குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே
புதிதாக திருமணம் ஆனவர்கள் அவர்கள். ஏதோ வேலை நிமித்தம் அல்லது வேறு ஏதோ தவிர்க்க முடியாத காரணம், அவளை விட்டு அவன் பிரிந்து கொஞ்ச காலம் போக வேண்டி இருக்கிறது. அவளுக்கு அவனை விட்டு பிரியவே மனம் இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதே சமயம், போகும் நேரத்தில் அபசகுனமாக அழுது கொண்டிருந்தால் அது நல்லா இருக்காது என்று எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு அவனை வழி அனுப்புகிறாள்.
அவனும் ஊர் போய், செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஊர் திரும்புகிறான்.
அவனை கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியவில்லை. கண்ணீர் பொங்கி பொங்கி வருகிறது. அடக்க முடியாமல் அழுகிறாள்.
கண்ணைத் துடைத்துக் கொண்டு, மெல்லச் சிரிக்கிறாள். வெட்கம் வருகிறது. ஐயோ, நான் ஏன் இப்படி அழுகிறேன்...அவர் தான் வந்து விட்டாரே , எதுக்கு அழுகிறேன். அழுவதாய் இருந்தால் அவர் போகும் போது அழுதிருக்க வேண்டும். அழுது, அவர் போவதை நிறுத்தி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்போது ஏன் அழுகிறேன் என்று நினைத்து தனக்குத் தானே வெட்கப் படுகிறாள். "இந்த கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே " என்று தன்னைத் தானே வியக்கிறாள்.
பாடல்
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழி துளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
பொருள்
நாணில = நாண் + இல்லை = நாணம் இல்லை
மன்ற = மற்ற
வெங் கண்ணே = என் கண்ணே
நாணேர்பு = நாள் + ஏற்பு = அவர் சென்ற நாளை ஏற்றுக் கொண்டு. அவர் பிரிந்து போவதை ஏற்றுக் கொண்டு
சினைப் = கரு கொண்ட
பசும் = பச்சை
பாம்பின் = பாம்பின்
சூன் = சூல் , கரு
முதிர்ப் பன்ன = முதிர்ந்த போது. பச்சை பாம்பின் வயிற்றில் இருக்கும் கரு போல
கனைத்த = வளர்ந்த
கரும்பின் = கரும்பின்
கூம்பு = தோகை
பொதி யவிழ = விரித்து நிற்க
நுண்ணுறை = நுண்ணிய
யழி துளி = மழை துளி
தலைஇய = பெய்ய
தண்வரல் வாடையும் = குளிர்ந்த வாடை காற்று
பிரிந்திசினோர்க் = பிரிந்து வாழும் தலைவருக்கு
கழலே. = அழுவதால்
பிரிந்த போது அழாமல், சேரும் போது அழுவதால், இந்த கண்களுக்கு ஒரு நாணம் இல்லை.
மழைச் சாரல், குளிர்ந்த சூழ் நிலை. ஊரெல்லாம் ஒரே பச்சை பசேலென இருக்கிறது. கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது.
பிரிந்தவர் வந்திருக்கிறார்.
அப்புறம் என்ன?....
சங்க காலப் பாடல்.
மனித மனம், மனிதனின் உணர்ச்சிகள் எப்படி நிலத்தோடும், கால சூழ் நிலையாலும் பாதிக்கப் படுகிறது என்பதைக் காட்டுகிறது.
நாம் அவ்வளவாக நேரடியாக அறிவது இல்லை. நாம் வாழும் சூழ்நிலை நம் எண்ணங்களை, நம் சிந்தனைகளை பாதிக்கிறது என்பதை.
வீட்டைப் பெருக்கி , பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, அழகாக வைத்திருங்கள்....மனம் சந்தோஷமாக இருக்கும்.
வீட்டை குப்பை கூளமாக வைத்து இருங்கள். மனமும் குழப்பத்தில் இருக்கும்.
தமிழர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்தார்கள்.
அகம் , புறத்தை பாதிக்கிறது.
புறம், அகத்தை பாதிக்கிறது.
அகமும் புறமும் ஒன்றான ஒரு கூட்டு கலவைதான் நம் வாழ்க்கை.
சிந்திப்போம்.
பாடலைவிட உரை இனிமை!
ReplyDelete