Saturday, May 11, 2019

கம்ப இராமாயணம் - என் உயிர் காண்பென்

கம்ப இராமாயணம் - என் உயிர் காண்பென் 


தன்னை மணந்து கொள்ளும்படி இராமனிடம் சூர்ப்பனகை கூறுகிறாள். "என்னால் உன்னை மணந்து கொள்ள முடியாது" என்று கூறாமல், "நான் எப்படி உன்னை மணந்து கொள்ள முடியும். நானோ அரச வம்சத்தில் வந்தவன், நீயோ வேதியர் குலத்தில் வந்தவள். நமக்குள் எப்படி தொடர்பு ஏற்பட முடியும் " என்று கேட்கிறான்.

அதற்கு என்ன அர்த்தம் ?

ஒரு வேளை அவளும் அரச குலமாக இருந்தால், பிரச்சனை இல்லை என்பதுதானே முடிவாக இருக்க முடியும்?

அதை அறிந்து கொண்டு, சூர்ப்பனகை சொல்லுகிறாள்

"ஓ..இப்ப அதுதான் பிரச்சனையா? என் தந்தை வேதியர் குலத்தில் பிறந்தவர். என் தாய் சாலகங்கடர் என்ற அரச வம்சத்தை சேர்ந்தவள். எனவே, நான் அரச குலத்தில் வந்தவள் தான். என்னை ஏற்றுக் கொள். இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன்"

என்கிறாள்.


பாடல்

'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக்
     கற்பின் எம் மோய், 
தாரணி புரந்த சாலகடங்கட 
     மன்னன் தையல்; 
போர் அணி பொலம் கொள் வேலாய்! 
     பொருந்தலை இகழ்தற்கு ஒத்த 
காரணம் இதுவே ஆயின், என் உயிர் 
     காண்பென்' என்றாள்.

பொருள்


'ஆரண மறையோன் எந்தை; = என் தந்தை மறை ஓதும் குலத்தில் தோன்றிய அந்தணர்

அருந்ததிக் கற்பின் எம் மோய்,  = என் தாய் அருந்ததி போல் கற்பில் உயர்ந்தவள்

தாரணி புரந்த = உலகத்தை ஆண்ட

சாலகடங்கட = சாலகடங்கட என்ற வம்சத்தில் வந்த

மன்னன் தையல்;  = மன்னனின் மகள் அவள்

போர் = போர் செய்வதையே

அணி பொலம்  = ஒரு அணிகலன் போல

கொள் வேலாய்!  = கொண்ட வேலை உடையவனே

பொருந்தலை = நமக்குள் பொருத்தம் இல்லை என்று

இகழ்தற்கு = இழந்ததற்கு

ஒத்த காரணம் இதுவே ஆயின், = சரியான காரணம் இது தான் என்றால்

என் உயிர்  காண்பென்' என்றாள். = என் உயிரை விட்டு விடுவேன் என்றாள்

இராமனுக்கு குல வேறுபாடு உண்டா ?

குகனோடு ஐவரானோம் என்று குகனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் என்று சுக்ரீவனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

காதல் ஐய உன்னோடும் எழுவரானோம் என்று அரக்கர் குலத்தில் பிறந்த  வீடணனை தம்பியாக ஏற்றுக் கொன்றான்

குகனோடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த 
அகமனர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் 
புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை



குகனை தம்பி என்று சொன்னால், ஏதோ ஒப்புக்கு சொன்னான், ஒரு உபசார வார்த்தை   என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

இராமன் ஒரு படி மேலே போகிறான். 

"இந் நன்நுதல் அவள் நின் கேள்" என்று சொல்கிறான். 

இந்த சீதை இருக்கிறாளே உனக்கு கொழுந்தியாள் என்று அதை மேலும்  உறுதிப் படுத்துகிறான். 

தயரதனுக்கு இராமன் நேரடியாக இறுதிக் கடன் செய்யவில்லை. 

ஜடாயு என்ற பறவைக்கு, மகன் இடத்தில் இருந்து இறுதிக் கடன் செய்தான். 

அப்படிப்பட்ட இராமனுக்கு குல வேறுபாடு இருக்குமா ?

சரி, அப்படியே இருந்தாலும், சூர்ப்பனகை அதற்கும் பதில் சொல்லி விட்டாள் . என் தாய் அரச குலத்தில் பிறந்தவள். எனவே நானும் அரச குலம் தான் என்று.

இராமன் கூறிய ஒரே எதிர்ப்பும் இப்போது சரி செய்யப்பட்டு விட்டது. 

திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே ?

செய்தானா ?

3 comments:

  1. சூர்ப்பனகை சொல்வது பொய் என்று அவனுக்குத் தெரிந்தால், அவன் அவளை போய்வா என்று அனுப்பி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ராமனுக்கு தெரியாததா? பேச்சை நீட்டிப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்.எனக்கு புலப்படவில்லை..அடுத்த பதிவில் தெரிந்து விடும்.

    ReplyDelete
  3. குன்று சூழ்வான்
    மகனொடும் அறுவரானோம் ? இதை விளக்கவும் - சுக்கிரீவன் தந்தை யாரோ ?

    ReplyDelete