வெளிப்படையாகவே சொல்லி விட்டாள். "பெண்மைக்கு ஒரு பங்கமும் இல்லாமல் வந்து இருக்கிறேன். என் இளமை எல்லாம் வீணே கழிந்து விட்டது" என்று கூறினாள்.

இராமனுக்கு தெரிந்து விட்டது. இவள் சாதாரண பெண் இல்லை. அரக்கி என்று அறிந்து கொண்டான். அவள் நோக்கமும் சரி இல்லை என்றும் புரிந்து கொண்டான்.

புரிந்தவன் என்ன செய்திருக்க வேண்டும்? "அம்மா தாயே, ஆளை விடு...வேறு இடம் பார் " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு இராமன் சொல்கிறான் ..."உனக்கும் எனக்கும் எப்படி பொருந்தும். நீயோ அந்தணர் மரபில் வந்தவள். நானோ அரச குலத்தில் பிறந்தவன். நமக்குள் எப்படி ஒரு தொடர்பு இருக்க முடியும் " என்று சொல்கிறான்.

"எனக்கு திருமணம் ஆகி விட்டது. நான் வேறு ஒரு பெண்ணை தொடுவது இல்லை என்ற விரதம் பூண்டவன். எனவே உன் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது " என்று  சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, "நம் குலம் வேறு வேறாக இருக்கிறதே" என்று கூறுகிறான். ஒரு வேளை அவள் அரச குலத்தில் பிறந்தவளாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தது இருப்பானா ?

எதற்காக வீணாக அவள் மனதில் ஆசையை வளர்க்க வேண்டும் ?

பாடல்


நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; 
     வினை மற்று எண்ணி 
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் 
     மனத்துள் கொண்டான்; 
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் 
     துணிவிற்று அன்றால்,
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் 
     வந்தேன்' என்றான்.


பொருள்

நிந்தனை = பழிக்கத்தக்க

அரக்கி = அரக்கி

நீதி நிலை இலாள் = நீதி வழியில் நில்லாதவள்

வினை = செயல்

மற்று எண்ணி = வேறு எதையோ எண்ணிக் கொண்டு

வந்தனள் ஆகும்' என்றே = வந்திருக்கிறாள் என்று

வள்ளலும்  = இராமனும்

மனத்துள் கொண்டான்;  = மனதில் நினைத்துக் கொண்டான்

'சுந்தரி! = சுந்தரி (சூர்பனகையே)

மரபிற்கு = பழக்க வழக்கத்திற்கு

ஒத்த தொன்மையின்  = ஒத்துப் போகக் கூடிய தன்மையில்

துணிவிற்று அன்றால் = துணிந்து செய்ய முடியாது (உறுதியாக செய்ய முடியாது)

அந்தணர் பாவை நீ; = நீயோ அந்தணர் பாவை

யான் அரசரில்  வந்தேன்' என்றான். = நான் அரச குலத்தில் வந்தவன் என்றான்

இது ஒரு தேவை இல்லாத வாக்கு வாதம். "நம்ம இரண்டு பேருக்கு நடுவில் குலம் தான் வேறுபாடு .." என்று கூறினால் என்ன அர்த்தம்.

அதற்கும் சூர்பனகை பதில் வைத்து இருக்கிறாள் ....

அது என்ன என்று நாளை பார்ப்போமா


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_6.html



1 comment:

  1. அரக்கி என்று தீர்மானித்தபின், ஏன் அந்தண குலத்தில் வந்தவள் நீ என்று சொல்கிறான்?!

    சபலம்தானோ?

    ReplyDelete