Monday, May 20, 2019

கம்ப இராமாயணம் - திரு இங்கு வருவாள்கொல்லோ?

கம்ப இராமாயணம்  - திரு இங்கு வருவாள்கொல்லோ?


இராமனுக்கும் சூர்பனகைக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , பர்ணசாலையின் உள் இருந்து சீதை வெளியே வந்தாள்.

சீதையை கண்ட சூர்ப்பனகை திகைக்கிறாள்.


"நறுமணம் பொருந்திய கூந்தலை உடைய இந்தப் பெண்ணை இவன் இந்தக் காட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டான். இப்படி ஒரு அழகு உள்ள பெண் இந்த காட்டில் யாரும் இல்லை. தாமரை மலரில் இருந்து, கால் தோய அந்த இலக்குமியே எங்கு வந்தாளோ" என்று உள்ளை திகைத்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


பாடல்

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து 
     இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர் 
     யாரும் இல்லை; 
அரவிந்த மலருள் நீங்கி, அடி 
     இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள்கொல்லோ?' என்று அகம் 
     திகைத்து நின்றாள்.


பொருள்


'மரு ஒன்று = நறுமணம் பொருந்திய

கூந்தலாளை = கூந்தல் கொண்ட இந்தப் பெண்ணை

வனத்து = காட்டுக்கு

இவன் = இராமன்

கொண்டு வாரான்; = கொண்டு வந்திருக்க மாட்டான்

உரு = இப்படி ஒரு உருவம் உள்ள பெண்கள்

இங்கு = இந்தக் காட்டில்

இது உடையர் ஆக = இப்படி அழகு உடையவர் ஆக

மற்றையோர்  = வேறு பெண்கள்

யாரும் இல்லை;  =யாரும் இல்லை

அரவிந்த = தாமரை

மலருள்  = மலரில் இருந்து

நீங்கி = நீங்கி

அடி  = திருவடி

இணை = இரண்டும்

படியில் தோய = நிலத்தில் படும்படி

திரு = திருமகள்

இங்கு வருவாள்கொல்லோ?' = இங்கு வந்திருப்பாளோ?

என்று = என்று

அகம்  = மனம், உள்ளம்

திகைத்து நின்றாள். = திகைத்து நின்றாள்

சீதை அப்போதுதான் பர்ண சாலையில் இருந்து வெளியே வருகிறாள். அவள் கூந்தலின்  மணம் சூர்பனகைக்குத் தெரிந்து விடுகிறது.

தாடகையும் அப்படித்தான்.


தாடகையைப் பற்றி கூறும் போது விசுவாமித்திரன் வாயிலாக கம்பன் கூறுவான்,

"எமன் கூட நமது இறுதி நாளில் தான் வந்து நம் உயிரை கொண்டு செல்வான். ஆனால், இவளோ, உயிர்களின் வாடை பட்டாலே போதும், எடுத்து தின்று விடுவாள்" என்கிறான்.

‘சாற்றும் நாள் அற்றது எண்ணித்,
    தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி,
    இவளைப் போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன
    நயப்பது ஓர்
கூற்று உண்டோ? சொலாய்!
    கூற்று உறழ் வேலினாய்!

சிலருக்கு உணவின் வாடை பட்டாலே போதும். பசி வந்து விடும். ஹ்ம்ம்...நல்ல மணம் வருதே...இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று சாப்பிட கிளம்பி விடுவார்கள். அது அரக்க குணம். பசித்தால் அன்றி சாப்பிடக் கூடாது.

இங்கே, சூர்பனகைக்கு சீதையின் கூந்தல் வாசம் வருகிறது.

"இவளை பார்த்தால் நல்ல குலப் பெண் போல இருக்கிறாள். இராமன் எதுக்கு இவளை  காட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கப் போகிறான்" எனவே, இது அவன் மனைவியாக இருக்காது  என்று அவள் நினைக்கிறாள்.

சரி, மனைவி இல்லை என்றால், இங்கே காட்டில் இருக்கும் பெண்ணாக இருக்கும் என்றால், இப்படி ஒரு அழகான பெண் இந்தக் காட்டில் ஏது. எனவே, இவள் இந்தக் காட்டில் திரியும் பெண்ணும் இல்லை.

ஒருவேளை, இராமன் பூஜை சேத பலனாக, அந்த திருமகளே இங்கு வந்திருப்பாளோ என்றால், இவள் கால் தரையில் படுகிறது. எனவே, இவள் திருமகளும் இல்லை.

யார் இவள் என்று திகைக்கிறாள்.

பெண் என்றால், பார்த்தவுடன் ஒரு நல்ல மதிப்பு மனதில் வர வேண்டும்.

சீதையின் அழகை கம்பன் வர்ணித்த மாதிரி இன்னொரு கதாநாயகியை வேறு எந்த இலக்கிய  கர்த்தாவும் வர்ணித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

வர்ணனையின் உச்சம் தொடுவான் கம்பன், சீதையை வர்ணிக்கும் போது.

அது பற்றி தனியாக கொஞ்சம் சிந்திப்போம், பின்னொரு நாளில்.


சற்று இந்த சூழ்நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தனியான காடு.

சீதை ஒரு புறம். சூர்ப்பனகை மறுபுறம். நடுவில் இராமன்.

சூர்பனகையும், சீதையும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக சந்திக்கும் இடம்.

அந்த இடத்தில் கம்பன் நிறுத்துகிறான்.

அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் ?


1 comment:

  1. கம்பன் என்ன எண்ணி நிறுத்தினாரோ எனக்கு தெரியாது .ஆனால் நீங்கள் சுவை குன்றாது நல்ல ரசனையுடன் படிப்பவர்களின் ஈர்ப்பை இழுத்து வைக்கும்படியாக எழுதுகிறீர்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete